ஒளிரும் கண்கள் 10: செங்கல் விளையும் விவசாய நிலங்கள்

ஒளிரும் கண்கள் 10: செங்கல் விளையும் விவசாய நிலங்கள்
Updated on
2 min read

சி

று வயதில் தாய்மாமன் ஊரான சேலம் மாவட்டம் அமரம் கிராமத்துக்குச் செல்லும்போது வீட்டைச் சுற்றி வயல்கள் இருக்கும். வயல்களைத் தாண்டி பனந்தோப்பு. வயல் வரப்பில் நடந்து செல்லும்போது அவரை, மொச்சை எனப் பச்சை வாசனை நாசியில் ஏறும்.

வாய்க்கால் வரப்பு ஓரம் வளர்ந்திருக்கும் பனை, தென்னை, பப்பாளி, கொய்யா, சீத்தா என மரங்கள் காய்களுடன் வளர்ந்து வளமாக நிற்கும். பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும். அப்போது எல்லாம் கேமரா கையில் இல்லை, கேமரா பற்றி அறிமுகமற்ற நாட்கள் அவை. கண்களாலேயே காட்சிகளை உள்வாங்கிய காலம்!

‘காணி நிலம் வேண்டும்‘ என்றார் பாரதி. இன்றோ ‘ஆளுக்கு ஒரு வீடு வேண்டும்‘ என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். நடுத்தரவர்க்கத்துக்கும் அதற்குக் கீழே உள்ளவர்களுக்கும் சொந்த வீடு என்பது பெருங்கனவு. இருந்தபோதும் விளைநிலங்கள் பெருமளவில் வீடுகளாக மாறிக்கொண்டே இருக்கின்றன. வீடு கட்ட அவசியத் தேவைகளில் ஒன்றான செங்கல்லின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

ஒரு காலம்வரை கம்பு, கேழ்வரகு, சோளம், கடலை, கரும்பு, மொச்சை, அவரை, வாழை, தக்காளி, பருத்தி, கத்தரி விளைந்த நிலங்களில், இன்று செங்கல்லை உற்பத்தி செய்யும் சூலைகள் அமைக்கப்படுகின்றன. வானம் பார்த்த பூமி, தண்ணீர் இல்லா வயல்கள், மகசூல் தராத நிலங்கள் போன்றவை வருமானம் தரக்கூடிய செங்கல் தயாரிப்பு களமாக மாறுகின்றன.

அமரம் கிராமத்தில் நான் பார்த்த வயல்களில் பல இன்றைக்கு செங்கல் தயாரிப்பு மூலப்பொருளான செம்மண் எடுக்கப்பட்டு பள்ளத்தாக்குகளாக மாறிவருகின்றன. பல வயல்களை இதுபோல செங்கல் தயாரிக்கப் பயன்படுத்திவருகின்றனர். கரையோரப் பனைமரங்களும், வறட்சியால் காய்ந்துபோன தென்னை மரங்களும் செங்கல் சூளையில் எரிக்கப்படுவதற்காக வெட்டப்பட்டுவிட்டன.

500 மரங்களுக்கு மேல் அடர்த்தியாக இருந்த பனங்காட்டில், இன்றைக்கு நூற்றுக்கும் குறைவான மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிர்விடும் தறுவாயில் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கின்றன.

வேளாண்மை சுருங்கி, செங்கல் உற்பத்தி அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பச்சை வயல்கள் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவருகின்றன. நாளை ஒரு நாள் எல்லோருக்கும் வீடு இருக்கும். பணமும்கூட இருக்கும். இல்லாத ஒரே பொருள், உணவாக மட்டுமே இருக்கும்.

கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in