

உ
டல்நலத்தின் மீதும், சுற்றுச்சூழல் மீதும் அக்கறையுள்ளவர்கள் சைக்கிளிங் செல்வதை இன்று அதிகமாகவே பார்க்க முடிகிறது. ஆனாலும், முன்பு இருந்ததுபோல சைக்கிள் மீதான ஈர்ப்பு குறைவாக உள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என அரியலூரில் மரத்தொழிலகம் நடத்தும் சகோதரர்கள் யோசித்திருக்கிறார்கள். அதன் விளைவாக மர சைக்கிளை உருவாக்கி, அரியலூரில் கவனம் ஈர்த்துவருகிறார்கள்.
திருமானூர் அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பாஸ்கர், திருநாவுக்கரசு, ராஜா ஆகியோர்தான் மர சைக்கிள் உருவாகக் காரணமான சூத்திரதாரிகள். மரத் தொழிலகம் நடத்திவரும் இவர்களுக்குத் திடீரென மரத்திலான சைக்கிள் செய்யும் யோசனை உதித்திருக்கிறது.
ஆனால், சுற்றுச்சூழல், உடல் நலனுக்கு சைக்கிள் ஏற்றது என்பதால், யோசனையோடு நின்றுவிடாமல், அதைச் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.சக்கரம், செயின், பிரேக் உள்ளிட்ட சில உதிரி பாகங்களைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பாகங்களையும் மரத்தால் செய்து இந்த சைக்கிள்களை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சைக்கிள்கள் பார்ப்போரை ஈர்க்கின்றன. ஓட்டிப் பார்க்கவும் தூண்டுகிறது. தினமும் மரத் தொழிலகம் வழியாக வருவோர் இந்த சைக்கிளை ஓட்டிப் பார்ப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள்.
மர சைக்கிள்கள் உருவாக்கிய சகோதரர்களில் ஒருவரான பாஸ்கர் கூறும்போது, “பலரும் சைக்கிளை மறந்து மோட்டார் வாகனத்தின் பக்கம் சென்றுவிட்டனர். அவசரத்துக்கு மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தினாலும், மற்ற நேரத்திலாவது சைக்கிளைப் பயன்படுத்தலாம்.
அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த சைக்கிள்களை உருவாக்கினோம். மரத்தினால் சக்கரம் செய்தால், வேகமாகச் செல்ல முடியாது. அதனால், சில உதிரி பாகங்களைக் கடையில் வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறோம்” என்கிறார்.
இந்த சைக்கிள்களைத் தேக்கு மரத்தாலேயே உருவாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான பாகங்கள் தேக்கு என்பதால், சைக்கிள்களை உருவாக்க 13 ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்திருக்கிறார்கள். “தேக்கு மரத்தால் செய்துள்ளதால் சைக்கிளின் எடை குறைவாகவே உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ஓட்டலாம். பாலீஷ் போடுவது, பெல் பொருத்துவது என இன்னும் சில உதிரி பாகங்களை இணைத்தால், மர சைக்கிள் முழுமையடைந்துவிடும்” என்கிறார் மற்றொரு சகோதரரான ராஜா.
சுற்றுச்சூழல் சார்ந்த ஆர்வத்தை இதுபோல புதுமையாக அணுகுவது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டும்.