Published : 08 Dec 2017 11:58 am

Updated : 08 Dec 2017 18:17 pm

 

Published : 08 Dec 2017 11:58 AM
Last Updated : 08 Dec 2017 06:17 PM

எஸ்.எம்.எஸ். 25 - எப்போதும் ராஜா!

25

எஸ்.எம்.எஸ். சேவை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது வாட்ஸ்அப் யுகமாக இருந்தாலும், எஸ்.எம்.எஸ். சேவையின் முக்கியத்துவம் இன்னமும் குறையவில்லை. ஸ்மார்ட்போன் தலைமுறையினருக்கு அது சற்று அந்நியமாக இருந்தாலும்கூட, வளரும் நாடுகளிலும் கிராமப்புறப் பகுதிகளிலும் இன்னமும் தகவல் தொடர்புக்கான எளிய வழியாக எஸ்.எம்.எஸ். இருக்கிறது. இன்றைய இமோஜிகளுக்கும் சித்திர எழுத்துக்களுக்கும் இந்தக் குறுஞ்செய்தி சேவைதான் முன்னோடி. எஸ்.எம்.எஸ். சேவை வெள்ளி விழாவைக் கொண்டாடும் நிலையில், அதன் வரலாற்றையும் வளர்ச்சியையும் திரும்பிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

அந்த நாள் எஸ்.எம்.எஸ்.


1992 டிசம்பர் 3 அன்றுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்பப்பட்டது. அது ஒருவழிச் செய்தி என்பது மட்டுமல்ல, கம்ப்யூட்டரில் இருந்தே அந்த எஸ்.எம்.எஸ். அனுப்பிவைக்கப்பட்டது என்பதும் ஆச்சர்யமான விஷயம். அப்போது வோடபோன் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த நீல் பாப்வொர்த் என்பவர்தான் தன்னுடைய சக பொறியாளரான ரிச்சர்டு ஜார்விஸுக்கு உலகின் முதல் எஸ்.எம்.எஸ். செய்தியை அனுப்பினார். ஜார்விஸ் வைத்திருந்த ஆர்பிட் போனில் அதைப் பெற்றுக்கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ எனும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே அந்தச் செய்தியில் இருந்தன.

சரித்திரப் புகழ் பெற்ற அந்தச் செய்திக்கு ஜார்விஸ் உடனே பதில் அனுப்பவில்லை. ஏனெனில், அப்போது செல்போன்களில் அந்த வசதி இல்லை. எஸ்.எம்.எஸ். வடிவில் செய்திகளை மட்டுமே பெற முடிந்தது. முதல் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பிய நீல் பார்ப்வொர்த், வெள்ளி விழா பரபரப்புக்கு நடுவே இந்த நிகழ்வை நினைவுகூரும்போது, “1992-ல் எம்.எம்.எஸ். அனுப்பிய போது டெக்ஸ்ட் செய்வது இந்த அளவுக்குப் பிரபலமாகும் என்றோ இமோஜிகளைப் பயன்படுத்தும் மெசேஜிங் சேவைகளுக்கு வழிவகுக்கும் என்றோ நினைக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தன் பிள்ளைகளிடமே அண்மையில்தான், தான் முதல் எஸ்.எம்.எஸ். அனுப்பிய பெருமையைப் பற்றிக் கூறியதாக கூறும் பாப்வொர்த், “அந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி மொபைல் வரலாற்றில் முக்கிய தருணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் அந்த வாழ்த்துச் செய்தியை அவர் தற்போதைய இமோஜியுடன் சேர்த்து அனுப்பியிருக்கிறார்.

எஸ்.எம்.எஸ். பிரம்மாக்கள்

முதல் எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்பியவர் பாப்வொர்த் என்றாலும், அதன் பிரம்மா எனும் பெருமைக்கு உரியவர் பின்லாந்தைச் சேர்ந்த பொறியாளரான மேட்டி மக்கோனென் (Matti Makkonen) என்பவர்தான். 1984-ல் இவர்தான் முதன் முதலில் செல்லுலார் வலைப்பின்னல் வழியே செய்திகளை அனுப்பிவைப்பதற்கான கருத்தாக்கத்தை முன்வைத்தார். ஆனால், மக்கோனென் ஒருபோதும் தன்னை எஸ்.எம்.எஸ். கண்டுபிடிப்பாளர் என மார்தட்டிக்கொண்டதில்லை. பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லாத மெக்கோனென், சில ஆண்டுகளுக்கு முன்பு அபூர்வமாக அளித்த பேட்டியில், ‘இது ஒரு கூட்டுக் கண்டுபிடிப்பு’ என்று கூறியிருக்கிறார். அது உண்மைதான். எம்.எம்.எஸ்.-ன் அடிநாதமாக விளங்கும் 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாட்டை முதலில் முன்வைத்தவர்கள் ஜெர்மனி பொறியாளர்களான பிரிதெல்ம் ஹில்லேபிராண்ட் மற்றும் பெர்னார்டு ஹிலேபார்ட் (Friedhelm Hillebrand and Bernard Ghillebaert ).

1993-ல் நோக்கியா நிறுவனம் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி பெறும் வசதியை அறிமுகம் செய்தது. அப்போது விற்பனை செய்யப்பட்ட நோக்கியா போன்களில் குறுஞ்செய்தி வருகையை உணர்த்தும் பீப் ஒலி மிகவும் பிரபலம். அதன் பிறகு மெல்ல குறுஞ்செய்தி பிரபலமானது. 1999-ல் தான் பல்வேறு செல்போன் சேவைகளுக்கு இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி அறிமுகமாகி இந்த சேவை பரவலானது.

சுருக்கெழுத்துகள்

எஸ்.எம்.எஸ். செய்திக்கு 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாடு இருந்தாலும், அதுவே பின்னர் நவீன யுகத்துக்கான புதிய சுருக்கெழுத்து மொழியைக் கொண்டுவந்தது. வார்த்தை சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதற்காக, ஆங்கில எழுத்துகளைச் சுருக்கி பயன்படுத்தும் வழக்கமும் அறிமுகமானது. இன்று இவை பலவகையான இமோஜிகளாகப் பரிணமித்துள்ளன.

சுருக்கெழுத்து மூலம் மொழிப் பயன்பாட்டில் புதுமைகளைக் கொண்டுவந்ததைவிட, தகவல் பரிமாற்றத்தில் இவை ஆற்றும் பங்கு போற்றத்தக்கது. குறிப்பாகப் பேரிடர் காலங்களில் எஸ்.எம்.எஸ். செய்தி மூலம் மீட்புப் பணிகள், நிவாரணப்பணிகள், கிராமப் புறங்களில் மருத்துவ சேவைத் தகவல்கள், அரசு திட்டத் தகவல்களை மக்களிடம் கொண்டுசெல்ல உதவுகிறது. உலகின் பல பகுதிகளில் மீனவர்களுக்கு மீன் விலையை செல்போனில் தெரிவிப்பது, விவசாயத் தகவல்களைக் கொண்டுசேர்க்கவும் எஸ்.எம்.எஸ். வசதியே கைகொடுத்திருக்கிறது. இப்படி எஸ்.எம்.எஸ். சார்ந்த பல முன்னோடி முயற்சிகளைக் கூறலாம்.

பல்க் மெசேஜிங் வசதி ஒரு பக்கம் மார்க்கெட்டிங் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டாலும், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமப்புறப் பகுதிகளில் செய்திகளைக் கொண்டுசேர்ப்பதற்கான இதழியல் வாகனமாகவும் எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. இவ்வளவு ஏன், எஸ்.எம்.எஸ். பிரபலமாகத் தொடங்கிய காலத்தில் எஸ்.எம்.எஸ். கதைகள், நாவல்கள்கூடப் புழக்கத்துக்கு வந்தன. குறிப்பாக ஜப்பானில் இந்த வகை நாவல்கள் மிகப் பிரபலமாக இருந்தன.

இவற்றை எல்லாம் பழங்கதைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. சாதாரன செல்போன்கள் புழக்கத்தில் இருக்கும் பல பகுதிகளில் இன்னமும் எஸ்.எம்.எஸ். தான் ராஜா. அங்கெல்லாம் தகவல் பரிமாற்றத்துக்கு இதைவிட்டால் வேறு சிறந்த வழியில்லை. வளரும் நாடுகளில் இப்போதும்கூட எஸ்.எம்.எஸ். சார்ந்த புதுமையான சேவைகளை உருவாக்கி வருகின்றனர். அதனால்தான் ட்விட்டர் , வாட்ஸ்அப் எனப் புதுப்புது சேவைகள் பல வந்தாலும், எஸ்.எம்.எஸ். சேவைக்கான தேவை இன்னும் குறையாமலேயே இருக்கிறது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

environment-and-caste

சூழலும் சாதியும்

இணைப்பிதழ்கள்

More From this Author

x