

வழக்கமாக விஜய் - அஜித் ரசிகர்கள்தான் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பார்கள். ஆனால், தற்போது அந்த இடத்தை ரஜினி - விஜய் ரசிகர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள். ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி ‘காக்கா - கழுகு’ பற்றி ‘ஒரு குட்டி ஸ்டோரி’ சொன்னார். இதைப் பற்றி சமூக வலைதளங்களில் எழுதுவார்கள் என்றும் கடைசியில் ரஜினி ஊகமாகச் சொல்லியிருந்தார்.
அவர் சொன்னது போலவே சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கியவர்கள், அதைப் பற்றி எழுதித் தீர்த்துவிட்டார்கள். அந்தக் கதையில் யார் காக்கா, யார் கழுகு என்பதைப் பற்றி விளக்கவுரைகளை இணையவாசிகள் எழுதவும் தவறவில்லை.
கதை பற்றி இணையவாசிகள் எழுதிய தீர்ப்பால் சமூக வலைதளங்களில் ரஜினி - விஜய் ரசிகர்கள் காரசாரமாக முட்டி மோதிக்கொள்ளத் தொடங்கினர். உச்சகட்டமாக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி, அதையும் சமூக வலைத்தளங்களில் பகிரவும் செய்திருக்கிறார்கள் ரசிகக் கண்மணிகள்.
இதில் மாறுபட்ட பார்வைகளும் இல்லாமல் இல்லை. உண்மையில் கழுகு அளவுக்கு காக்கா பலமானது இல்லை என்றாலும், கழுகை, காக்கா விடாமல் தைரியமாக விரட்டும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ரஜினி இவ்வளவு காலம் சூப்பர் ஸ்டாராக அடையாளம் பெற்றுவிட்டார். அவருக்கு வயதும் ஆகிவிட்டது. வேண்டுமென்றே சர்ச்சையைத் தூண்டும் வகையில் அவர் இப்படிப் பேச வேண்டியதில்லை எனச் சிலர் சொல்கிறார்கள்.