

அப்போது சென்னை குருநானக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர் பேரவைத் துணைத் தலைவர், தமிழ்மன்றத் துணைத் தலைவர், நாட்டுநலப் பணித் திட்ட மூத்த அலுவலர் எனப் பல நிலைகளில் என் பணிகள் விரிவடைந்த நேரம். முக்கியப் பொறுப்புகளை வகித்ததால், கல்லூரியில் திறமையான, சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள் எப்போதும் என்னைச் சூழ்ந்து இருப்பார்கள். பல மாணவர்களின் பணிகளும் அவர்கள் பழகிய விதமும் என்னை மகிழ வைத்தது உண்டு. ஆனால், ஒரு மாணவன் மட்டும் என்னை வியக்கவைத்திருக்கிறான்.
தமிழ் மன்றத்தின் சார்பில் போட்டிகள் நடந்தால் முதலில் அவன்தான் பெயரைப் பதிவு செய்வான். ரத்த தானம் போன்ற சமூகப் பணிகளிலும் அவனைப் பார்க்கலாம். அதேபோல் அந்த வகுப்பின் மாணவர் தலைவராகவும் இருந்தான். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய அந்த மாணவனுக்குத் தமிழ் மீதும் மிகுந்த ஈடுபாடு. தமிழ்ப் பாட வகுப்பில் முன் வரிசையில் அமர்ந்து ஆர்வமாக வகுப்பைக் கவனிப்பான். எனது பாடம் நடத்தும் பாணி சற்று வேறுபட்டது. செய்யுள், இலக்கணம் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு நடத்துவேன். உரைநடை, துணைப் பாடம் போன்ற பகுதிகளை ஒவ்வொரு தலைப்பாக மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்து, அவர்களை வகுப்பில் பாடம் நடத்தக் கூறுவேன்.
அவர்கள் நடத்துவதை மாணவர்களில் ஒருவராக அமர்ந்து கேட்டு, கடைசியாக அவர்கள் நடத்திய முறையைப் பற்றியும் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதையும் சேர்த்துக் கூறி வகுப்பை நிறைவு செய்வேன். ஒரு நாள் செய்யுள் பாடங்களை நான் நடத்திக்கொண்டிருந்தபோது, ஆர்வமுள்ள அந்த மாணவன் தன்னால் செய்யுள் பகுதியையும் நடத்த முடியும் என்ற கூறி வாய்ப்பைக் கேட்டான். கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ குறுங்காவியம் அது. அரை மனத்தோடு அந்த வாய்ப்பை அவனுக்கு வழங்கினேன். ஆனால், மிகவும் சிறப்பாக அந்த வகுப்பை நடத்தி, எல்லோரது பாராட்டுகளையும் பெற்றான். அந்தப் பெருமைக்குரிய மாணவன் பாஸ்கரன். அந்தக் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பயின்ற அவன், முதுகலைப் படிக்க பச்சையப்பன் கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.
சில ஆண்டுகள் கழித்து, நாட்டுநலப் பணித் திட்டத்தின் மாநிலத் தொடர்பு அலுவலராக பணியாற்றிய நான், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தேன். துணைவேந்தர், பதிவாளர், அரசுச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் அதே பாஸ்கரனைச் சந்தித்தேன். ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதியாகக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தான். சிவில் சர்வீஸ் தேர்வுக்கெல்லாம் தயாராக வேண்டும் என்று முதலில் அவன் நினைத்திருந்ததாகவும், நாட்டு நலப் பணித் திட்டத்தில் என் மூலம் அவனுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டால் சேவைப் பணிகளுக்குத் திரும்பியதாகவும் அவன் சொன்னபோது, எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அதேபோல் செங்கல்பட்டு வித்யா சாகர் மகளிர் கல்லூரியில் நான் முதல்வராகப் பணியாற்றியபோது, பொதிகை தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு வந்தது. கல்லூரி மாணவிகள் நடத்தும் சிறப்பு முகாம் பணிகளைப் படப்பிடிப்பு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்ப விரும்புவதாக விருப்பம் தெரிவித்தவர் அதே பாஸ்கரன்தான். தொலைக்காட்சியிலும் சேவைப் பணிகளுக்கே அவர் முக்கியத்துவம் தருகிறார் என்பது மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது.
இதன் பின்னர் தமிழக அரசின் உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலாளராக நான் பணியாற்றியபோது, என் அலுவலகத்துக்கு வந்த பாஸ்கரன், மன்றப் பணிகளைப் பேட்டியின் மூலம் நாடறியச் செய்தார். வாரந்தோறும் முக்கிய விருந்தினர்களைப் பேட்டி கண்டு பொதிகைத் தொலைக்காட்சியில் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அவர், முக்கியமான தருணங்களில் மற்றவர்களுடன் என்னையும் பேட்டி கண்டார். இது எல்லா ஆசிரியர்களுக்கும் கிடைக்காத கவுரவம்தான்.
ஆசிரியர்களைப் பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றுதான் பொதுவாகக் கூறுவோம். சில நேரங்களில் குருவே வியக்கும் அளவுக்குச் சாதனை படைக்கும் சிஷ்யர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் என் அருமை மாணவன் பாஸ்கரன். இன்றும் பல லட்சியக் கனவுகளை இதயத்தில் சுமந்துகொண்டிருக்கும் இவன், நாளை நாடு போற்றும் ஒருவனாக உயர்வான் என்பது உறுதி.
கட்டுரையாளர்: மேனாள் உறுப்பினர் - செயலர்,
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், சென்னை.