

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மதராஸப்பட்டினமாக வளர்ந்த சென்னையின் வரலாறும் வளர்ச்சியும் பிரம்மாண்ட மானவை. சென்னையின் வரலாற்றுக் கதைகள் அதிக சுவாரசியம் நிறைந்தவை. தேடத் தேட ஆச்சரியமான தகவல் கொட்டிக் கிடக்கும் ஊர் இது. என்றாலும், இந்த ஊரின் அறியப்படாத பக்கங்களும் இருக்கவே செய்கின்றன.
அவற்றை ஆவணப்படுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘ஹெரிடேஜ் வாக்’ என்றழைக்கப்படும் ‘மரபு நடை’யை ஒருங்கிணைத்து வருகிறார் கட்டடக்கலை நிபுணரும் எழுத்தாளருமான திருபுரசுந்தரி செவ்வேள். ‘நம் வீடு, நம் ஊர், நம் கதை’ என்கிற தன்னார்வ அமைப்பையும் நிறுவி, சென்னையின் அடையாளங்களை இவர் பதிவுசெய்தும் வருகிறார்.
மரபைத் தேடி: பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் கட்டடக் கலை பயின்றவர் திருபுரசுந்தரி. நாடு திரும்பியவுடன் மரபைத் தேடிப் பயணப்பட விரும்பினார். அன்று நடுவக்கரை என்கிற கிராமமாக இருந்த அண்ணா நகரின் கதையைத் தேடி முதல் முதலில் சென்றார். அப்படிச் சென்றபோது அவருக்குப் பல அரிய தகவல்கள் கிடைத்தன.
அந்தத் தேடல் தந்த சிலிர்ப்பான அனுபவத்தின் ஒரு பகுதியாக சிறு குழுவினருடன் சேர்ந்து மரபு நடையை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த 2013இல் திருபுரசுந்தரி தொடங்கிய ‘நம் வீடு, நம் ஊர், நம் கதை’ என்கிற தன்னார்வ அமைப்பு இன்று சென்னையை அடையாளப்படுத்தும் புதையைல்களின் கூடாரமாக வளர்ந்திருக்கிறது.
சென்னையை மையப்படுத்தும் இந்தத் தன்னார்வ அமைப்பு செய்துவரும் பணிகள் குறித்து திருபுரசுந்தரி நம்மிடம் பேசினார்: “மரபு சார்ந்த தேடலில் எனக்கு ஆர்வம் அதிகம். 2012இல் என் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கியது இந்தப் பயணம். 2013ஆம் ஆண்டில்தான் இதை ஓர் அமைப்பாக மாற்றினோம். சென்னையில் உள்ள இடங்களை மட்டும் தேடி ஆவணப்படுத்துவது ஒரு வகை. ஆனால், நாங்கள் இங்கிருந்த, இங்கிருக்கும் மக்களையும் ஆவணப்படுத்தும் பணியையும் செய்து வருகிறோம்.
இந்த ஊரிலுள்ள மக்கள் செய்யக்கூடிய வேலைகளை, அவற்றின் சாராம் சங்களைப் பதிவுசெய்கிறோம். ஆக, மக்களோடு சேர்ந்தே சென்னையின் அடையாளங்களைத் தொகுத்து வருகிறோம். இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில்தான் ‘மரபு நடை’யை ஒருங்கிணைத்து வருகிறோம்” 2015ஆம் ஆண்டு முதல் இசை, வாசிப்பு, கதை சொல்லல் நிகழ்ச்சிகளையும் பொது இடங்களில் ஒருங்கிணைத்து வருகிறோம் என்கிறார் அவர்.
தகவல் திரட்டு: மரபு நடை என்பது குறிப்பிட்ட சிலருக்கானது அல்ல. மரபைத் தேடுவதில், வரலாற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமிருக்கும் எவரும் இந்த மரபு நடைப் பயணங்களில் கலந்து கொள்ளலாம். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் இதில் கலந்துகொள்ளலாம். இந்த மரபு நடைகளின் அனுபவம் வெறும் ஒரு நாள் அனுபவமாக முடிந்துவிடாது என்கிறார் திருபுரசுந்தரி.
“மரபு நடைகள் பல்வேறு வகைப்படும். இடம் சார்ந்து, மக்கள் சார்ந்து, தொழில் சார்ந்து மரபு நடை ஒருங்கிணைக்கப்படுகிறது. மரபு நடையில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் இதற்கு முன்பும், பின்பும் பல விஷயங்களைத் தேடிச் செல்லக்கூடும். ஒவ்வொருவரின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய தகவல்கள் மாறுபடும்.
ஒரு நகரம் என்றால் மாற்றங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தவிர்க்கவே முடியாத இந்த மாற்றங்களில் பொதுமக்களாகிய நாமும் ஓர் அங்கம்தான். ஒருவர் வாழும் இடத்தை, நகரத்தைப் பற்றி புரிந்துகொள்ள இந்த மரபு நடைகள் வழிகாட்டியாக விளங்குகின்றன” என அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் திருபுரசுந்தரி.
இணையத்தில் வரலாறு: இந்த இணைய யுகத்தில் இணையத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை. எனினும் கொட்டிக் கிடக்கும் தகவல்களில் உண்மை எது, பொய் எது எனப் பிரித்துப் பார்க்க இந்த அவசர உலகில் அனைவருக்கும் நேரம் இருப்பதில்லை. குறிப்பாக வரலாறு, மரபு சார்ந்த தகவல்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் திருபுரசுந்தரி.
“10 ஆண்டுகளுக்கும் மேலாகஎங்களது பணி தொடர்ந்து வந்தாலும், சமூக வலை தளங்களில் தாமதமாகவே தடம் பதித்தோம். 2019இல்தான் ’நம் வீடு, நம் ஊர், நம் கதை’க்கான சமூக வலைதளப் பக்கங்களைத் தொடங்கினோம். அது பெரும் மாற்றத்துக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
டிஜிட்டலில் இயங்காத வரலாற்று ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் பற்றியும், அறியப்படாத தகவல்களையும் இதில் பதிவுசெய்யத் தொடங்கினோம். நிறைய ஆராய்ச்சிக்குப் பிறகு கிடைக்கப் பெறும் உண்மைத் தகவல்களை மட்டும் பதிவிடுகிறோம். சமூக வலைதளம் மூலமாக இவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். இந்த வரலாற்றுத் தகவல்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதே நோக்கம்” என்று சொல்கிறார் திருபுரசுந்தரி.