

சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு வீரர் இடம்பிடித்துள்ளார். அவர், கார்த்தி செல்வம். அரியலூரைச் சேர்ந்த 22 வயதான இளம் வீரர் கார்த்தி செல்வம் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவருடைய தந்தை அரசுக் கல்லூரியில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார்.அம்மா, அக்கா, தம்பி என அன்புக்குப் பஞ்சமில்லாத குடும்பம். ஏழாம் வகுப்பு வரை அரியலூரில் படித்துவிட்டு, பின்னர் சென்னைக்கு வந்து பள்ளிப்படிப்பை முடித்தவர்.
படிக்கும்போதே ஹாக்கி விளையாட்டில் அவ்வளவு ஆர்வம். அப்போதே பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். தனது தனித்திறமையால் மாநில, தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அவற்றில் முத்திரை பதிக்கவும் தவறவில்லை. பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கோவில்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் விளையாட்டு என ஒரே நேரத்தில் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னேறினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பகுதி நேர வேலைக்குச் சென்று குடும்பத்துக்கும் உதவியிருக்கிறார். தடைகள் இருந்தாலும் பயிற்சியைத் தொடர்ந்தவர். கடந்த 2022இல் ஆசிய ஆடவர் கோப்பை ஹாக்கி தொடர் இந்தோனேசியாவில் நடைபெற்றது.
இத்தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பிடித்தனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துச் சாதனைப் படைத்த அந்த இரண்டு வீரர்கள் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், அரியலூரைச் சேர்ந்த கார்த்தி செல்வம்.
ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் கோல் அடித்து கவனத்தை ஈர்த்தார் கார்த்தி. தற்போது ஆசிய சாம்பியன்ஷிப் தொடரிலும் இடம்பெற்றுள்ள கார்த்தி, அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் ஆவலில் இருக்கிறார். அதுவே தன்னுடைய இலக்கு என்கிறார் கார்த்தி செல்வம். வெற்றிநடை போட கார்த்தியை வாழ்த்துவோம்!