

பி
ரபலங்கள் பல ரகம். இப்போது புது ரகமாகக் கிளம்பியிருக்கிறார்கள் டப்ஸ்மாஷ் பிரபலங்கள். சினிமா, சீரியல் நடிகர்களை விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதுபோல சோஷியல் மீடியாவில் டப்ஸ்மாஷில் கலக்கும் இளம் நடிகர்களையும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி விழாக்களுக்கு பிரபலங்களாகச் சென்று வரும் டப்ஸ்மாஷ் கலைஞர்கள் சிலரைச் சந்தித்தோம்.
மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ் படங்களை டப்ஸ்மாஷ் செய்து அசத்தி வருகிறார் விஷ்ணு. இவருடைய டப்ஸ்மாஷுக்கு யூடியூபில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவரது டப்ஸ்மாஷ் சில நாட்களிலேயே ஏகப்பட்ட லைக்குகளைக் குவித்துவிடும். இந்த வரவேற்புதான் விஷ்ணுவுக்கு சோஷியல் மீடியாவில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அது அவரை விழாக்களுக்கு அழைக்கும் அளவுக்குப் புகழ்பெறச் செய்திருக்கிறது.
இவரைப் போலவே இன்னும் இரு பிரபலங்கள் மதுரையைச் சேர்ந்த பிரியனும் சென்னையைச் சேர்ந்த சுரேனும். இதில் டப்ஸ்மாஷ் கலைஞராக எல்லோருக்கும் அறிமுகமான பிரியன் ஒரு விளையாட்டு வீரர் என்பது பலருக்கும் தெரியாது. இருவருக்கும் டப்ஸ்மாஷில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. சுரேனை இணையதளத்தின் ‘இளைய தளபதி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
இவரது இணையதளப் பக்கத்தில் விஜய் வீடியோக்கள் மட்டுமே இருக்கும். விஜயின் ஒரு வசனம் விடாமல் டப்ஸ்மாஷ் செய்து இணையத்தை நிரப்பி வைத்திருக்கிறார் சுரேன். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சொந்தமாகத் தொழில் செய்துவருகிறார். விஷ்ணு, பிரியன், சுரேன் மூவருமே நண்பர்கள். மூவர் குழுவுக்கு ‘சாஸ் பாய்ஸ்’ என்று பெயர். தற்போது மூவருமே பள்ளி, கல்லூரி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாகச் சென்றுவருகிறார்கள்.
“பள்ளி கல்லூரி விழாக்களுக்கு நான் விருந்தினரா போகிறப்போ எதிர்பாக்காத அளவுக்கு வரவேற்பு கிடைக்குது. அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. சமீபத்தில சென்னையில் இருக்குற ஒரு தனியார் பள்ளி விழாவுக்குப் போயிருந்தேன்.
மீடியா செலிபிரிட்டிகள் வரும்போது கொடுக்கிற அலப்பறையும் வரவேற்பும் எனக்கும் கிடைச்சது. இது ரொம்பவே ஆச்சரியமா இருந்துச்சு” என்கிறார் டப்ஸ்மாஷ் கலைஞர் விஷ்ணு. ஃபேஷன் போட்டோகிராஃபராக மீடியா வாழ்க்கையை ஆரம்பித்த இவர், இன்று திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். இணையதளமே இதற்கு முழுக் காரணம் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் விஷ்ணு.
ஆண்கள் மட்டுமல்ல; கோவையில் பொறியியல் படித்துவரும் ரேணுகா குமரவேலும் இணையதளப் பிரபலமே. பொதுவாகப் பெண்கள் காதல் வசனங்களை மட்டும் டப்ஸ்மாஷ் செய்வார்கள். ஆனால், ரேணுகா அண்மையில் டிரெண்ட் ஆன நகைச்சுவை வசனங்களை டப்ஸ்மாஷ் செய்து வெளியிடுகிறார். நடனம் என்றால் இவருக்கு உயிர். சோஷியல் மீடியாவில் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். “சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் எல்லாருமே அவர்கள் சகோதரியைப் போல என்னிடம் அன்பு காட்டுகிறார்கள். அவர்களுடைய எல்லையில்லா ஆதரவு என்னைத் திக்குமுக்காடச் செய்கிறது” என்று உற்சாகமாகச் சொல்கிறார் ரேணுகா குமரவேல்.