

சென்னைக்கு அருகில் இருக்கும் மாமல்லபுரம், தமிழ்நாட்டின் சிற்பக் கலையின் கருவூலம் என்று பெயர்பெற்றது. பல்லவர்களின் பண்டைய கடற்கரை நகரம்தான் மாமல்லபுரம். இந்த நகரம் இன்று பல்வேறு சர்வதேச விளையாட்டுகள் நடைபெறும் இடத்துக்கும் பெயர் பெற்றதாக மாறிவருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் முதலில் நடைபெற்ற ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகள் மாமல்லபுரத்தில்தான் நடைபெற்றன. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் இரண்டாவது சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்தத் திருவிழாவில் இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியாட்நாம், பிரான்ஸ், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல மாமல்லபுரத்தில் தற்போது உலக அலைச்சறுக்கு (சர்ஃபிங்) லீக் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. உலக அலைச்சறுக்குப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து 15க்கும் மேற்பட்ட அலைச்சறுக்கு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் ஆசிய நாடுகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அலைச்சறுக்கு விளையாட ஏதுவாக மாமல்லபுரத்தில் உயரமான அலைகள் எழுவதால், இந்தப் பகுதியில் அலைச்சறுக்குப் போட்டிகள் நடைபெறுகின்றன.
பாரம்பரியக் கட்டிடக்கலை, வரலாற்றை வெளிப்படுத்தும் தனித்துவமான கலாச்சார இடமான மாமல்லபுரம் சிலிர்ப்பான அனுபவங்களைத் தரும் விளையாட்டுகளுக்கும் பெயர் பெறட்டும்.