

உள்ளூர் முதல் உலக விளையாட்டுகள் வரை இலச்சினை இல்லாத தொடர்கள் இருப்பதில்லை. சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடருக்கான இலச்சினை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. யானை உருவம் கொண்ட இந்த இலச்சினையின் பெயர் ‘பொம்மன்’.
சில மாதங்களுக்கு முன்பு ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்கிற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானை பராமரிப்பில் ஈடுபட்ட தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோரின் கதையை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அதில் ‘பொம்மன்’ பெயரைத்தான் இந்த இலச்சினையின் பெயராகச் சூட்டியிருக்கிறார்கள்.
ஆசிய யானைகளின் தோற்றத்தையொட்டியே ‘பொம்மன்’ இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையே வலிமை, புத்திக்கூர்மை போன்றுவற்றுக்குப் பெயர்போனவை ஆசிய யானைகள். இதே குணநலன்கள் விளையாட்டு வீரர்களுக்கும் அவசியமானவை என்கிற சிந்தனையில் யானைத் தோற்றத்தில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களிடத்தில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாகக் களமிறங்கி யிருக்கிறது ‘பொம்மன்’. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் இலச்சினைக்கு ‘தம்பி’ என்ற பெயர் சூட்டப்பட்டது. சர்வதேச அளவில் ‘தம்பி’யைத் தொடர்ந்து இப்போது ‘பொம்ம’னும் புகழ்பெறத் தொடங்கியுள்ளது.