

பி
ரவின் குமார் பள்ளி செல்லும் காலத்தில் மிகவும் தாமதமாகவே வகுப்புக்குச் செல்வார். அதற்குக் காரணம், அவர் வசித்த வீடு இருந்த இடத்திலிருந்து திறந்தவெளி கழிவறை மிகவும் தூரத்தில் இருந்தது. அதற்காகப் பல கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அப்படிச் சென்றுவிட்டு வருவதற்குத் தாமதம் ஆனதால், பள்ளிக்கும் தாமதமாகவே சென்றார் பிரவின். தன்னைப் போல பிறரும் இதே போன்றதொரு கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் அவருடைய ஆழ்மனதில் தகித்தது.
அந்த எண்ணம்தான் அவர் இளைஞரானதும் ‘ஸ்ரீ’ (Sanitation and Health Rights in India - SHRI) எனும் அமைப்பை அமைக்கத் தூண்டியது. கழிவறைகள் இல்லாத குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய கழிவறைகளைக் கட்டவும் அந்தச் சம்பவம்தான் அவருக்கு தூண்டுகோலாக இருந்தது.
பிரவின் குமாருடன் அவருடைய நண்பர்களான சந்தன் குமார், கனடாவைச் சேர்ந்த அனூப் ஜெயின் ஆகியோர் இணைந்து 2010-ம் ஆண்டு ஸ்ரீ அமைப்பை உருவாக்கினர். நான்கு ஆண்டுகள் கழித்து பிகாரின் நெமுவா கிராமத்தில் 16 கழிவறைகளுடன் கூடிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பொதுவாக இது போன்ற கழிவறைகள் கட்டும்போது, அவற்றைப் பராமரிக்க போதிய நிதி இருக்காது. அதனால், ஒரு கட்டத்தில் கழிவறைகள் செயலற்றுப் போய்விடும். ஆனால், ஸ்ரீ அமைப்பு வடிவமைக்கும் சுகாதார வளாகம் இதிலிருந்து சற்றே மாறுபட்டது. சாதாரணமாக வடிவமைக்கப்படும் பொதுக் கழிவறைகளில், மனிதக் கழிவு நிலத்தடியில் அமைக்கப்பட்ட தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படும்.
ஆனால், இவர்களோ கழிவைச் சேகரிப்பதற்குப் பதிலாக, அதை உயிரித் தொழில்நுட்பம் மூலம் மின்சாரமாக மாற்றுகிறார்கள். பின்னர், அந்த மின்சாரத்தைக் கொண்டு, ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரைப் பெற்று, அதைச் சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு சுகாதார வளாகத்தையும் பராமரிக்கிறார்கள். இந்தப் பாணியில் பிஹாரின் 5 குக்கிராமங்களில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுபற்றி பிரவின் குமார் கூறும்போது, “ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதார வளாகம் கட்டுவதற்கு முன்பு அந்தப் பகுதி மக்களுக்கு சுகாதாரத்தின் அவசியத்தை எடுத்துரைக்கிறோம். பின்னர், கிராம மக்களின் பங்களிப்புடன், உயிரித் தொழில்நுட்பத்தில் இந்தச் சுகாதார வளாகத்தை அமைக்கிறோம்.
யுனிசெஃப் அமைப்பினர் இந்த வளாகத்தைப் பார்வையிட்டுப் பாராட்டிச் சென்றனர். இதுபோன்ற கழிவறைகளை உலகெங்கும் அமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. எதிர் காலத்தில் அரசின் உதவியுடன், நாடு முழுவதும் இதுபோன்ற நவீன சுகாதார வளாகங்களை அமைக்க உத்தேசித்துள்ளோம்.
திறந்தவெளிக் கழிவறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு” என்று உறுதியாகக் கூறுகிறார்.