நளி நாட்டியம் 12: சும்மா சிரிக்கத்தான் | தொல்லைப் பேசிகளின் தொல்லைகள்

நளி நாட்டியம் 12: சும்மா சிரிக்கத்தான் | தொல்லைப் பேசிகளின் தொல்லைகள்

Published on

பேச்சாளர்கள் மேடையில் சத்தமாகப் பேசுவதில் ஒரு நியாயமிருக்கிறது. தொலைதூரத்தில் இருப்பவர்களுக்குக் கேட்க வேண்டுமே என்று தொலைபேசிகளில் சத்தமாகப் பேசுபவர்களை என்ன செய்வது? முன்பெல்லாம் லேண்ட்லைன் போன்கள் இருந்த காலத்தில் தெருவுக்கு ஒன்றிரண்டு வீடுகளில்தான் போன்கள் இருந்தன.

வெளியூரிலிருந்தோ வெளிநாடுகளிலிருந்தோ யாருக்காவது அழைப்புகள் வரும்போது அந்தத் தெருவே அல்லோலகல்லோலப்படும். அது துக்கச்செய்திகளாக இருக்கும்பட்சத்தில் போனை எடுத்துப் பேசுபவர் போடும் கூச்சல் அல்லது ஊளையில் ஊர்மொத்தத்துக்கும் துக்கச் செய்தி சென்று சேர்ந்துவிடும்.

மாறாக ‘உங்கள் மகன் அல்லது மகள் வெளிநாட்டிலிருந்து அழைத்திருக்கிறார்கள்’ என்கிற வார்த்தைகளே ஒருவிதப் பெருமிதத்தை ஏற்படுத்திச் சம்பந்தப்பட்டவர்கள் தெருவில் நடந்துவருவதைப் பார்க்கவே ஆட்கள் கூடிவிடுவார்கள். அவர்களுமே கடுத்த மமதையில் நடந்துபோய் போனைக் காதில் வைத்துச் சத்தமாகப் பேசுவதுண்டு.

“நல்லாருக்கியா மோனே? அமெரிக்காவுக்குப் போயி ஆறு வாரமாகு. அம்மைக்கி ஒரு டிரெங்கால் அடிப்போம்னு ஒரு எண்ணம் இப்பவாச்சு வந்துச்சுல்லா? சரி! அங்கெல்லாம் சாப்பாடு நல்லாருக்கா? ஆளு ஒண்ணுக்குப் பாதியா மெலிஞ்சிருப்பியே மோனே! என்னடே சொல்லுக? சம்பளம் ஒண்ணர லச்சந்தா தந்தானுவளா? என்னது அமெரிக்கால இருந்து கன்னடா போனியா? அங்கயும் ஒரு கன்னடா இருக்கு, கண்டியா பிள்ளே? பெஸ்ஸா டிரெய்னா, பிளேனா? பாத்து வழிநடக்கணும் கேட்டியா! பிக்பாக்கெட்டுக்காரனுவகிட்ட சூதானமா இல்லைன்னா பொறிச்சி தின்னுப் புடுவானுவோ!” என்று தொடங்கி இங்கே அடிச்ச வெயில், பெய்த மழை, வீட்டைச் சுற்றி நடமாடும் பாம்புகள், பக்கத்து வீட்டுப் பாட்டி கிடப்பாட்டில் விழுந்த சம்பவம், மாடியில் காயவைத்த வடகத்தை காக்கா தட்டிவிட்ட பாடுகள் என்று போன் கால் வந்த வீட்டிலிருந்தவர்கள் மயக்கம் போட்டுவிழும் வரைக்கும் சம்பாஷணை தொடரும்.

அவர்களது மக்கள் சம்பாதித்த அமெரிக்க டாலர் இந்தியாவுக்கு ஏத்தின பிற்பாடு சம்பந்தப்பட்டவர்களது வீட்டில் எடுக்கப்படும் லேண்ட்லைன் கனெக்சன் மட்டுமே அவர்களது மயக்கத்தைக் குறைக்கும்.

பெருமை பீத்தக்கலயம் எருமை ஒட்டைக்கலயம்: போன் பேசி முடித்ததும் அந்த வீட்டுக்கு வெளியில் நின்று வாய் பார்த்த மக்களிடம் வந்து ஃபாரின்கால்காரர்கள் அளக்கும் கதைகள்தான் அளப்பரியதாக இருக்கும். “அடுத்த வாரம் கார் வாங்கிருவானாம்! ஊரே பனிபொழியப்பட்ட இடமானதால ஏசி வாங்குக செலவு மிச்சம்! அங்க உள்ள ருவாத்தாளு வெள்ளக் கலர்ல இருக்குமாமே! கேக்கவே ஆச்சரியமா இருக்கு? சொடக்கு போடுகதுக்கு முந்தி லோன் கெடச்சிருமாமே அங்குட்டு? இங்க உள்ள சொஸைட்டியிலயும் இருக்கானுவளே?” என்று ஏற்கெனவே போனில் கேள்விகளாய்க் கேட்டவற்றைப் பதிலாகச் சொல்வார்கள்.

வாயானது வான்நோக்க அந்தக் கதைகளைக் கேட்பவர்களுக்குமே தாங்களும் அமெரிக்காவில் பிறந்திருக்கலாம் அல்லது நன்றாகப் படித்து அங்கே போயிருக்கலாமே என்று தோன்றிவிடும்.

டெலிபோனைக் கண்டுபிடித்ததே மைக்கேல் ஜாக்சன்தான் என்னும் மூட நம்பிக்கை வளர்வதற்கு முன்பாகவே காலம் போகப்போக எல்லார் வீட்டிலும் லேண்ட்லைன் வந்தது. பின்பு பேஜர் என்றொரு சாதனம் வந்து, அது சந்தையில் நிலைக்கும் முன் மொபைல்போன் வந்தாகி விட்டது.

புதிதாகக் காதல் வயப்படுவோர் ஆரம்பத்தில் சன்னமான குரலில் முக்கு மூலைகளில் பதுங்கியிருந்து ரகசியமாகப் பேசி காதல் வளர்த்து, அந்தக் காதலின் பிரிவில் குடித்துவிட்டு நடுரோட்டில் ஆடிக்கொண்டே நின்று சத்தமாகப் பல கெட்டவார்த்தைகளைப் பேசுவதை தொடர்பியலின் ஒரு நீட்சியாகவே கருதலாம்.

பாட்டுக்கு மெட்டு: மேற்கூறியதெல்லாம் பெருமை பீத்தல்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இந்தச் சத்தச் சம்பாஷணைகளால் நிகழ்ந்த துர்சம்பவங்கள் அசாத்திய மானவை. நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய குடும்பத்தலைவர் தனது அருகிலிருந்த யாரோவொரு பிரகஸ்பதியிடம் தங்களைக் குறித்த எல்லா விபரங்களையும் வீட்டு முகவரி வரைக்கும் சகமனதோடு பகிர்ந்திருக்கிறார். சற்று நேரத்தில் வந்த ஒரு போன் அழைப்பில் மேற்படியார் சத்தமாகப் பேசிய காரியங்கள் இவைதான்.

“மச்சினா நாளைக்கிக் காலையில நீ ஊருக்கு வந்தவொடனே வீட்டுக்குப் போய் சப்பல் ஸ்டாண்டுல சாவி வச்சிருக்கேன்! வீட்டத் தொறந்து பீரோ சாவி டீவிக்குப் பின்னால இருக்கு! அத எடுத்து பீரோவுல அம்பதாயரம் ரொக்கம் வச்சிருக்கேன்! அத எடுத்துட்டுப் போயி பேங்குல போட்டுரு! அவசரத்துல ஒங்க அக்காவோட நகையையும் பேங்கு லாக்கர்ல வைக்கலை! அதையும் ஒண்ணு என்னான்னு பாத்துக்க!”

வண்டியைக் கயத்தாரில் சாப்பிட நிறுத்தியிருக்கிறார்கள். மீண்டும் வண்டியை எடுத்தபோது பக்கத்திலிருந்த ஆசாமி மிஸ்ஸிங். மேற்படியார் சும்மாயிருக்காமல் நடத்துநரிடம் பக்கத்து சீட்டு ஆசாமியை ஹோட்டலிலேயே கவனக்குறைவாக விட்டுவிட்டு வந்ததாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். மேற்படி ஆசாமி கயத்தாரிலிருந்து நாகர்கோவில் திரும்பி மேற்படியாரின் மைத்துனன் மறுநாள் வந்து செய்யவேண்டிய காரியத்தை இரவோடு இரவாகச் செய்திருக்கிறார்.

பொதுஇடத்தில் வைத்து தன்னுடைய ஏ.டி.எம்.கார்டிலிருந்த பதினாறு இலக்க எண்ணையும், பின்பக்கத்திலிருந்த மூன்று இலக்க எண்ணையும் சத்தமாகப் பதிந்த ஒருவரது வங்கிக் கணக்கின் வாயிலாக யாரோ ஒரு ஆத்துமா இருபத்தாறாயிரம் மதிப்புள்ள டிரெட்மில் ஒன்றையும், இருபதாயிரம் மதிப்புள்ள ரெக்ளெய்னர் ஒன்றையும் கொள்முதல் செய்திருக்கிறது.

விஜய் படம் ஓடின தியேட்டரில் இருந்து கொண்டு சத்தமாக “விஜய்னா என்ன பெரிய இவனா? நடைல கால வச்சா வெட்டிருவேன்!” என்று சத்தமாக தொலைபேசிய ஒரு பிரகஸ்பதி, அங்கிருந்த விஜய் ரசிகர்களால் துவைக்கப்பட்டார். கடைசியில்தான் தெரிந்தது அவரது மகன் பெயர் விஜய் என்பதும், அப்பாவுக்கும் மகனுக்கும் சதாசர்வ காலமும் எட்டாம் திசை என்பதும் தெரிய வந்தது.

யாகாவாராயினும் நா காக்க! அதுவும் மவுனமாகக் காக்க...

- writerprabhudharmaraj@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in