நளி நாட்டியம் 15: சும்மா சிரிக்கத்தான் | பியானோக் கட்டைச் சாலைகள்

நளி நாட்டியம் 15: சும்மா சிரிக்கத்தான் | பியானோக் கட்டைச் சாலைகள்
Updated on
2 min read

புத்தேரியிலிருந்து இறச்சகுளம் செல்லும் சாலையில் மொபட் ஒன்றில் போய்க் கொண்டிருந்த கணேசன் என்பவர் திடீரெனக் கழுத்தளவு சகதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் பயணித்தது சாலையின் அருகில் குடிநீர்க் குழாய்ப் பதித்து மூடப்பட்ட ஆழ்துளை அண்டர்கிரவுண்ட் சாலையில் என்பதைத் தயைகூர்ந்து நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

இப்படியாக சாமானியமான ஒரு மனிதனை விண்வெளிக்காரர் போன்றதொரு பாவனையில் ஒரு பாதாளத்தானாக மாற்ற வேண்டி அவசியம் பொதுப்பணித் துறைக்கும் நெடுஞ்சாலைத் துறைக்கும் வந்ததன் நோக்கம் என்னவாக இருக்கும்?

மழைக் காலங்களில் அணைக்கட்டுகளிலிருந்து திடீர் தண்ணீர்த் திறப்பு நேரத்தில் வெள்ளப் பாதிப்பு அபாயம் உள்ள கரையோரவாசிகளை அப்புறப்படுத்துவதைப்போல இப்போதெல்லாம் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது. ‘ரிமோட் அட்டாக்’குகள் என்றழைக்கப்படும் சாலைகளில் பெயர்ந்து கிடக்கும் சரளைக் கற்களால் தாக்கப்படுதல்தான் அது. எல்லா விபத்துக்களுக்கும் ஏதேனும் ஒரு வலுவான காரணம் இருக்கும்.

ஆனால், சாலையில் கிடக்கும் ஒரு கல் ஏதோவொரு வாகனத்துக்கோ அதன் சக்கரங்களுக்கோ குறைந்தபட்சம் அந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுநருக்கோகூடத் தெரியாமல் சக்கரத்தின் அடியில் பட்டு, அழுத்தவிசை பீடித்து, அந்த விசையிலிருந்து விடுபட்டு, வேகமாகப் பறந்து ‘சிவனே’ என்று சாலையில் நடந்துபோகும் ஆத்துமாக்களின் கரண்டைக் காலில் மோதி இசை எழுப்புவதை எந்த ராகத்தின் பட்டியலில் சேர்த்துவிட முடியும்!

பூமித்தாயின் பூக்கொண்டை: தார்ச் சாலைகள் அமைக்கும்போது ஏற்கெனவே அங்கிருந்த சாலையைப் பெயர்த்து எடுத்துவிட்டு அந்த இடத்தில் புதிய சாலையை அமைப்பதுதான் முறை. ஆனால், சாலை அமைக்க டெண்டர்கள் எடுக்கும் பிரகஸ்பதிமார் பழைய சாலைப் பெயர்ப்பு எனும் வேலையற்ற வேலையைச் செய்வதற்கான கூலியை மிச்சப்படுத்துவதற்காக, மேக்கப் ஆசாமிகள் கல்யாணப் பெண்ணின் முகத்தில் ஐந்தாவது கோட்டிங் பவுடர் போடுவதைப் போல சாலைகளின் மீது இன்னொரு சாலையை அமைத்துச் சோலியை முடித்துவிடுகிறார்கள்.

இன்னும் கொஞ்ச காலம் கழித்து சந்திரயான் ஐம்பத்தி மூன்றை இஸ்ரோ சார்மார்கள் விண்ணுக்கு ஏவி விண்வெளியில் இருந்து குனிந்து பார்த்தால் இந்தியா மாத்திரம் பூமித் தாயின் கொண்டையைப் போல வீங்கிக் காணப்படுவதற்கு இந்தச் சாலை மேல் சாலை அமைப்புத் திட்டங்கள் வெகுவாகப் பயனளிக்கலாம்.

இதுவும்கூட ஒருவிதப்பெருமைதான். சுனாமி போன்ற இயற்கைச் சீரழிவுகள் வந்தால், அப்போது இந்தியா மாத்திரம் கடல் மட்டத்திலிருந்து உயரம் கூடியிருக்கும் நிலையில் தேசம் கூண்டோடு பாதுகாக்கப்படுமல்லவா? இதைவிடவா ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்துவிடப் போகிறது?

குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய கோபாலன் என்பவர் தங்களுடைய வீட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். கடைசியாக இந்தியா வந்தபோது தெருவிலிருந்து மூன்று படிகள் மேல் நோக்கி ஏறித் தங்களுடைய காம்பவுண்டில் கால் வைத்தவருக்கு இப்போது ஆறு படிகள் கீழ்நோக்கி அமைத்து இறங்கித்தான் தங்களுடைய தரவாட்டில் கால் பதிக்க வேண்டிய துர்பாக்கியச் சூழல்! இதைத் தெருப்பெருக்கம் என்றதொரு தொனி வாயிலாக இலக்கியத் தரத்தில் அழைக்கலாம் அல்லது பொருளாதாரம் சார்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி சாலை வீக்கம் என்று அழைக்கலாம்.

பளிங்குச் சாலையும் பரலோகமும்: உலகிலேயே மழைநீர்ச் சேமிப்பைத் தடுப்பது தார்ச் சாலைகள் மாத்திரமே என்று கண்டுபிடித்தது நம்முடைய தேசத்து விஞ்ஞானிகள்தாம். சாலைகளைத் தவிர்த்து வேறு எங்கும் மழைநீர் இறங்காது என்ற விந்தையும் அவர்களுடைய கண்டுபிடிப்புதான்.

ஆகவே சாலைகளுமே மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ’இண்டர்லாக் பேவர்கள்’ என்னும் சாலையின் பியானோக் கட்டைகள். இவற்றைப் பதித்துப் பிரயாணிகளைப் பிரேதங்களாக்கும் அசத்தலான திட்டம்.

ஆரல்வாய்மொழி அருகே திருநெல்வேலி நெடுஞ்சாலையில் பேவர்கள் அமைக்கப்பட்ட நாளில் வாகன ஓட்டிகள் வரிசையாகச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வளைய வந்ததை நீங்கள் கண்டிருக்கலாம். மழை நாளில் அந்தச் சாலையை நீங்கள் ஒரு பிளாக் தண்டர் தீம் பார்க்காகப் பாவித்தால் எண்டர்டெயின்மெண்ட் நிச்சயம்.

வேகமாக வந்த சுந்தரம் என்பவர் சறுக்கிப் போய் ஒரு லாரியின் அடியில் படுத்திருந்தார். ’அவர் வந்த வண்டியை எங்கே?’ என்று தேடினால் அதுவும் ஜாலியாகக்கூடப் பத்தடிகள் சறுக்கிப் போய் ஓடையொன்றில் முங்கிக் குளித்து மகிழ்ந்திருந்ததைக் கண்டார்கள்.

’இன்டர்லாக் பேவர்’களால் ஒரு பிரயோஜனம் என்னவென்று கேட்டால், பரமாரிப்பு, தோண்டல் மூடல்களை எளிதாகக் கையாளலாம் என்று சொன்னார்கள். ஒரு முறை பதித்ததை எடுத்துவிட்டு மீண்டும் பேவர்களை அதே பழைய டிசைனில் கொண்டு வராவிட்டால் அந்தச் சாலையில் நீங்கள் பயணிக்கும்போது பல்செட் மாட்டிக்கொண்டு பக்கோடா தின்ற பாட்டியுடைய வாயின் அதிர்வுகள்தான் உங்களுக்கும் எழும்.

அதிலும் உங்கள் வாகனச் சக்கரங்கள் வழுக்கி விழுந்து நீங்கள் டாக்டரைக் கண்டு சிரிக்கும் இனிய சூழல் உருவாக வாய்ப்பிருக்கிறது. தாஜ்மஹாலைக் கட்டின கொத்தனார் ஏதோவொரு ஓட்டையை எங்கோ போட்டுவிட்டுப் போன கதையைப் போலவே இந்த பேவர்களில் ஏதாவதொன்றை நீங்கள் உருவிவிட்டீர்களெனில் மொத்தச் சாலையும் குளோஸ்.

சாலையை விடுங்கள்! ஒரு நள்ளிரவில் திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையில் இறங்கின விமானத்திலிருந்து ’பொத்தடீர்’ என்ற சப்தத்தைக் கேட்டு தூக்கத்திலிருந்து பதறி எழுந்த பயணி ஒருவர் கேட்ட முதல் கேள்வி இதுதான், “வானத்துல ஏர்பாக்கெட்ல இருந்து இப்புடியெல்லாம் சத்தம் வருகா?”.

அதற்கு அவருக்கு வழங்கப்பட்ட பதிலால் அவர் மூர்ச்சையானார், “நாம லேண்ட் ஆயாச்சி சார்! ரன் வேல ஒரு பெரிய குழி கிடந்துருக்கு! பைலட் அதைச் சரியாக் கவனிக்கலை!” என்பதுதான் அந்த உலகப் பிரசித்தி பெற்ற பதில். இந்தக் கட்டுரையைப் போலவே அவர் விமானம் இறங்கியதும் அதுதான் கடைசி! அதற்குப் பின் ஏறவேயில்லை.

(நிறைவடைந்தது)

- writerprabhudharmaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in