

ச
க்கர நாற்காலியில் அமர்ந்தபடி இறந்து கிடந்த சக்ரபாணிக்கு வயது 60. முதல் மனைவி 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அதற்குப் பிறகு தனியாகவே வாழ்ந்தவர்.
மூன்று வருடங்களுக்கு முன் பிரேமலதா என்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கெனவே திரைப்படத்தில் நடிக்கும் ஆசையைக் கொண்டிருந்தவர் பிரேமலதா. திருமணத்துக்குப் பின் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. கதாநாயகியாக அல்ல, சின்னச் சின்ன கவர்ச்சி வேடங்கள். நடிக்க வேண்டாம் என்று தடுத்தார் சக்ரபாணி. முடியாது என்றார் பிரேமலதா. இதைத் தொடர்ந்து மனக் கசப்பு அதிகமாகி இருவரும் பிரிந்தனர்.
ஒரு வருடத்துக்கு முன் சாலை விபத்தில் சக்ரபாணி கால்களை இழந்தார். அதற்குப் பிறகு சக்கர நாற்காலிதான் கதி என்று ஆனது. உதவிக்கு நரசய்யா என்ற பணியாளை வைத்துக்கொண்டார்.
இப்போது பிரேதமாக சக்கர நாற்காலியில் கிடக்கிறார். இன்ஸ்பெக்டர் விக்ரமும் துப்பறியும் ராம்சேகரும் அங்கு வந்திருந்தனர்.
அருகில் டாக்டர் சரவணன் நின்றுகொண்டிருந்தார். “கடந்த ஒரு மணி நேரத்துக்குள்தான் இறப்பு நேர்ந்திருக்க வேண்டும். கடுமையான மாரடைப்பு” என்றார்.
ராம்சேகர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு ஒன்பதரை. அடுத்து அவரது பார்வை நரசய்யாவின் மீது பதிந்தது. அவர் கதறத் தொடங்கினார்.
“ஐயாவை விட்டு நான் எப்போதுமே நகர்ந்ததில்லை. ராத்திரிகூட ஐயா அறையிலேயே தங்குவார். நான் அறைக்கு வெளியே தூங்குவேன். நடு ராத்திரியில் ஏதாவது தேவை என்றால் குரல் கொடுப்பார். நான் உடனே எழுந்து போய் அவருக்கு உதவுவேன். இனிமேல் எங்கய்யாவை எங்கே பார்க்கப் போறேன்!”
“சக்ரபாணி இறந்தபோது நீங்க பக்கத்திலே இல்லையா? டாக்டரைக் கூப்பிட்டது யார்?”
கண்ணீரைத் துடைத்தபடி நரசய்யா பதிலளித்தார்.
“என் அம்மா ஊரிலே படுத்த படுக்கையாய் இருக்காங்க. எங்க ஊரைச் சேர்ந்த ஒருத்தன், இந்த ஊருக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவனை நேரே பார்த்து விசாரித்து வரலாம்னு போனேன். ஒன்பது மணிக்குக் கிளம்பினேன். கிளம்பிய அரை மணி நேரத்திலே வந்துட்டேன். அதுக்குள்ளே எங்க ஐயா இறந்துட்டாரு” என்றார் நரசய்யா தேம்பியபடி.
“வெளியிலிருந்து திரும்பிய பிறகு இங்கிருக்கும் எதையாவது தொட்டீங்களா?” என்று இன்ஸ்பெக்டர் விக்ரம் கேட்க, தான் எதையும் தொடவில்லை என்று உறுதியாகக் கூறினார் நரசய்யா.
அது உண்மையாக இருக்கக்கூடும் என்றே பட்டது. தொலைக்காட்சி இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது.
நரசய்யா சில ஒளிப்படங்களை இன்ஸ்பெக்டரிடம் காட்டினார். அதில் சக்ரபாணியின் முதல் மனைவி, இரண்டாவது மனைவி ஆகியோரின் படங்களும் இருந்தன.
“ஓ.. இதுதான் அவரோட இரண்டாவது மனைவியா? இவங்களுடைய பேட்டிதான் 9 மணியிலேயிருந்து இந்த சானலிலே ஓடிக்கிட்டிருந்தது. நடுநடுவே அவங்களுடைய கவர்ச்சியான ஒளிப்படங்களையெல்லாம் தொடர்ந்து காட்டிக்கிட்டிருந்தாங்க” என்றார் விக்ரம்.
துப்புறியும் ராம்சேகர் கூடத்தில் உள்ள பொருள்களை ஒவ்வொன்றாகக் கவனிக்கத் தொடங்கினார். ரோஜாப் பூக்கள் அடங்கிய பூ ஜாடி ஒன்று இருந்தது. சக்ரபாணியின் அருகில் இருந்த சிறு மேஜை ஒன்றில் அவர் கைக்கு எட்டும் இடத்தில் ரிமோட் இருந்தது.
சற்று நேரத்தில் தகவலைக் கேள்விப்பட்டு பிரேமலதா வந்தார். சக்ரபாணியின் இறந்த உடலைக் கண்டதும் அவர் முகத்தில் அதிர்ச்சியும் கூடவே ஒரு சிறிய நிம்மதி பரவுவதையும் ராம்சேகரால் உணரமுடிந்தது. அவர் வாயில் கைக்குட்டையை வைத்து அடைத்தபடி விம்மினார்.
கூடத்தில் இருந்த பொருட்களை மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார் ராம்சேகர்.
“மாரடைப்பால் இறந்தார் என்றுதான் டாக்டரும் சொல்றார். இதுக்கு மேலே இந்த விஷயத்திலே நாம் செய்ய வேண்டியது எதுவுமில்லை” என்றார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.
மறுப்பதுபோல் தலையசைத்தார் ராம்சேகர். நரசய்யாவின் பாக்கெட்டுகளைச் சோதிக்கச் சொன்னார். பின் அவசரமாக வாசலுக்குச் சென்று அங்கிருந்த குப்பைக் கூடையில் உள்ள பொருட்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
ராம்சேகரின் இந்தச் செயல்பாடுகளுக்குக் காரணம் என்ன, அவர் மனதில் உதித்த சந்தேகம் என்ன?
சென்ற வார விடை
கார் ஓட்டுநர் சத்தம் போட்டதும், அவரது கைகளைப் பிடித்துக்கொண்ட ராம்சேகரின் செயலுக்குக் காரணம் என்ன?
என்னதான் பூங்காவின் வாசலில் எதிர்ப்படுவது வயலெட் நிற கார் என்றாலும், அதன் பதிவெண்ணின் கூட்டுத் தொகையும் திருடனுக்கு ராசியான 3 என்பதாக இருந்தாலும், அது அச்சுதனின் காராக இருக்க முடியாது. அதே பகுதியில் வசிக்கும் ஒருவரின் காரை பதிவெண்ணைக்கூட மாற்றாமல் யாரும் அங்கு கொண்டுவர மாட்டார்கள். அதுவும் திருடன் வெளியில் ஓடிக்கொண்டிருக்கிறான்.
ஆனால், திருடனின் கை எதிரில் வந்த காரின் முன்புறம் பதிந்திருக்கிறது. அதாவது அவனது கைரேகை இப்போது கிடைத்திருக்கிறது. ஓட்டுநரின் கை தற்செயலாக அந்தப் பகுதியில் பட்டு திருடனின் கைரேகை அழிந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் ராம்சேகர் கார் ஓட்டுநரின் இரு கைகளையும் பிடித்துக்கொள்கிறார். அங்கிருக்கும் காவல்துறையைச் சேர்ந்தவரை அழைத்து காரின் மீது பதிந்துள்ள கைரேகையைப் பதிவு செய்யும் ஏற்பாடுகளில் இறங்குகிறார்.
(துப்பறியலாம்)