

க
ல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘சிங்கிளாக’ இருப்பதை பலரும் ‘பியர் பிரஷர்’ (கூட இருப்பவர்களால் வரும் அழுத்தம்) காரணமாக ஏதோ பெரிய குறையாக நினைப்பார்கள். நண்பர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது நாம் மட்டும் தனியாக இருக்கிறோமே என்று நித்தமும் சிந்திப்பார்கள். ஆனால், ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ, அதே அளவுக்கு சிங்கிளாக இருக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது தான் உண்மை.
கல்லூரிக்கு வந்தவுடனேயே, கட்டாயம் ரிலேஷின்ஷிப்புக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையின் கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் அடித்தளம் அமைப்பதற்கான நேரம் இதுதான். கேர்ள் ஃபிரண்டோ, பாய் ஃபிரண்டோ கிடைத்துவிட்டால், பிறகு அவர்களுடனே பெரும்பாலான நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். அவர்களின் விருப்பு வெறுப்புகளை உங்களுடையதாக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். ரிலேஷன்ஷிப்பில் நுழைந்தவுடன் ஏதாவது ஒருவகையில் சுயத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆனால், சிங்கிளாக இருக்கும்போது நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள்.
ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைவதற்கு முன்புவரை ‘ஒவ்வொரு ஃபிரண்டும் தேவை மச்சான்’ என்று நட்பைக் கொண்டாடியவர்கள்கூட ‘கமிட்’ ஆனவுடன் தலைகீழாக மாறிவிடுவார்கள். ஏதோ, உலகத்திலே அவர்தான் பிஸியான ஆள்போல சீன் போடுவார்கள். அதுவும் உங்களுக்கு ஒரே ஒரு ‘பெஸ்டீ’ இருந்து அவர் சமீபத்தில்தான் ‘கமீட்’ ஆனவர் என்றால், கஷ்டம்தான். ஆனால், இதற்கெல்லாம் அசரவே கூடாது. இப்படிக் கழன்றுகொண்டு போன ‘பெஸ்டீ’ அடுத்த வாரமே வந்து, ‘மச்சான் நான் தப்பு பண்ணிட்டேன். இந்த ரிலேஷன்ஷிப்பில் இருப்பதைவிட கொடுமை எதுவும் கிடையாது’ என்று கதறுவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பும் இருக்கிறது.
ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் சமூகத் தொடர்பை இழக்கவும் செய்கிறார்கள். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அவர்கள் செலவிடும் நேரம் திடீரென்று ஒரேடியாக குறைந்துவிடும். யதார்த்ததை மறந்து ஒருவித பாதுகாப்பின்மையுடன் நட்பு வட்டத்தில் வலம் வருவார்கள். சிங்கிளாக இருப்பவர்கள் கஷ்டப்பட்டு சமாளிக்க வேண்டியது, அவர்கள் நண்பர்களுக்கு ஆகும் ‘பிரேக் அப்’புக்குப் பிறகான நேரத்தைத்தான். ஃபிரண்டு வருத்தப்படும்போது எப்படிச் சமாதானம் சொல்லாமல் இருப்பது என்று நினைத்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்தால், நாம் தொலைந்தோம். ஒரு நாள் முழுக்க அசராமல் நம்மை பேசவைத்துவிட்டு, அடுத்த நாளே எந்தச் சுவடும் தெரியாமல் அவர்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். கேட்டால், ‘சாரி சொல்லியாச்சு, எவ்ரி திங் இஸ் ஃபைன்’ என்று கூலாக நம்மை நோகடித்துவிடுவார்கள்.
‘பியர் பிரஷ’ருக்கு ஆட்படாதவர்கள் தங்கள் லட்சியங்களையும் கனவுகளையும் அடைகிறார்கள் என்பதும் உண்மை. சிங்கிள் சிங்கங்கள் கவனச் சிதறலுக்கு ஆட்படமாட்டார்கள். அவர்கள் கல்லூரியில் வொர்க் ஷாப்ஸ், செமினார், கல்சுரல்ஸ் என அனைத்திலும் அசத்திக்கொண்டிருப்பார்கள். ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் எப்படியிருந்தாலும் ஒருவித கவனச் சிதறலுக்கு ஆட்படுவதைத் தவிர்க்க முடியாது. சிங்கிளாக இருக்கும்போது சமூகத்துடனும் கனவுகளுடனும் பயணம் செய்வது எளிமையாக இருக்கும்.
சிங்கிளாக இருப்பதற்காக வருத்தப்பட தேவையில்லை. எந்த மனத்தடையும் இல்லாமல் ‘சிங்கிள்வுட்’டை ஜாலியாகக் கொண்டாடலாம்.