இங்கிலாந்தில் தமிழரின் ‘ராஜ பார்வை’

இங்கிலாந்தில் தமிழரின் ‘ராஜ பார்வை’
Updated on
1 min read

இங்கிலாந்தில் உலகப் பார்வையற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பல பிரிவுகளில் விளையாடப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இதில் பங்கேற்றுள்ள இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் இடம்பிடித்திருக்கிறார். அவர், தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான மகாராஜா.

சிறு வயதிலிருந்தே பார்வைக் குறைபாடுள்ள மகாராஜா, பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படித்தபோதுதான் அவருக்கு கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமாகியிருக்கிறது. அங்கு கிரிக்கெட் பயிற்சி பெற்று, பள்ளி அணிக்காக விளையாடியிருக்கிறார்.

மகாராஜா பேட்டிங், வேகப்பந்து வீச்சு என ஆல்ரவுண்டராக உருவெடுத்தார். தமிழ்நாட்டில் 14 பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகள் உள்ளன. அதில், திருநெல்வேலி மாவட்ட அணியில் விளையாடத் தேர்வானார். பிறகு 11ஆம் வகுப்பு படிக்கும்போதே தமிழ்நாடு அணிக்கும் தேர்வானார். அங்கும் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்திய அணிக்கும் தேர்வாகி அசத்தினார் மகாராஜா.

“கடந்த மே மாதத்தில் பெங்களூருவில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 40 பார்வையற்ற கிரிக்கெட் வீரர்கள் தேர்வாயினர். இதில், தமிழ்நாட்டிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். கடந்த ஜூனில் இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் அணியை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது எனக்குப் பெருமை. இருந்தாலும் மருத்துவ உபகரணம், விளையாட்டு உபகரணங்கள் வாங்க எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். படிப்புக்கேற்ற வேலையை வழங்க அரசு முன்வர வேண்டும்” என்றும் மகாராஜா இது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பங்கேற்போரை முழுமையாகப் பார்வை தெரியாதவர்கள், 3 - 6 மீட்டர் வரை பார்வை தெரிந்தவர்கள், 6 மீட்டருக்கு மேல் பார்வை தெரிந்தவர்கள் எனப் பிரிக்கிறார்கள். இதை முறையே பி1, பி2, பி3 என்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து பி1 வகை வீரர் இந்தியாவுக்காக விளையாடுவது இதுதான் முதன்முறை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in