

இ
ளம் வயதில் துடிப்பாகவும் கம்பீரமாகவும் எனக்கு வகுப்பு எடுத்த ஆசிரியையை முதுமையில் (76 வயது) சந்திக்க நேர்ந்தபோது தனிமையில், வறுமையில் ஓர் கூண்டுக் கிளியுடன் தன் வாழ்க்கையை அவர் பகிர்ந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தேன்.
என் அப்பாவுக்கு 83 வயது. இன்றைய சூழலை உள்வாங்கத் தொடர்ச்சியாக முயற்சிக்கும் அவர், அதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு நிகழும் மாறுதல்களை உடலாலும் மனதாலும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஓய்வு நேரத்தை நடைபயில்வது, நடப்புச் செய்திகளைத் தெரிந்துகொள்வது, புத்தகங்களை வாசிப்பது, ஏன் இணையத்தில் முகநூலை கவனிப்பதிலும்கூடச் செலவிடுகிறார். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
எந்த வயதாக இருந்தாலும் ஒரு படைப்பாளனுக்கு அகத் தனிமை என்பது சொர்க்கம். முதுமையில் வறுமையும் தனிமையும் மிக மிகக் கொடியவை. முதுமையில் தனிமை என்பது இப்போது பெரும்பாலோருக்கு நரகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
இன்றைய சராசரி மனிதனே பல்வேறு சிக்கல்களில் ஆழ்ந்திருக்கும் நிலையில், முதியோர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. குடும்பம், வாரிசுகள், உறவுகள், அரசு ஆகியவை இவற்றை கவனத்தில்கொண்டு தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கின்றன.
நம் அனைவரின் வாழ்க்கையும் முதுமையை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. விரைவில் நாமும் அவர்களுடன் ஒருநாள் இணையத்தான் போகிறோம். அவர்களுடன் இணைவதற்கு முன் நம்மால் முடிந்ததை அவர்களுக்குச் செய்ய முயற்சிக்கலாமே.
முதுமையின் பல்வேறு கண்களை, பல்வேறு சூழல்களில் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறேன். அவை பல்வேறு உணர்வுகளை, கவலைகளை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. அவற்றில் சில இங்கே இடம்பெற்றுள்ளன.