

க
ர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குள் காவிரி பாய்ந்துவரும் (இப்போது அல்ல) ஒகேனக்கல்லின் செங்குத்தான பாறைகளுக்கு இடையே நானும் ‘வேர்கள்’ ராமலிங்கமும் ஒரு முறை பரிசலில் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பாய்ந்துவரும் தண்ணீருக்கு எதிராகப் பரிசல்காரர் துடுப்புப் போட மெல்லமெல்லச் சுழன்று நகர்ந்துகொண்டிருந்தது எங்களுடைய பரிசல்.
எங்களுக்கு முன்னே நகர்ந்துகொண்டிருந்த பரிசலில் இருந்த பெரியவர் கைகளைத் தூக்கி, உயர்ந்து நின்ற செங்குத்தான பாறை மீது வரிசையாக அமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து, ‘குதி’ என்றார். சுழன்று நகர்ந்துகொண்டிருக்கும் பரிசலில் அமர்ந்த நிலையில், கையில் வைத்திருந்த பென்டாக்ஸ் கே 1000 ஃபிலிம் கேமராவைச் சட்டென உயர்த்தி குதிக்கும் சிறுவனை இமைப்பொழுதில் செய்த பதிவுதான் ‘காவிரியில் குதிக்கும் சிறுவன்’ என்ற படம்.
ஐந்து ரூபாய் கொடுத்தால் 60 அடி உயர செங்குத்துப் பாறை மீதிருந்து ஓடும் காவிரியில் குதித்து மூழ்கி, பிறகு நீந்திப் பரிசல் அருகே வந்து நனைந்த உடலுடன் ஈரக்கையை நீட்டி ஐந்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் மேலிருந்து குதிக்கத் திரும்பிவிடுகிறார்கள். தண்ணீர் வடியும் கால் சட்டையோடு செங்குத்தான பாறையைப் பிடித்து வழுக்காமல் சரசரவென்று ஏறி, உச்சிக்குச் சென்று அடுத்த கையசைப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஒரு சிறுவனுக்கு வாய்ப்புக் கொடுத்தால், மற்ற சிறுவர்கள் ஏமாற்றமடைந்து விடுவார்கள் என்று அனைத்துச் சிறுவர்களையும் ஒருவர் பின் ஒருவராக குதிக்கச் சொல்லி காசு கொடுத்தது ஒரு குடும்பம். பள்ளிக்குச் செல்லும் இச்சிறுவர்கள் வறுமையின் காரணமாகத் தண்ணீருக்குள் குதிக்கிறார்களா அல்லது வேடிக்கை விளையாட்டுக்காக இப்படிச் செய்கிறார்களா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இது ஒரு ஆபத்தான சாகசம்தான்.
நான் அடிக்கடி சென்றுள்ள வேதாரண்யத்தில் நீர் நிறைந்த ஓடை ஒன்றின் அருகே சிறு மரம் ஒன்று ஓடைப் பக்கம் தலை சாய்ந்த நிலையில் நின்றது. அதன் மீது பள்ளிச் சிறுவர்கள் ஏறி ஓடைக்குள் குதிப்பதும் குதூகலிப்பதும், மீண்டும் மரத்தின் மீது ஏறித் தொங்கிக்கொண்டும் மகிழ்ந்திருந்த காட்சியைப் பதிவுசெய்தபோது மனதில் தனி நிறைவு உண்டானது. இன்றைக்கும் அப்படத்தைப் பார்க்கும்போது மனதில் தொற்றிக்கொள்கிறது மகிழ்ச்சி!
நீருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் இடையேயான உறவு ஆத்மார்த்தமானது.
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com