11 ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்: யூத்களின் 11 டிரெண்டிங்

11 ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்: யூத்களின் 11 டிரெண்டிங்
Updated on
5 min read

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்காக இருக்கும் விஷயங்கள், செயல்களைப் பற்றி பார்ப்போம்.

உலவும் ஃபுட்டிகள்: இன்று இளைஞர்களிடையே ஃபுட்டிகள் என்ற வார்த்தை அதிகம் புழங்கிக் கொண்டிருக் கிறது. எங்காவது செல்லும்போது, அந்த இடத்தில் கிடைக்கும் விதவிதமான உணவைச் சாப்பிட்டு வந்தது அந்தக் காலமாகிவிட்டது. இப்போது விரும்பிய உணவு எங்குக் கிடைத்தாலும், அதற்காகவே அங்குச் சென்று அந்த உணவைச் சாப்பிட்டு, சிலாகித்து, அதைப் பற்றிச் சமூக வலைதளங்களில் எழுதித் தீர்ப்பதுதான் இன்றைய ஃபுட்டிகளுக்கான தகுதியே. இதை வைத்தே ஊர் ஊருக்குப் பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் முதல் சாலையோரக் கையேந்தி பவன் வரை ஃபுட்டிகளின் கண்ணில் படாத ஹோட்டல்களே இல்லை.

இப்படிச் செல்லும்போது படம் பிடித்து அந்தக் காட்சிகளைக் காணொளிகளாக யூடியூபிலும் பதிவேற்றிச் சேவை செய்வதுதான் ஃபுட்டிகளுக்கான லட்சணங்கள். அதன் காரணமாகச் சமூக வலைதளங்களில் ஃபுட்டிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால், பெரும்பாலான ஃபுட்டிகள் உண்மையைப் பேசுவதில்லை என்பதுதான் சோகம்.

இணையத்தில் காதல்: இணையம் அறிமுகமான காலம் தொட்டே, சாட்டிங் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சாட்டிங் மூலம் அன்று காதல் வலை வீசியவர்கள் எல்லாம் இன்று நாற்பது வயதைக் கடந்திருப்பார்கள். ஆனால், அன்று சாட்டிங்கில் வலை வீசுவதில் இருந்த சிக்கல்கள் எல்லாம் இன்றைய தலைமுறைக்கு இல்லை.

ஏனெனனில், அதற்கென்று டேட்டிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கொட்டிக்கிடக்கின்றன. இந்த டேட்டிங் செயலிகளில் ஆபத்து இருக்கிறது என்றாலும், இதைப் பயன்படுத்திப் பார்ப்பதில் இன்றைய இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கவே செய்கிறது. அதன் காரணமாக டேட்டிங் செயலிகள் இன்று இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகின்றன.

டாட்டூ கலாச்சாரம்: ஒரு காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மருதாணியைக் கொண்டு கைகளை அலங்காரம் செய்துகொள்ளா தவர்களே கிடையாது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் அது டாட்டூவாக உருவெடுத்திருக்கிறது.

முன்புகைகளில் மட்டும் டாட்டூ குத்திக் கொண்டிருந்த இளைஞர்கள், இன்று உடம்பு முழுவதுமே டாட்டூ குத்திக்கொள்ளும் அளவுக்கு மோகம் கூடிவிட்டது. கழுத்து, கை, நெஞ்சுப் பகுதி, கால், தோள்பட்டை என உடலின் பெரும்பாலான இடங்களில் டாட்டூ குத்திக் கொள்வது இன்றைய ஃபேஷன். அழகிற்காக டாட்டூ குத்திக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வரும் வேளையில், அதிலுள்ள ஆபத்தையும் காதில் வாங்கிப் போட்டுக்கொள்வது நல்லது.

ரெடி, ஸ்டார்ட்: இன்றைய இளைஞர்கள் 18 வயதைத் தொடுவதற்கு முன்பே ‘இரும்புக் குதிரை’யான பைக் இருப்பதை கௌரவமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். பெற்றோரை எப்படியாவது நச்சரித்துப் பலரும் பைக் வாங்கிவிடுகிறார்கள். அவற்றில் நண்பர்களை உட்கார வைத்துக் கொண்டு நெரிசல் மிகுந்த சாலைகளில் அதிவேகத்திலும் பாம்பு போல் வளைந்து வளைந்து சென்று மற்ற வாகன ஓட்டிகளைப் பயமுறுத்துவதையும் பல இளைஞர்கள் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

இன்னும் சில இளைஞர்கள் சாகசப் பயணம் என்ற பெயரில் ஆபத்தாக பைக்குகளை இயக்கி யூடியூபில் பதிவேற்றி இளம் வயதினருக்குத் தவறாகவும் வழிகாட்டுகின்றனர். அதுபோன்ற இளைஞர்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவது அவர்களுக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கும் நல்லது.

ரீல்ஸ் வெறியர்கள்: எப்போதும் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் கண்டதையும் படம் பிடித்து அவற்றைச் சமூக வலைதளங்களில் காணொளிகளாக இறக்கிவிட டிக்டாக் என்ற செயலி உதவியது. அதைத் தடை செய்ததும் இளைய சமுதாயம் உருப்பட்டுவிடும் என்று எண்ணிய வேளையில், ஃபேஸ்புக் ரீல்ஸை அறிமுகப்படுத்தி, புண்பட்ட மனதைத் தேற்றியது. விளைவு, இன்று குட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை குடும்பம் குடும்பாக ரீல்ஸூக்கு அடிமையாகும் அளவுக்கு மாறிவிட்டார்கள்.

இந்த ரீல்ஸ் மோகம் சாமானியர்களை மட்டுமல்ல, பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அதே வேளையில் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்பட்ட ரீல்ஸ், தனித்திறமையை வெளிப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை. ரீல்ஸ் பதிவிடுவதைத் தனி வேலையாகவே பார்த்து வரும் இளைஞர்கள் தங்களை ’இன்ஃப்ளூயென்சர்’ என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்!

உக்கிரமாகும் ரசிகப் பட்டாளங்கள்

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரிய நடிகர்களின் முதல் நாள் காட்சி என்றால், காலை 8 மணிக்குத் தொடங்கும். அந்தக் காட்சியைப் பார்க்க சென்றாலே, வீட்டில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். ஆனால், இன்றோ விடியற்காலை 4 மணிக்கே முதல் நாள் காட்சியைத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த முதல் காட்சியைப் பார்க்காவிட்டால் ’குற்றம்’ ஆகிவிடும் என்பதால், எப்படியாவது அக்காட்சியைப் பார்க்க இரவு முழுவதுமே தவமாய்த் தவம் கிடக்கிறார்கள் இந்தக் கால சினிமா ரசிகர்கள்.

ஒவ்வொரு உச்ச நட்சத்திரத்தின் திரைப்படம் வெளியாகும்போதும் முதல் நாள் முதல் காட்சியின்போதும் உக்கிரமாகிவிடுகிறது இளைஞர் பட்டாளம். காலை 4 மணி காட்சிக்கு இரவு 1 மணி முதலே ஆட்டம், பாட்டம் என அதகளப்படுத்துகிறார்கள். சில நேரம் பேனர் கிழிப்பு, உயிரிழப்பு போன்று விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தாலும், முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் மட்டும் மாறுவதில்லை என்பது வேதனைதான்.

ஆள் பாதி ஃபேஷன் மீதி: ஆள் பாதி ஆடை பாதி என்ற அளவில்தான் அந்தக் கால ஃபேஷன்கள் இருந்தன. ஆனால், இன்றோ உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இளைய தலைமுறையினரை ஃபேஷன் ஆட்டிப்படைக்கிறது. ’முள்ளம்பன்றி’ போல சிகை அலங்காரம் செய்வது தொடங்கி, கடுக்கன் அணிவது, கிழிந்த பேண்டை அணிவது வரை ஃபேஷன் அல்லோலகல்லோலப்படுகிறது.

இதில், ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் கிடையாது. குறிப்பாக 2கே கிட்ஸ்களின் ரசனையோ இன்னும் வித்தியாசமானது. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டையும் விரும்புகிறார்கள், கொஞ்சம் பின்னோக்கிச் சென்று ’பெல் பாட்டம்’ ஸ்டைலையும் விரும்புகிறார்கள். பெரும்பாலும் மாடர்னை அரவணைத்துக்கொண்டு அவ்வப்போது பாரம்பரிய ஆடைகளுக்கும் மாறிவிடுகிறார்கள். பொதுவாக ஃபேஷனை அப்டேட் செய்துகொள்ள அதிகம் மெனக்கெடுகிறது இந்தத் தலைமுறை!

சிக்ஸ்பேக் அலப்பறைகள்: கையில் சாம்பார் வாளியைத் தூக்கிக் கொண்டு நடப்பது போலவே நடந்தால், அவர் ஜிம்முக்குப் போகிறார் என்று அர்த்தம். கையில் அலைபேசி சகிதமாக சுற்றும் இந்த காலத்து இளைஞர் பட்டாளம், வம்படியாக ’ஜிம்’முக்கு சென்று வொர்க்-அவுட் செய்வதையும் ஹாபியாக வைத்திருக்கிறது. அதுவும் கும்பலாக நண்பர்கள் சகிதம் சேர்ந்து செல்வதுதான் இதில் சிறப்பே.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் காலடியை எடுத்து வைத்ததுமே டீன்-ஏஜ் இளசுகள் ஜிம்மில் காலை வைத்துவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார்கள். சிக்ஸ்பேக் பார்ட்டிகள் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்வதில் காட்டும் அக்கறை இருக்கே, அது வேற லெவல்தான். எனிலும் ஆரோக்கியமான உடல்மீது அக்கறை கொண்டவராக இருந்தாலும், அதீத வொர்க்-அவுட் பயிற்சியும் உடலுக்கு பாதிப்பு என்பதை இவர்கள் புரிந்துக்கொண்டால் நல்லது.

‘மீம்’சை அரசன்கள்: ‘மீம்ஸ் இன்றி இயங்காது இணைய உலகு’ எனச் சொல்லும் அளவுக்கு எங்கும் மீம் எதிலும் மீம் என்பதுதான் இணையத்தில் இயங்கும் இளம் நெட்டிசன்களின் கொள்கை. சமூக வலைதளங்களைத் திறந்தால் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் மீம்ஸ்களை வாரி வழங்குவது இந்தக் கொள்கை கணவான்கள்தான்.

தகவல், செய்தி, இரங்கல், கொண்டாட்டம் என எதுவாயினும் மீம்ஸ் பதிவிடும் பழக்கம் இன்றைய இளைஞர்களுக்கு வழக்கமாகிவிட்டது. அது அதிகப் பார்வையாளர்களைச் சென்றடைகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் மீம்ஸ் கிரியேட்டர்களாக இணைய உலகை ஆக்கிரமித்துள்ளனர். அதன் நீட்சியாக மீம்ஸ் காணொளிகளும் இணையத்தில் வைரலாவது தொடர்கதையாக நிகழ்கிறது.

ஏசி மாலில் ஓசி ரவுண்ட்: பார்க், பீச் என நண்பர்களோடு சேர்ந்து அரட்டையடிக்கச் சென்றதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. பெருநகரங்களில் முழுக்க முழுக்க ஏ.சி.யில் இயங்கும் மிகப் பெரிய மால்களில் ஓசியாக ரவுண்ட் அடித்துப் பொழுதுபோக்குவதுதான் இன்றைய இளசுகளின் ஹாபி. அதற்கேற்ப வருடத்தில் எந்நேரமும் தள்ளுபடி, சலுகை என விளம்பரப்படுத்தி இளைஞர்களை ஈர்க்கும் ’மால் ஷாப்பிங்’கைப் பெரும்பாலும் விரும்பவது இளைஞர்களே.

இது ஒரு புறம் இருக்க, சினிமா, உணவு, கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் மால் எனும் ஒரே குடைக்குள் கிடைப்பதால், அதற்காகவே மால்களை நாடி வருவோரும் உண்டு. இதனால் வார இறுதி நாள்கள் மட்டுமல்ல வார நாள்களிலும் மக்கள் கூட்டத்தால் மால்கள் நிரம்பி வழிகின்றன.

விளையாடக் காசு தரும் காலம்: வியர்க்க விறுவிறுக்கத் திறந்தவெளி மைதானங்களில் விளையாடியது எல்லாம் ஒரு காலம். இன்றைய இளைய தலைமுறை ஷாப்பிங், சினிமா, உணவு போன்றவற்றுக்குச் செலவு செய்வதைத் தாண்டி விளையாடவும் ஒரு பெரும் தொகையைச் செலவு செய்கிறது. இந்தத் தலைமுறை ‘டர்ஃப்’ எனப்படும் செயற்கை புல் தரையில் விளையாடும் விளையாட்டுகளின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறது. இந்த வசதி பெரும்பாலும் பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் உள்ளரங்கமாகும்.

இந்த ‘டர்ஃப்’ தரையில் கிரிக்கெட், கால்பந்து, பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்துக்கு விளையாடுகிறது இளைஞர்கள் பட்டாளம். இதற்காகப் பணம் கட்ட வேண்டும் என்பதுதான் கூடுதல் சங்கதி. சாதாரண இடத்தில் விளையாடுவது போல் அல்லாமல், இந்த டர்ஃப் மைதானங்கள் தரும் புது அனுபவத்தை அதிகம் தேடிச் செல்கின்றனர் இளைஞர்கள்.

- தொகுப்பு: மிது கார்த்தி, ராகா

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in