

வி
ளையாட்டில் எளிதாகச் சாதிப்பவர்கள் ஒரு ரகம். மெனக்கெட்டு சாதிப்பவர்கள் இன்னொரு ரகம். ரோல் பால் விளையாட்டின் தமிழக ஜூனியர் அனியின் கேப்டன் எஸ்.எஸ். சுஷ்மிதா இதில் இரண்டாவது ரகம். ரோல் பால் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்திலிருந்து, ரோல் பால் பிறந்த மகாராஷ்டிராவின் புனே நகருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார் இவர்!
‘ரோல் பால்’, சமீப காலமாக இந்தியா முழுவதும் பிரபலமாகத் தொடங்கியிருக்கும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை ராஜூ தபாடே என்ற புனேவைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் 2003-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். ஸ்கேட்டிங், கைப்பந்து, எறிப்பந்து, கூடைப்பந்து என்ற நான்கு விளையாட்டுகளையும் இணைத்து, இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வோர் அணியிலும் 12 பேரைக் கொண்ட இந்த விளையாட்டில், இரு அணிகளிலிருந்தும் 6 - 6 பேர் என மொத்தம் 12 பேர் களத்தில் இருப்பார்கள். ஸ்கேட்டிங் செய்துகொண்டே கைப்பந்தை ‘கோல்’ போட வேண்டும். அதிகமாக ‘கோல்’ போடும் அணி வெற்றிபெற்ற அணி.
தமிழக மகளிர் ஜூனியர் அணியின் கேப்டனான பதினேழு வயதான சுஷ்மிதாவுக்கு 12 வயதில்தான் இந்த ‘ரோல் பால்’ விளையாட்டு அறிமுகமாகியிருக்கிறது. இந்த 5 ஆண்டுகளில், தேசிய அளவிலான போட்டிகளிலும் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டு வேகமாக முன்னேற்றம் கண்டிருக்கிறார். இந்த மாதம் நடக்க உள்ள தெற்காசிய போட்டித் தொடரிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
“எட்டு வயதிலிருந்து ‘ஸ்பீட் ஸ்கேட்டிங்’ விளையாடி வருகிறேன். ‘ரோல் பால்’ விளையாட்டு அறிமுகமானபோது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த விளையாட்டில் குழு முயற்சிக்குத்தான் முன்னுரிமை. வெற்றிபெறுவதற்கு உடற்தகுதி மட்டுமல்லாமல், குழு மன நிலையும் முக்கியம். தற்போது, இந்த விளையாட்டு தமிழ்நாட்டிலும் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது” என்கிறார் அவர்.
இந்த விளையாட்டில் தமிழக மகளிர் அணியின் கேப்டனாக இருந்தாலும், அடுத்தகட்ட வளர்ச்சிக்காக புனேவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார் சுஷ்மிதா. தற்போது புனேவில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்புப் படித்துவருகிறார். “இங்கே நிறையப் பேர் இந்த விளையாட்டை விளையாடுவதால், அவர்களுடன் சேர்ந்து பயிற்சிபெற முடிகிறது. அத்துடன், தனிப்பட்ட முறையில் பயிற்சி பெறுவதற்கான வசதியும் இங்கே இருக்கிறது. இப்போது உலகம் முழுவதும் 43 நாடுகளில் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த விளையாட்டு ஒலிம்பிக்கில் நிச்சயம் இடம்பெறும் என்று நம்புகிறேன். ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டில் இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்வதுதான் என் கனவு” என்கிறார் அவர்.