

ஆதிகாலம் தொட்டே மனிதர்களின் மத்தியில் புரளிபேசும் பழக்கம் என்பது பெரும்பான்மையான பொழுதுபோக்குச் சாதனமாக இருந்து வருகிறது. இல்லாத ஒரு விஷயத்தைப் போகிற போக்கில் கற்பனை கலந்து அடித்து விடுவது ஒரு சிறந்த படைப்பாற்றல் என்பது குறிப்பிடத் தகுந்தது. முன்பெல்லாம் கிராமத்து வீடுகளின் திண்ணையில் அமர்ந்து கூடிக் கூடிப் புரளி பேசுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால்தான், நாம் எவ்வளவு பெரிய ஆபத்தான ஆத்துமாக்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்பது புரியும்.
பெரும்பாலும் பெண்கள்தான் புரளி பேசுவார்கள் என்பது பொதுக் கருத்து. ஆனால், ஆண்களும் புரளி பேசுவதில் வல்லவர்கள்தான். முன்பொருமுறை ஊருக்குள் மாலை வேளைகளில் ஊருக்குள் கொடூரமான பிசாசு தன்னுடைய கையில் தீப்பந்தத்தோடு அலைந்து திரிவதாக மகான் ஒருவர் புரளியைக் கிளப்பிவிட்டார். அதுவும் போக ஊருக்குள் கொஞ்சம் பேர் அதைக் கண்ணால் பார்க்கவும் செய்தார்கள்.
ஊருக்குள் பெரும் பேச்சு எழுந்தது. ஊரிலிருந்த யாரும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வீட்டை அடைத்துக்கொண்டு படுக்கத் தொடங்கினார்கள். போதாக்குறைக்கு அந்தப் பிசாசு ஊருக்குள் வளர்ந்துவந்த ஆடு, மாடு, கோழிகளைக் கவர்ந்து சென்றது. பின்பொரு சுபயோகச் சுபதினத்தில் அந்தப் பீதியைக் கிளப்பிவிட்ட மகான் கையும் கோழியுமாகச் சிக்கினார். விசாரித்தால் அவரே பிசாசாகக் கையில் தீப்பந்தம் ஏந்தி நடித்ததாக ஒப்புக்கொண்டார்.
தங்களுக்குப் பிடிக்காத மனிதர்களின் பெயர்களைப் பேருந்து நிலையக் கழிவறைகளில் எழுதிப் போட்டுச் சம்மந்தப்பட்டவரின் தொலைபேசி எண்களைக் கூடவே எழுதுவதும் தொடர்பியலைப் பொறுத்தவரைக்கும் ஒரு புரளியாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
புரளிகளால் ஆயபயன்: புரளிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, தனிமனித வசவு நோக்கில் எய்யப்படும் புரளி அம்புகள்; இரண்டு, ஒரு கூட்டத்தைக் குறித்து வசைபாடும் நோக்கில் கொய்யப்படும் புரளிக் கனிகள். முதல் வகை தங்களுக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி ஊருக்குள் பொய்களை விதைப்பது.
உதாரணமாக, 'உனக்கொரு விஷயம் தெரியுமா? மூணாவது வீட்டுக்காரனுக்கு ஏதோ தீக்க முடியாத பிணியாமே?' 'அந்தத் தெக்கு வீட்டுக்காரனுக்கு பக்கத்து ஊர்ல ஒரு பொண்ணுகூடப் பழக்கமாமே?' என்றெல்லாம் பேசி, அதைச் செவி வழியாகக் கடத்தி, மக்கள் மனதில் பரப்பிப் பதிய வைத்து உண்மையோ பொய்யோ சம்மந்தப்பட்டவர்களின் காதுகளுக்கு எட்டி, அவர்கள் சிலுவை சுமக்கும் நிலைமைக்கு ஆளாக்குதல்.
இரண்டாவது, தங்களுக்குப் பிடிக்காத இனக்குழுவோ சமூகத்தைக் குறித்தோ எழுப்பப்படும் புரளிக் கம்பங்கள். உதாரணமாக, ‘அந்த குரூப்பே மோசம்டே! பூரா பொய்யி மட்டுமே பேசுவானுவோ!’ ‘அந்தத் தெருவுல இருக்குற மொத்த ஆட்களுமே வாய்நோக்கிகள்தாம்!’
‘ஒரு கொடிக்கம்பத்துல சேலையக் காயப் போட்டாலும் வச்ச கண்ணு வாங்காம பாப்பானுங்க!’ என்று ஒரு குழுவையே பேசுபொருளாக்கிப் பாடல்களைப் பாடுதல். புரளியை உருவாக்குதல் என்பதை ஒரு கலையாகவே கருத முடியும். ஏனெனில், இந்த உலகில் இல்லவே இல்லாத ஒன்றைக் குறித்துக் கற்பனை செய்து, அதைப் பாடுபொருளாக்குவதை நீங்கள் சாமானிய காரியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த உலகின் முதல் புரளி என்பது ‘தீட்டு’ எனும் வார்த்தைதான். பிள்ளையார் கோயில் சிலையிலிருந்து பால் வருதல், மாதாவின் சொரூபக் கண்கள் கண்ணீரை உகுத்தல் போன்ற பல புரளிகளை நாம் கேட்டிருக்கிறோம்.
புரளிகளிலேயே பழைய கிழடுகளை அடித்துக் கொள்ளவே முடியாது! தீயில் சுட்ட காகம் பறந்தது! கல்லறையிலிருந்து காலில் சங்கிலியோடு மேப்புடியானின் ஆவி பறந்து தோப்புக்குள் புகுந்ததைக் கண்ணால் கண்டேன்! கிணற்றிலிருந்து கிடாரம் மேற்பரப்புக்கு வந்தபோது கையை வெட்டி ரத்தம் விட்டு எடுத்ததுதான் என்னுடைய காதுகளில் கிடக்கும் பாம்படம் என்பது போன்ற கிறிஸ்டோபர் நோலன் வகையறாக் கதைகளைச் சொல்லித் திரிந்த கிழடுகள் அனைவரும் தற்சமயம் சுவரில் படமாகிவிட்டதால், புரளிகள் நவீன வடிவத்தை அடைந்திருப்பதைக் காணலாம்.
நவீனப் புரளியின் புள்ளிப் புலிகள்: தொழில்நுட்பரீதியாக மனித இனம் பல்வேறு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டிருந்தாலும் மனதளவில் புரளிக் கலை மட்டும் எந்த மாற்றங்களையும் காணாமல் வளர்ச்சி மட்டுமே அடைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. முன்பு கிணற்றடிகளிலும் வீட்டு முற்றங்களிலும் படித்துறைகளிலும் வளர்ந்த புரளி வித்தைகள், இப்போது முகநூலிலும், கூவிகளிலும், நீகுழாய்களிலும் டிரான்ஸ்ஃபர் ஆகி அமோகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. உட்கார்ந்த இடத்திலிருந்தே தற்சமயம் பில் கிளிண்டன் தன்னுடைய பழைய காதலிகளைப் பார்வையிட்டார், ‘சந்திரயான் 3’ எங்கள் வீட்டு வாசலைக் கடந்துதான் சென்றது, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சுவாசசேகர் செவ்வாய் கிரகத்துக்குச் சுற்றுப் பயணம் செல்கிறார் என்கிற அளவில் அசாத்தியமான புரளிகளை அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களுமே புரளிகளை அருளுவதிலும் புரளிகளைக் கேட்டு உருளுவதிலும் அலாதியான ஆர்வம் காட்டுவதுதான் விந்தை. புரளிகளை மாத்திரமே உருவாக்கிவந்த ஒரு ஜீவஆத்துமா முதல் முறையாகத் தன் மீதே ஒரு புரளி பேசப்பட்டு, தன்னுடைய மனையாட்டியின் கையால் விறகுக்கட்டைக் குளியலைச் சுகித்தார். அதென்ன புரளி? அதை வெளியில் சொல்வது மிகப்பெரிய பாவம் நண்பர்களே! விதை விதைத்தவன் வினை அறுப்பான்! புரளி விதைத்தவன் குறளியால் வெள்ளாவி வைக்கப்படுவான்!
- writerprabhudharmaraj@gmail.com