

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம் கிரிக்கெட் காதலர்கள் ஆராதிக்கும் இடம் என்றால், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம் ஹாக்கியை விரும்பும் ரசிகர்களுக்கான இடம். எழும்பூரில் உள்ள இந்த மைதானம் 1995இல் கட்டப்பட்டது. அதற்கு முன்பு கார்ப்பரேஷன் மைதானம், ஹாக்கி ஜல்லி மைதானம் போன்ற பெயர்களில் இது அழைக்கப்பட்டது.
1995இல் சென்னையில் முதன் முறையாக தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டி களுக்காக சென்னையில் பல மைதானங்கள் தயார்செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக எழும்பூரில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் உருவாக்கப் பட்டது. அஸ்ட்ரோ டர்ஃப் முதன்முறையாக மைதானத்தில் இடப்பட்டது.
1944-45இல் சென்னை மாநகராட்சியின் மேயராகப் பணியாற்றிய ராதாகிருஷ்ணனின் பெயரைத் தாங்கி ‘மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த மைதானத்தில் 1996, 2005ஆம் ஆண்டுகளில் ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பைத் தொடர்கள், 2007இல் ஆடவர் ஆசிய சாம்பியன்ஷிப் போன்ற பெரிய தொடர்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 16 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச ஹாக்கிப் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போதுதான் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது. இதற்காக மைதானம் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.