நளி நாட்டியம் 10: சும்மா சிரிக்கத்தான் | எங்கெங்கும் புகழ் வேட்டையர்கள்!

நளி நாட்டியம் 10: சும்மா சிரிக்கத்தான் | எங்கெங்கும் புகழ் வேட்டையர்கள்!
Updated on
3 min read

புத்தாயிரத்தின் தொடக்கத்திலேயே தொழில்நுட்பங்களின் யுகம் ஆரம்பமாகி விட்டது. நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்பதை 2023இல் உறுதியாகச் சொல்லிவிட முடியும். அதில் முக்கியமானது புகழ்வேட்கை.

முன்பெல்லாம் சினிமா வாய்ப்புக்காகக் கோடம்பாக்கம் வந்து ஐந்துக்கு நாலு இஞ்ச் சைஸில் ஒளிப்படத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்குவார்கள். இப்படி அலைந்து திரிந்து திரையில் ஏதோவொரு மூலையில் நின்று தங்கள் கலைத் தாகத்தைத் தணித்துக் கொண்டார்கள் மனிதர்கள். ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை.

தங்களுடைய வீட்டுக்குள்ளிருந்தே தங்களது திறமைகளைக் காணொளிகள் மூலம் வெளிப்படுத்தி புகழ்பெற்று வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். இதுவொரு ஆரோக்கியமான காலகட்டம்தான். என்றாலும் இவர்கள் செய்யும் காரியங்கள் மனநல மருத்துவர்களுக்குப் பொருளாதார ரீதியிலான வசதிகளை உருவாக்கி, கார் வாங்கி, பங்களா கட்டும் சூழலுக்குத் தள்ளியிருக்கிறது.

பின்னேஎலும்புமுறிவு நிபுணர்களைச் சொல்லவே வேண்டாம். சாதாரணக்கார்களை எடைக்குப் போட்டுவிட்டு பிரீமியம் கார்களைக் கொள்முதல் செய்யுமளவுக்கு ரீல்ஸ் புகழ் கோயிந்தன்கள் மற்றும் கோயிந்தம்மாள்கள் ஆயத்தப் படுத்தியிருக்கிறார்கள்.

ரீல்ஸ் ரீங்காரர்கள்: முன்பு புகழ்பெற்ற மனிதர்களை நூலகங்களிலோ அரசு அலுவலகங்களிலோ புத்தகங்களிலோ ஒளிப்படமாய்க் காண முடியும். ஆனால், இப்போது ஒரு தெருவில் புகழ் பெறாத மனிதர்களை விரல் விட்டு எண்ணி விட முடியும். சமூகவலைதளங்களால் ஆயிரக்கணக்கான சாதகங்கள் இருப்பதைப் போலவே பாதகங்களுக்கும் பஞ்சமில்லை. ‘சேலஞ்ச்’கள் என்ற பெயரில் நூற்றுக் கணக்கான பிரகஸ்பதிகள் கடவுள் பாதம் பணிந்த பிற்பாடுமேகூட பொதுவெளிச் சாகசக்காரர்களின் சேட்டைகள் குறையவில்லை.

மலை உச்சியில் நின்றுகொண்டு நடனம் புரிந்து நிலம்புகுதல், ஐஸ்கட்டிகளைத் தலையோடு ஊற்றி, ஜன்னி கண்டு மருத்துவமனையில் படுத்தல், ஓடுகிற வண்டிகளிலிருந்து சடாரென இறங்கிச் சாலையில் டான்ஸ் ஆடி அதே வண்டியின் சக்கரத்தில் சிக்கிச் சவப்பெட்டிக்கு அளவெடுத்தவர்கள் எனக் கடுமையானதொரு பட்டியல் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், புகழ் போதைதான். ஆட்களைச் சகட்டுமேனிக்குத் திட்டி வசைபாடியே புகழ்பெற்றவர்களும் உண்டு.

தன்னுடைய மகள் ஓர் அறையைப் பூட்டிக்கொண்டு தனக்குள்ளாகவே மெய்மறந்து பல்வேறு முகபாவனைகளோடும் அபிநயங்களோடும் ஏதேதோ செய்கிறாள் என்று சொல்லி மந்திரவாதியிடம் அழைத்துப் போனார் தந்தை. அது டிக்டாக் வீடியோவுக்கான ஏற்பாடு என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் மந்திரவாதிக்கே பேய் பிடித்துப் போனதாம். நடுரோட்டில் படுத்தவாறே நடித்துக்கொண்டிருந்த இளைஞரை வலிப்பு வந்ததாய்க் கருதி அவரது கையில் சாவிக் கொத்தைப் பிடித்து அழுத்தி நடிகர் பெருமானின் கைவிரல்கள் முறிந்து போனது ஒரு தனிக்கதை.

நடுரோட்டில் நின்றுகொண்டு திங்குதிங்கென்று குதித்து ஆடுவது, பிரபல நடிகர்களின் சினிமா வசனத்தை வெறுமனே வாயைக் காற்றில் அசைத்து சன்னமாகப் பேசி நடிப்பது, சண்டைக்காட்சிகளை எவ்விதப் பாதுகாப்புமின்றி நிஜத்தில் படமெடுத்து இடிவாங்கி ஐசியூவில் அனுமதி பெற்றுக் கிடப்பது, பொதுவெளியில் சுட்டகாகம் பறந்தது என்று பொய் சொல்லி லட்சக்கணக்கில் லைக்ஸ் வாங்கி உள்ளுக்குள் அகமகிழ்வது என்று ஒருகட்டத்தில் மனப்பிசகுக்கு ஆளாகும் மனிதர்களைக் கண்டால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஸ்மியுல், டிக்டாக், ஃபேஸ்புக் ரீல்ஸ் என்று இந்தப் போதை நீண்டுகொண்டே போவதை நினைத்தால் சிறிது அச்சமாகத்தான் இருக்கிறது.பொது இடங்களில் நின்றுகொண்டு இவர்கள் செய்யும் கோமாளித் தனங்களுக்கு எல்லையே இல்லை. சமீபத்தில் நடுரோட்டில் ஒருவரைக் கத்தியால் குத்த ரவுடியொருவர் துரத்தும் காட்சியைக் கண்டு பொதுமக்கள் திகைத்துத் தடுக்க முற்பட்டபோதுதான், துரத்தியவரின் பின்பாக ஒரு கேமராமேன் ஓடியது பிடிகிட்டியது. ரீல்ஸ் ஷூட்டிங்காம். இப்போது இதிலுள்ள அபாயம் புரிகிறதா? இப்படியே போனால் நிஜமாகவே ஒருவரை ஒருவர் பொதுவெளியில் தாக்க முற்பட்டால் யாரும் யாரையும் தடுக்கப் போவதில்லை.

நடுச்சாலை நர்த்தனங்கள்: இரண்டு நாட்களுக்கு முன்பாக பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் ஓர் இளம்பெண்ணை இளைஞரொருவர் தூக்கி இடுப்பில் வைத்து முத்த மிட்டபடி கொஞ்சிக் கொண்டே நடந்துபோகும் காட்சியொன்றை ஊடகங்கள் ஒளிபரப்பின. வேறு செய்திகளா இல்லை? இப்படியாக ரீல்ஸ் என்ற பெயரில் பொதுவெளியில் மக்களுக்கு உபத்திரவம் கொடுப் பவர்களை ஊடகங்கள் வளர்த்து விடலாமா?

கொஞ்சக் காலத்துக்கு முன்னர் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்தவாறே இரவு பகல் பாராமல் கண்விழித்து டிக்டாக் வீடியோக்களை எடுத்துவெளியிட்டு மகிழ்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டு மனநலம் பாதிக்கப் பட்டார். இப்படிப் பலரும் ஏதோவொரு வகையில் சமூகவலைத்தளக் காரியங் களால் தங்களை அறியாமலேயே நிறைய இழப்புக்கு ஆளாகிறார்கள்.

முகமே அறியாதவர்களோடு நட்பு பாராட்டுவது, விரோதம் பாராட்டுவது அதிகரிப்பது ஒருவிதக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கட்சி யொன்றைத் திட்டி அதன் தலைவரைக் கலாய்த்த இளைஞரை அக்கட்சியின் தொண்டர்கள் அவரது வீட்டுக்கே சென்று கத்தியால் குத்திய நிகழ்வை என்னவென்று எடுத்துக்கொள்வது?

ரீல்ஸ் ஆசாமிகள் செய்யும் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கும்போது தனிமனிதத் தவறுகளால் திடீரென நிகழ்ந்து விடும் அசம்பாவிதங்கள்தான் அச்சத்தைத் தருகின்றன. ஆற்றில் போன வெள்ளத்தைப் பார்வையிடப் போய் ரீல்ஸ் வீடியோ எடுத்து தன்னுடைய ஒன்றரை வயதுப் பெண் குழந்தையைக் கைதவறி ஆற்றோடு விட்டார் ஒரு பெண்மணி. செல்போன் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தது. நண்பர்களோடு அருவியில் குளிக்கும்போது ஆபத்தான காரியங் களைப் புரிந்துகொண்டு காட்டாற்று வெள்ளத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தார் ஓர் இளைஞர்.

உலகிலுள்ள எல்லாவிதமானக் கேள்விகளுக்கும் தப்பும் தவறுமாக ஏதேனும் ஒரு பதில் யூடியூபில் இருக்கும் என்று மனிதர்களை மனிதர்களே நம்ப வைத்தார்கள். அதுதான் இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய நகைச்சுவையும் சோகமும். சமீபத்தில் இளம்பெண்ஒருவரை மனநோய் மருத்துவமனைக்குஅழைத்து வந்திருக்கிறார்கள். அவளிடம் மருத்துவர் என்ன பிரச்சினை என்று கேட்டதற்கு அவள் சொன்ன பதில் அந்த மனநல மருத்துவரை இன்னொரு மனநல ஆலோசகரிடம் அனுப்ப ஏதுவாய் அமைந்திருக்கிறது.

“என்னுடைய சொப்பனங்களில் வரும் ரசிகர்கள் யாரும் எனது நடனத்துக்கு கைதட்ட மறுக்கிறார்கள்!” என்பதே அது.

- writerprabhudharmaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in