

உலகிலேயே இலவசமாகக் கிடைக்குமென்றால் அதில் முதன்மையானது கருத்துகள்தான். அதிலும் கருத்துகளை அள்ளிவீசுவதில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதுதான் பெருமைக்குரியது எனப் பெருமை கொள்ளலாம்! இந்தக் கருத்துக் கர்த்தர்கள் உதிர்க்கும் கருத்து முத்துகளால் சகமனிதர்களுக்கு ஏதேனும் ஒரு சிறிய பாசிமணி கோக்கும் அளவுக்குத் தேறுமா என்றால் பெரிதாக இடிக்கும். துப்பின குழிக்கு மண்ணள்ளிப் போடாதவர்கள்கூட நாசா விஞ்ஞானிகளே திரும்பிப் பார்க்கும் அளவில் கருத்துசொல்வதைக் காணலாம்.
அடுப்பை விட்டு இறக்கிய சாம்பாரில் உப்பை வாரியிறைப்பது எங்ஙனம்? ரசத்தில் தக்காளியை வதக்கிச் சேர்க்கலாமா, கசக்கிப் பிழிந்து இடலாமா? மூக்குப் பொடியை உறிஞ்சிக் கொள்வது எப்படி? மண்சட்டியில் கொதிக்கும் மீன் குழம்பில் பச்சை மிளகாயை வகுந்து வீசுவது எப்படி? கொத்த வேலைகளின் நடுவே சுக்குக்காப்பி தயார் செய்து, நாவுகள் சுட்டுவிடாமல் பருகுவது எப்படி? நாக்கு வலித்தாலும் இடைவிடாமல் பாடுவது எப்படி? ஆகாய விமானம் பறக்கும்போது டீசல் அடிப்பது எப்படி என்று தொடங்கி செவ்வாய்க் கிரகத்துக்குச் செங்கல் ஏற்றுமதி செய்வது எப்படி? நிலவில் நீர் உற்பத்தி செய்வது எப்படி? இப்படி இணையத்தில் இந்தியர்கள் தூவும் கருத்துகள் உலகப் பிரசித்தி பெற்றவை.
முன்பெல்லாம் ஊர் ஊருக்கு ஆற்றங்கரைப் படிக்கட்டுகள், அணைக்கட்டுகள், கோயில் முகப்புகள், ஊர்முச்சந்தியில் அமர்ந்துகொண்டு கருத்துகளைப் பங்குவைத்த பாங்கிழடுகளைக் காலம் கடத்திக்கொண்டு போய்விட்டது. ஆதலால் தற்சமயம் நம்முடைய இளைய தலைமுறையே மனதளவில் வயோதிகர்களாக உருமாற்றம் அடைந்து மேற்கூறிய வகையறா கருத்துகளைப் பல்படாமல் பரிமாறுகிறார்கள்.
முந்தியொரு காலத்திலே: “அதாவது அந்தக் காலத்துல நாங்கெல்லாம் தெரு வெளக்குக்குக் கீழ உக்காந்து படிச்சோம்!” என்று கதைகளை அளக்காமல் விட்ட அறுபதுகளில் பிறந்த அச்சன்மாருக்கு தற்காலத்தில் பூமர்கள் என்று நாமகரணம் வைத்துக் காதுகளில் அரளிப்பூச் சூடி மூலையில் அமர வைத்திருக்கிறோமல்லவா? அந்தச் சாபம்தான் தற்சமயம் மேற்கூறிய அரையாப்புகளின் அறிவுரைகளைக் கேட்கும்படியான வன்சூழலுக்கு நம்மை ஆளாக்கியிருக்கிறது.
கருத்துகளில் அதி உச்சம் என்னவென்றால் மருத்துவக் கருத்துகள்தாம். அதிலும் நாம் மிகுந்த உடல் உபாதையிலோ வலியிலோ இருக்கும்போது அந்தக் கருத்துகளைச் சொல்பவர்களின் முகங்களைப் பார்த்தால் தூக்குமேடையிலோ, பாகிஸ்தான் பார்டரிலோ நிற்கும் ஆசாமிகளின் முகங்களை ஒத்ததாக இருப்பதுதான், அந்தக் கருத்துகளைவிடக் கொடியதாக இருக்கும்.
ஊருக்குள் சவடால்களை ஏறெடுத்த ஒரு பிரகஸ்பதியின் உடல்சூட்டைத் தணிக்க நல்லெண்ணெய்க் குளியலையும், பனங் கள்ளையும், பன்றிக்கறியையும் பரிந்துரைத்திருக்கிறார் ஆசான் ஒருவர். இம்மூன்றுமே தனித்தனியான நிவாரணிகள் என்பதை ஆசான் சொல்லாமல் விட்டுவிட்டார்.
அதிகாலையில் எழுந்த மேற்படியான் தலையில் நல்லெண்ணெயைத் தேய்த்துவிட்டு, பன்றிக்கறியையும் சமைத்து எடுத்துக்கொண்டு பனங்காட்டுப்பக்கம் சென்றார். அங்குக் கள்ளு குடித்துவிட்டுக் கறியையும் தின்றுவிட்டுக் குளத்தில் இறங்கிக் குளித்தவர் உடலிலுள்ள மொத்தச் சூடும் தகர்ந்து ஜலத்தின் ஆழத்திலேயே ஜலசமாதியானார். ஜீவனோடு இருந்தால்தானே சூடும் பாடும்?
கருத்துச் சொல்வது ஒரு பக்கமிருந்தாலும் அந்தந்தக் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்பவர் யாராக இருக்க வேண்டும்? இதில்தான் ஒரு விஞ்ஞானம் ஒளிந்திருக்கிறது. வயிற்றுவலிக்குப் புன்னைக்காயை வைத்தியர் பரிந்துரைக்கக் கேட்டு புன்னைக்காய், என்று நினைத்துக் காசரளிக்காயைப் பறித்துத் தின்றுவிட்டு பரலோகத்தின் படிக்கட்டில் போய் அமர்ந்த ஆசான் ஒருவர் இவ்வுலகுக்கு அறிவித்த காரியம் இதுதான்.
‘அகில உலகக் கருத்துகளை இவ்வுலகுக்குச் சொல்வது இருக்கட்டும். கருத்துகளைக் கருத்துகளாக அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றைக் கேட்கும் காதுகளுக்கும் கருத்துக் கேட்பதற்குரிய ஒரு பந்தத்தை நம்முடைய மனம் அல்லது மூளைக்கு நாம் வழங்க வேண்டும்!’ என்பதே அது. ஏனெனில் வயிற்றுவலி வந்தால் புன்னைக்காய் எண்ணெயைத் தொப்புளில் தடவுவார்களே ஒழிய, அதை ஒருபோதும் மனிதர்கள் குடிக்க மாட்டார்கள். எதையும் முழுதாகக் கேட்டால்தானே முத்தைய்யா?
குழந்தை வளர்ப்பில் ஏலியன்கள்: தற்சமயம் இந்த உலகம் இணையக் கருத்துக் கர்த்தர்களின் அகோரப்பிடியில் மாட்டிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆண் துணையின்றிக் கருத்தரிப்பது எவ்வாறு? வீட்டிலிருந்தபடியே பிரசவம் பார்ப்பது எப்படி? மூலிகைகளின் வாயிலாகக் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? மூலமுளைக்கு வீட்டிலிருந்தபடியே கத்தியில்லா அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி? என்றெல்லாம் மருத்துவத்துக்கு அப்பாற்பட்ட அதியற்புதக் காரியங்களைக்கூட ‘அட இம்புட்டுதானா? இதுக்கா எம்பிபிஎஸ் படிக்கானுவோ?’ என்பதைப் போல மேற்கூறிய ஞானப்பொருள் பொதிந்த பொக்கிஷத் தகவல்களைப் பொருளாதார வல்லுநர்களே விளக்கும் அளவுக்கு இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இதற்கென்று தனியாக வகுப்புகள் வேறு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணும்போதுதான் ‘கெதக்’ என்றிருக்கிறது.
அதிலும் குழந்தை வளர்ப்பு என்றொரு கலை, சிலை, மலை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். நம்முடைய பெற்றோர்களின் கைகளில் பிரம்பு என்றொரு தூரிகை இருந்தது! அதை அவர்கள் தோல் காகிதமாகிய நம் உடல்மீது வரைந்து அழகுபடுத்தினார்கள். தும்மல் போட்டாலேயே டிப்ரெசன் ஆயிட்டேன்! இண்டர்நேஷனல் பேரண்டிங்காம்! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
- writerprabhudharmaraj@gmail.com