

சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி (ஆகஸ்ட் 3 - 12) நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்காக 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவமும் இளமையும் கலந்த அந்த அணியில் இடம்பெற்றுள்ள முக்கியமான வீரர்கள் சிலர்:
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்: 2019இல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த வீரருக்கான விருதை வென்றவர் ஹர்மன்பிரீத் சிங். இவருடைய தலைமையிலான இந்திய அணிதான் 40 ஆண்டுகள் கழித்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது. தடுப்பாட்டக்காரரான இவரது பாணி, பம்பரம் போல் களத்தில் சுழன்று விளையாடுவதாகும்.
கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ்: இந்திய ஹாக்கி அணி கடந்த 3 தசாப்தங்களில் கண்டிராத சிறந்த கோல் கீப்பராக உருவெடுத்திருக்கிறார் ஸ்ரீஜேஸ். துணிச்சலான வீரர். அணியின் மூத்த வீரரான ஸ்ரீஜேஸ் களத்தில் விளையாடும்போது வீரர்களுக்கு அறிவுரை வழங்கி, வீரர்களைக் களத்தில் சுழல வைப்பார்.
அமித் ரோஹிதாஸ்: எதிரணி வீரர்களை கோல் அடிக்க விடாமல் தடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படுவர் அமித் ரோஹிதாஸ். ஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை வென்றதில் முக்கியப் பங்காற்றியவர். களத்தில் பந்தைக் லாகவமாகக் கடத்திச் செல்வதில் சிறந்தவர்.
விவேக் சாஹர் பிரசாத்: இந்தியாவின் எதிர்காலமாகக்கருதப்படும் இளம் வீரர் விவேக். 17 வயதில் அணியில் இடம்பிடித்து, இரண்டே ஆண்டுகளில் ‘ரைசிங் ஸ்டா’ராக உருவெடுத்தவர். துடிப்பான வீரரான விவேக் நடுக்கள வீரர். களத்தில் சுழன்று ஆடுவதில் வல்லவர்.
மந்தீப் சிங்: களத்தில் முன்கள வீரராகச் சிறப்பாக விளையாடுவதில் மந்தீப் சிங் ஒரு கிங். மூத்த வீரரான இவருடைய தாக்குதல் பாணி ஆட்டம் ரசிக்கும்வண்ணம் இருக்கும். 2017 சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து சிலிர்க்க வைத்தவர் இவர். சர்வதேச ஹாக்கியில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற வீரர் இவர்.