Published : 17 Nov 2017 09:25 AM
Last Updated : 17 Nov 2017 09:25 AM

குரு - சிஷ்யன்: சிஷ்யனான ஆசிரியர்; குருவான மாணவர்

 

ல்லூரியில் பணியில் இருந்த சமயம். ஒரு நாள் “சார், பிரின்ஸ்பால் ரூமுக்கு உங்களை வரச் சொன்னார். டிஎஸ்பி வந்திருக்கார். உங்களைப் பார்க்கணுமாம்!” என்று பியூன் சொல்லிவிட்டுப் போனார்.

‘டிஎஸ்பியா? சரியாப் போச்சு. பழயப் போராட்டப் பிரச்சினையக் கிளப்புறாங்களோ...’ என்ற யோசனையுடன் சென்றேன்.

முதல்வர் அறைக்குள் நுழைந்த என்னைப் பார்த்து டிஎஸ்பி எழுந்து நின்று, “சார்… வணக்கம்...” என்றார்.

எனக்குச் சட்டென அடையாளம் தெரியவில்லை.

“சார், நான்தான் பாண்டியராஜன். தெரியுதா சார்..?” என்று அவரது பெயரைச் சொன்னதும், எனக்கு அடையாளம் தெரிந்தது.

“ஓ… தம்பி நல்லா இருக்கீங்களா?” என்று பெரு மகிழ்ச்சியுடன் அவரது கைகளைப் பற்றிக்கொண்டேன்.

என்னுடைய முன்னாள் மாணவர்களுள் ஒருவரான பாண்டியராஜன்தான், அன்று காக்கி உடையில் டிஎஸ்பி-யாக என்னைப் பார்க்க வந்திருந்தார்.

இன்னொருமுறை மஹாலில் உள்ள சப்-ரிஜிஸ்டர் ஆபீஸுக்குப் பத்திரம் ஒன்றைப் பதிய என் மனைவியோடு சென்றிருந்தேன். “கையெழுத்துப் போட ரிஜிஸ்டர் உங்களைக் கூப்பிடுகிறார்…” என்றதும் உள்ளே போனோம்.

“சார் நீங்களா..?” என்றபடி எழுந்து நின்று வரவேற்றார் சப்-ரிஜிஸ்டர்.

“சார்... உட்காருங்க. நீங்க நிற்க வேண்டாம்..!” என்றார். என் மனைவியைப் பார்த்து காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டேன். என் முன்னாள் மாணவர் சப்-ரிஜிஸ்டராக அன்று என் முன்னே நின்றிருந்தார்.

இப்படியாக என் மாணவர்களின் எதிர்பாரா திடீர் சந்திப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. என் மாணவர்கள் பல அவதாரங்களில் தூணிலும் இருக்கிறார்கள்; துரும்பிலும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மாணவர்களில் மிக முக்கியமான ஒருவரைப் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் சந்தித்தேன். என் மகள் இன்ஜினீயரிங் கவுன்சலிங்குக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவிட்டு, அப்படியே குடும்பத்தோடு கோளரங்கம் பார்க்கச் சென்றோம்.

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்துக்குள் நுழைந்தவுடன் எதிரில் வந்த ஒருவர், “சார்… நல்லா இருக்கீங்களா..?” என்றார். அந்தப் பழைய மாணவரின் முகத்தையும் குரலையும் கேட்ட அடுத்த நொடியே சட்டென நான் அடையாளம் கண்டுகொண்டேன்.

“ஹலோ சீனிவாசன், நீங்க இங்க எப்படி..?” என்றேன்.

“சார்… நான் இங்க சயின்டிஸ்ட்டா வேலை பார்க்கிறேன்” என்றார்.

எனக்குப் பெரும் மகிழ்ச்சி. சரியாய் 35 ஆண்டுகளுக்கு முன் (1979-82) நல்ல சிவப்பாக, மலர்ச்சியான முகத்துடன் மாணவராகக் கல்லூரியை வலம்வந்த சீனிவாசன் மறக்க முடியாத மாணவர்களுள் ஒருவர். நான் பணியாற்றிய கல்லூரியில் அவன் வேதியியல் படித்து வந்தான். அமைதியாய் அடக்கமாய் அதிர்ந்துபேசாத ஒரு மாணவன்தான் சீனிவாசன். அன்றைக்கு வகுப்பில் பார்த்த அவரது உருவம் என் கண்ணில் இன்றைக்கும் அப்படியே நிழலாடியது. ‘டிஸ்ஸெக்ஷன்’ செய்வதில் மென்மை… சோதனை செய்வதில் பொறுமை... ரெக்கார்ட் வரைவதில் அருமை… அப்போதே அவர் அரை விஞ்ஞானியாய் இருந்தார். கடந்துபோன காலத்தில், இப்போது என் முன்னே முழு விஞ்ஞானியாய் நின்றிருந்தார்.

rajamanikam இராஜமாணிக்கம் right

“நீங்க அன்னிக்கு எனக்கு ஆசிரியரா இருக்கையிலே கிளாஸ்ல ஒவ்வொன்றைப் பத்தியும் சொல்லிக் கொடுத்தீங்க. இப்ப நான் உங்கள் குடும்பத்துக்கே சொல்லிக் கொடுக்கிறதைப் பெருமையா நினைக்கிறேன். இதை நான் படிச்சதுக்குச் செய்யுற பலனா நினைக்கிறேன், வாங்க சார் ”என்று என்னையும் என் குடும்பத்தினரையும் அழைத்துப்போய் ஒவ்வொன்றாக விளக்கிக் காண்பித்தார்.

சீனிவாசன் ஒவ்வொரு காட்சிப் பொருளையும் விளக்கி, தெளிவாக, அழகாக விவரித்த விதத்தில், அன்று நான் சிஷ்யனாகி அவர் என் குருவானார். பின்னர், விஞ்ஞான் பிரச்சார் வானொலித்தொடர் பயிற்சிக்கு நான் சென்றிருந்தபோதும், என்னை அழைத்துச் சென்று புதிதாக இருந்த சில காட்சிப் பொருட்களை விவரித்துச் சொன்னார்.

இது நடந்து சுமார் 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ஆகிவிட்ட செய்தி அறிந்து மகிழ்ந்தேன். அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களுடன் போய்ச் சந்தித்து, வாழ்த்தைப் பகிர்ந்தேன். அரசின் உயர் பொறுப்பில் என் மாணவரைப் பார்த்தபோது ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாய்’ போல் மகிழ்ந்தேன்.

அப்போதுகூட “சார்… நீங்க ஜூவாலஜி பிராக்டிகல்ல அம்பதுக்கு அம்பது போடுவீங்களே..!” என்று முகமலர்ச்சியோடு என் வகுப்பறை நினைவுகளைத் தூண்டிவிட்டார். ஆமாம்… அன்றைக்கு அந்த மாணவனின் மனதினில் இருந்த அறிவியல் ஆர்வத்தை அடையாளங்கண்டு, அவனது செயல்முறைகளை அங்கீகரித்து, முழு மதிப்பெண் அளித்தது இன்று தொழில்நுட்ப மன்றத்தை நோக்கி அவனை ஒரே நேர் கோட்டில் பயணிக்க வைத்துள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமமான லட்சுமிபுரத்தில் வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்து, கல்லூரியில் படித்து, அரசின் அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலராகப் பொறுப்பேற்றிருக்கும் என் சிஷ்யன் ஆர்.சீனிவாசன், அறிவியல் ஆர்வமும் துடிப்புமிருந்தால் கிராமப்புறச் சூழலிருந்தும் வறுமையை வென்று உயரம் தொடலாம் என்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறார்.

கட்டுரையாளர்: முன்னாள் இணைப் பேராசிரியர், விலங்கியல் துறை, சரசுவதி
நாராயணன் கல்லூரி, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x