

தற்காலத்தில் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீக்கத்தில் இருக்கிறதோ அதைவிட வீக்கத்தில் இருப்பது இந்தியத் தமிழிலக்கிய உலகம்தான் என்றால் உங்களால் நம்ப முடியாது. கற்பனைகளால் எழுதப்பட்ட புராண இதிகாசங்கள் அனைத்தும் நம்முடைய கடந்த கால நிஜங்கள், அவை இந்தியக் கலாச்சாரம் என்று நம்பிக்கொண்டிருக்கும் வாசகர்கள் ஒரு பக்கம்.
எழுத்துலகப் பிதாமகர்கள்தாம் இந்த உலகையே காக்கவல்லவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் வாசகர்கள் மறுபக்கம். இவற்றின் இடையே இலக்கிய உலகம் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த உக்கிரத்தன்மையோடு முகத்தை வைத்திருக்கும் ஆசாமிகள் மாத்திரம்தான் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நெஞ்சிலறையும் நிஜம்.
இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களில் பெரும் பாலானவர்கள் சிரிப்பதில்லை. சிரிப்பதற்கான முகாந்திரங்கள் அங்கே உருவாவதில்லை அல்லது உருவாக்குபவர்கள் அரங்கிலிருந்து வெளியே உமிழப்படுவார்களோ என நினைக்கும் அளவுக்கு அங்கே நச்சுப் பாம்புக் கடிக்கு ஒப்பானதொரு சூழல் உண்டு.
ஒருவேளை அங்கே யாராவது சிரித்தால் சக படைப்பாளரின் நெற்றிக்கண் அக்னி ஜுவாலைகளால் எரிக்கப்படும் அபாயமும் இருப்பது உயிர் பயத்தை உண்டாக்கினால் அதற்கு இலக்கியம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. ஆகையால், ஒரு விலங்குக் காட்சி சாலையில் கூண்டுக்குள் தேமே எனக் கிடக்கும் ஒரு சிங்கத்தை முறைத்துப் பார்க்கும் பாவனையிலேயே நீங்கள் அமைதியாகக் கண்களை மூடாமல் அமர்ந்தீர்களானால், தேநீர் கிடைக்கும். இல்லையென்றால் பார்வையிலேயே பால் ஊற்றப்படுவீர்கள்.
நவீன இலக்கியத்தில் கூச்சல்: நவீன இலக்கியங்களில் கட்டுடைப்பு, பழம்பெரும் இலக்கியங்களில் இலக்கணக் குறைபாடு தீர்ப்பு முகாம், தற்காலப் புனித இலக்கியக் கொள்கைகளைப் புதுப்பிக்கும் முகமை போன்ற தலைப்புகளில் நிகழ்த்தப்படும் இலக்கியக் கூட்டங்கள் அசாத்தியங்கள் நிறைந்தவை. கூட்டத்தில் ஓர் இலக்கியவாதி இப்படிச் சொன்னார்.
“இந்தக் கூட்டத்தின் ஸ்மரணையற்ற வழிநடப்பு எனக்குக் கிஞ்சித்தும் பிடிக்கவில்லை! இந்த அரங்கில் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி இருந்திருந்தால் கண்டிப்பாக ஓர் உளுந்த வடை வழங்கியிருப்பீர்கள் அல்லவா? இந்தத் தமிழ் இலக்கியப் பீடத்தின் பிதாமகனான நான் பாவம் ஓர் உளுந்தவடைக்குத் துப்புக் கெட்டவனானேனா? இனிமேலும் இம்மாதிரியான துர்முன்னெடுப்புகளை நிகழ்த்துவீர்களெனில் நான் நவீன நக்கீரானாய் மாற வேண்டிய அவசியம் இங்கிருப்பதை நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்! உளுந்தவடைக்குத் துப்பில்லாத மாக்களுக்கு உலக இலக்கியமும் ஒரு கேடோ?” என்பதாக உலகளாவிய இலக்கியப் பாங்கினில் ஒரு கண்டனம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதில் கொடுமை என்னவென்றால் அந்தக் கண்டன உரைக்கும் பார்வை யாளர்கள் கைதட்டியதுதான் உலக விந்தைகளில் முதன்மையானது. ஓர் உளுந்தவடைக்கு உலக இலக்கியத்தில் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கு மென்பதை அறிந்து கொள்ளாமலேயே கவிஞர் ஆல்பிரெட் ஐன்ஸ்டைன் இறந்து போனதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
யாராவது ஒருவர் மேடையேறி மைக்கைப் பிடித்து, “அதாகப்பட்டது சகாவுகளே! நம்மிடையில் இலக்கிய மெனும் பேராசுவாசம் இல்லை யெனில் இப்பெருவுலகம் என்ன பாடுபடும் என்றெண்ணிப் பார்த்திருக்கி றீர்களா? ‘இந்நானிலம் கூனிக்குறுகும் என்னுடைய கவிதைகள் உதிர்க்காத அதிகாலைப் பொழுதொன்றில் கூவாத குருவிகள் கூட்டுக்குள் இருப்பதில்லை! மேயாத எருமைகள் மேய்ச்சலுக்கு லாயக்கில்லை! அதுபோலவே என்னுடைய கவிதையைப் படிக்காதோர்...’ என்பதாகக் கவிஞர் ஜிஞ்சினுக்கான் அவருடைய ‘கம்போளமும் கம்பங்காவடிகளும்’ தொகுப்பிலுள்ள ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பார்!” என்று சம்மந்தா சம்மந்தமில்லாத வார்த்தைகளைக் கூறி அரங்கத்தைக் கைதட்டல்களால் நிறைப்பார்.
கைதட்டியவர்களுக்குத் தாங்கள் எதற்காகக் கைகளைத் தட்டினோம் என்று புரிவதற்குள் கூட்டங்கள் நிறைவுபெற்றுவிடுவதுதான் ஆச்சர்யங்களின் அரங்கேற்றம். சில இலக்கியக் கூட்டங்களின் முடிவில் தங்களுடைய காதுகளின் கேட்கும் திறனை இழந்த மைக்செட்காரர்கள் ஒருபோதும் இந்த வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறப் போவதில்லை
என்பது இன்னும் சோகம்.
பெகளப்பிதாவுகளின் பெருவெடிப்பு: இலக்கியக் கூட்டங்களில் சுக்குக் காப்பிக்குப் பதிலாக மலமிளக்கி மருந்துகள் கொடுத்தால் தேவலாம் என்னுமளவிற்கு அங்கே உர்ராண்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் காணலாம். கூட்டத்தின் மத்தியில் சிரிப்பவர்கள் சிறை செல்வார்கள் என்பதுபோல எச்சரிக்கை முழக்கங்களை இந்த இலக்கிய இஸ்கான்கள் முதலிலேயே முன்னெடுப்பதை ஜபர்தஸ்தாக நீங்கள் புரிந்துகொள்ளுதல் அவசியம். சுடுகாட்டில் பிணம் எரிப்பவர், “எல்லாரும் பார்த்தாச்சா? மூஞ்சை மூடப் போறேன்!” என்பதைப் போல மேப்படி விழா ஏற்பாட்டாளர் மேடையில் தோன்றுபவர்.
மைக்கில் டமார் டமாரென இரண்டொரு முறைகள் கனமாகத் தட்டி முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு ஒரு இன்ஸ்பெக்டரின் தோரணையில், “எல்லாரும் வந்தாச்சா? கூட்டத்த தொடங்கிடலாமா?” என்று கேட்பார். கூட்டத்தின் மத்தியில் பெஞ்சு சப்தங்கள் எழுந்தால் நான்கைந்து பேர் எழுந்து 360 கோணங்களில் முறைத்துப் பார்ப்பார்கள். பேசியவர்களின் ஆளுமைகளின் அளவீடுகளின் நிமித்தம் தண்டனை குறைக்கப்படும்.
ஒருவர் வீட்டில் அளவின்றி வாய் பேசிய தன்னுடைய இணையரைத் தண்டிக்கும் விதமாக பல்லிதாசன் என்னும் எழுத்தாளரின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்துக்கு சீனிவாசன் அழைத்துப் போயிருக்கிறார். சுமார் நான்கே மணிநேரத்தில் முடிந்துவிட்ட கூட்டத்தின் முடிவில் கூட்டம் குறித்த தன்னுடைய மனைவியின் கருத்தை அறிந்துகொள்வதற்காக வாயைத் திறந்தபோது “இவுனுவளெல்லாம் மனுசம்மாருவதானா? இவுனுவ பேசுகது என்னத்த கிடந்த மொழியோ?” என்றவாறே அன்று வெளியிடப்பட்ட புத்தகத்தால் வாயில் தாக்கப்பட்டிருக்கிறார்.
அன்றைய நாளில் இலக்கியத்தால் பயனடைந் தவர்களில் அந்த அரங்கத்தின் அருகில் கிளினிக் வைத்திருந்த டாக்டரும் ஒருவர். சீனிவாசனின் முகத்தில் மட்டும் ஏழு தையல்கள். வீசப்பட்ட அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் மூவாயிரம். கவிஞர் சீனிவாசன் உயிர் பிழைத்ததே அபூர்வம் என்று சொல்லிக்கொண்டார்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.
விருதுகளும் விக்கல்களும்: தற்காலத்தில் இலக்கிய விருதுகள் எனும் பெயரில் நிகழ்ந்து கொண்டி ருக்கும் கோமாளித்தனங்களை எழுத வேண்டுமெனில் அதற்குக் குறைந்த பட்சம் ஆறாயிரம் பக்கங்கள் தேவைப் படுமென்பதால் “அதுல ஒண்ணுமில்ல கிழிச்சிப் போட்டுரு!” என்றவாறே கடந்துவிடுவோம் நண்பர்களே!
- writerprabhudharmaraj@gmail.com