திண்டாட்டமாகும் கொண்டாட்டங்கள்!

திண்டாட்டமாகும் கொண்டாட்டங்கள்!
Updated on
2 min read

இன்று பொழுதுபோக்கும் இளைஞர்களின் ரசனைகள் மாறியிருக்கின்றன. சினிமா, விளையாட்டு, நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி போன்றவை சற்று மாறி வருகின்றன. அதற்குப் பதிலாகப் பெரிய பெரிய மால்களில் கலை நிகழ்ச்சிகள், மைதானங்களில் இசை நிகழ்ச்சிகள், முக்கிய சாலைகளில் ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டங்கள் என ரசனைகள் மாறி வருகின்றன. இந்தக் கேளிக்கைகளுக்காக வாரந்தோறும் பொது இடங்களில் பெருந்திரளான இளைஞர்கள் உள்ளிட்ட கூட்டம் கூடுவதை அதிகமாகவே பார்க்க முடிகிறது. வார இறுதியிலோ, விடுமுறை நாளிளோ இப்படிக் கூட்டம் கூட்டமாய் படையெடுப்பவர்களுக்கு உண்மையிலேயே அந்தக் கொண்டாட்ட மனநிலை வாய்க்கிறதா?

அலைமோதும் இளைஞர்கள்: சில காலத்துக்கு முன்பு வரை கொண்டாட்டம் என்பது ஒரு குடும்பத்துக்குள்ளாகவோ, நண்பர் குழுக்களுக்குள்ளாகவோ மட்டுமே இருந்தது. தற்போது நிலைமையே வேறு! திரைப்படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சி என்றாலும், பிரபல இசையமைப்பாளரின் ‘கான்சர்ட்’ நிகழ்ச்சியானாலும் முகம் தெரியாத சாமானியருடன் சேர்ந்து கொண்டாடுவதுதான் இந்தக் காலத்து இளைஞர்களின் ஸ்டைல் என்றாகிவிட்டது. இதனால் பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சி எதுவானாலும் தங்களது வருகையைப் பதிவுசெய்யத் தவறுவதே இல்லை இன்றைய இளசுகள்.

அது மட்டுமா? இது ‘அப்டேட்டு’களின் காலம் வேறு. அன்றாடம் நடக்கும் எந்த விஷயங்களையும் கட்டாயம் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடத் துடிக்கிறது இளைய தலைமுறை. ஒளிப்படங்களாகவோ ரீல்ஸ்களாகவோ ‘வாழ்வியல் அப்டேட்’டுகளைப் பதிவிட முனையும் ‘இணைய’ கூட்டத்தை நம்பியே பெரும்பாலான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதனால் பொதுவாக எப்போதுமே பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

உறுதி செய்யப்படாத பாதுகாப்பு: பெருந்திரளைக் கூட்டும் இதுபோன்ற நிகழ்ச்சி களுக்குப் பின்னால் வியாபாரமயமாக்கப்பட்ட பெரிய ‘நெட்வொர்க்’ இயங்குகிறது என்பதை மறுக்க முடியாது. இளைஞர்கள் மத்தியில் நிலவும் இந்த ரசனை மோகம், கொண்டாட்ட மனநிலையைச் சாதகமாக்கிக் கொள்ளவும் துணிய வைக்கிறது. இதற்காக நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனங்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பல சமரசங்களைக்கூட செய்துகொள்கின்றன.

சமீபத்தில் சென்னையில் நடந்த பிரபல இசை நிகழ்ச்சியே அதற்குச் சான்று. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்தது, கூட்டம் கூடும் எனத் தெரிந்தும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காதது, மருத்துவ, அவசர உதவிக்குக்கூட முன்கூட்டியே தயார் நிலையில் எதையும் ஏற்பாடு செய்யாதது என அந்த நிகழ்ச்சி மேலாண்மை மிகக் கவனக் குறைவாகச் செயல்பட்டது அம்பலமானது.

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணமாக இரண்டாயிரம் ரூபாய் தொடங்கி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இது ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் அப்படி எத்தனை ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறிவித்தாலும் அதை வாங்க ஒரு பெரிய கூட்டமும் இளைஞர் பட்டாளமும் இருக்கிறது என்பதே கவலைக்குரிய விஷயம்.

எதுவாயினும் பல்லாயிரம் பேர் கூடும்போது அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளை, வாகன ஒழுங்கு முறையை ஒருங்கிணைப்புக் குழு உறுதி செய்ய வேண்டியது அவசியம். அப்படித் தவறும் பட்சத்தில் நிகழ்ச்சியைக் காண வந்திருப்பவர்கள் மட்டுமின்றி இந்தக் கொண்டாட்டம் எதற்கும் தொடர்பில்லாத பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாவதைத் தவிர்க்க முடியாது.

சுய கட்டுப்பாடு தேவை: பொதுக் கொண்டாட்டங்களில் வயது வித்தியாசமின்றி குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் பங்கேற்கிறார்கள். இதுபோன்ற இடங்களில் பெண்களிடம் அத்துமீறிய செயல்கள் அரங்கேறியதும் முகம் சுளிக்க வைக்கிறது.

அண்மையில் மதுரையில் சித்திரைத் திருவிழாவுக்குக் கூடியதுபோல மக்கள் திரள் கூடிய ஒரு பொது நிகழ்ச்சியில் நடைபெற்ற நிகழ்வுகளும் இன்னோரு தவறான உதாரணமாகியிருக்கிறது. அந்த அசாதாரண சூழலை பயன்படுத்திக் கொண்ட சில ஆண்கள், பெண்களிடம் பாலியல் சேட்டைகளை நிகழ்த்தியுள்ளனர். மேலும் கூச்சல், குழப்பம், மோதலில் ஈடுபட்டு மக்களுக்கு இடையூறாகவும் இருந்துள்ளனர்.

கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் நடைபெறும் இதுபோன்ற முகம் சுளிக்க வைக்கும் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. பொது நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையைத் தாண்டி சில பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதுதான். என்றாலும் இதுபோன்ற சூழலில்தான் சுய கட்டுப்பாடு மிகவும் தேவை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எவ்வளவு தேவையோ, அதைவிட தனி மனித ஒழுக்கத்தை அனைவரும் கடைப்பிடிப்பது அழுத்தமாக மனதில் பதிய வைக்க வேண்டிய பண்பாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in