நளி நாட்டியம் 09: சும்மா சிரிக்கத்தான் | மழைக்கே ‘டஃப்’ கொடுக்கும் பார்ட்டிகள்!

நளி நாட்டியம் 09: சும்மா சிரிக்கத்தான் | மழைக்கே ‘டஃப்’ கொடுக்கும் பார்ட்டிகள்!
Updated on
2 min read

பூமியில் மழைபெய்வதற்கும் பெய்யாமல் திரிவதற்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பெய்தாலும் பிழை. பெய்யாமல் பொய்த்தாலும் பிழை. பெய்தால் “இப்படியே ஊத்திக்கிட்டு இருந்தா மனுஷன் வேலைவெட்டிக்குப் போகாண்டாமா?” என்று சொல்வார்கள். பெய்யாவிட்டால், “இந்த இழவு மழை கொஞ்சம் பெய்தால் என்ன?” என்றும் திட்டுவார்கள். இக்காரியமானது பூமி தோன்றின காலத்திலிருந்தே வருணபகவான் மீது நரர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு, இதற்கு சூரியபகவானும் தப்பவில்லை என்பதே பயமுறுத்தும் நிஜம்.

மழை பெய்வதற்கு உலகரீதியான பல காரணங்கள் உண்டென்றாலும்கூட மழையை நிறுத்தும் வல்லமை மழைக்கவிஞர்களுக்கு மாத்திரமே உண்டென்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் நெஞ்சிலறையும் உண்மைதான். இவர்களை மழையைச் செதுக்கும் தச்சர்கள் என்று சொல்லலாம். இதில் பெரும்பாலும் பெண் கவிஞர்களின் அக்கப் போர்தான் அதிகம் என்பது இன்னும் அதிர்ச்சி தரும் பேருண்மை என்பதை உங்களால் நம்ப முடியாது.

மழைப்பாடினிகள்: மழை காலங்களில் ஏதேனும் ஓர் அறையில் இருந்துகொண்டு, “இதோ என்னுடைய உப்பரிகையில் உப்பித்
தடித்த மழைத்துளிகள் வீழும்போது அத்துளிகளை வர்ணிக்க வார்த்தைகளில்லை! ஆனாலும் மழையென்பது மழைதானே?” என்று மழைக்கே டஃப் கொடுத்து “இந்தப் பிரதேசத்தில் தெரியாமல் பெய்துவிட்டோமோ?” என்று மழைத்துளிகளே குழம்பிப் போகுமளவுக்கு எழுத்துகளில் கவிதையாய் நனைவார்கள்.

ஆண் கவிஞர்கள் இன்னொரு பக்கம் பங்களிப்பதுண்டு. ஏதாவதொரு ஜன்னலின் அருகில் போய் ஒரு நிழற்படத்தை எடுத்துப் போட்டு, “அவளின்றி நான் ஒருபோதும் நனைவதில்லை! ஏனென்றால் அவள்தான் மழை!” என்று எழுதி முகநூலில் ஒரு பதிவைப் போட்டுவிட்டு பின்னூட்டங்களில், “மழைதான் பெய்யிதுல்ல? அவதானே மழை? போய் நனைய வேண்டியதானடா?”, எப்பவாச்சும் ஒருதடவை பெய்யிது! அத நிறுத்துறதுக்குன்னே கவிதைய ஏந்திக்கிட்டு தீச்சட்டி எடுப்பானுக! சும்மா இருங்கடா டேய்!” என்பது போன்ற வரிகளை கமெண்டில் கண்டு, டிப்ரெஷனில் மூழ்கி, பதிவை ‘Only Me’ ஆப்ஷனில் போட்டுவிட்டு போய்ப் படுத்துவிடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்யாமலிருக்கவே மக்கள் எல்லாரும் சேர்ந்து மாரியாத்தாவுக்குப் பால்குடம் எடுத்தும் மழை பெய்யவில்லை. வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுகூடி ஆராய்ச்சி செய்ததில் அப்பகுதியில் ஒரு மழைக்கவிஞர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. பின்புதான் மழை பெய்யாததற்கு மாரியாத்தா காரணமில்லை, மழைக்கவிஞர் மாரியப்பன்தான் காரணம் என்று தெரிந்தது.

அந்தக் கவிஞரிடம் போய் ‘தயைகூர்ந்து இனிமேல் மழை வரவேற்புக் கவிதைகள் வரைய வேண்டாம்!’ என்று ஏரியா சார்பில் விண்ணப்பம் வைத்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் மழைமேகம் ஒன்றுகூடும்நேரங்களில் எல்லாம் அந்தக் கவிஞர் வீட்டைக் காபந்து காத்து, பேனாவை எடுத்து வார்த்தைகளை உதிர்த்து, கவிஞரால் கவிதை எழுதப்பட்டு, மழை தடைபடுவதைத் தடை செய்திருக்கிறார்கள்.

மும்மாரியான்ஸ்: காதலித்துக் கொண் டிருக்கும் மழைக்கவிஞர்கள் மிகுந்த ஆபத்தான வர்கள். மழை பெய்யக்கூட வேண்டாம். மழை என்ற வார்த்தையைக் கேட்டாலே கவிதைகளை வரைவார்கள். “நான் மேகம்! தென்றலாகிய நீ என்மீது வந்து மோது! நாம் ஒரு வார்த்தைகளின் வாதையாய்ப் பூமியில் பொழிவோம் வா!” என்றெல்லாம் அலம்புவார்கள்.

“என் மென்சாரல் அவன்! எந்தன் வானம் அவன்! பூமியும் அவன்தான்! இதோ என்மீது நீர்ப்பூக்களைச் சூடுகிறான்!” என்று கவிதை எழுதிய பெண் கவிஞர் ஒருவரைக் கொஞ்ச காலம் கழிந்து மனநலம் பாதிக்கப் பட்டு மனநல மருத்துவத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

‘வானமும் பூமியுமாக இருந்து ஒரே இடத்துல பெஞ்சிக்கிட்டுருந்தா மழைக்கின்னு என்ன மானமரியாத இருக்கு? இப்படிச் சொல்லி நன்கு குடித்துவிட்டு இதே போன்றதொரு கவிதையை மேற்படி வானபூமியான் இன்னொரு பெண்ணுக்கு அள்ளித் தெளித்து, மேற்படி பெண் கவிதாயினியின் மனப்பிசகுக்கும் அவன்தான் காரணம் என்பது பின்னாள்களில் தெளிவா யிருக்கிறது.

அதிலும் காதலில் தோல்வியுற்ற கவிஞர்கள் படுத்தும்பாடு இருக்கிறதே... அது வேறொரு ரகம். “போன மழைக்காலத்தில்
இதே போன்றதொரு நாளில்தான் அவளைத் தொலைத்திருந்தேன்! இன்று அவள் யார்மீது பொழிந்து கொண்டிருக் கிறாளோ! ஏ மழையே சத்தமின்றிப் போய்விடு! ஒரு யுத்தத்தைத் தயார்செய்ய வைத்து விடாதே!” என்று சொல்லி மழையை மிரட்டி நிறுத்திவிடுவார்கள். ‘இசை ரசிக மழைக் கவிஞர்கள்’ என்றொரு குரூப் இருக்கிறது.

அவர்கள் வேறொரு ரகமான ஏலியன் குழுவினர். “அழகான மழை! சூடான காபி! அதனினும் சூடான அவளது குளிர்ந்த முத்தம்! தேங்காய் பிஸ்கட்! ஒரே கடியில் ஒருதுண்டு என் வாயில்! மற்றொன்று அவள் வாயில்! சில்லென்ற சாரல் மற்றும் ராஜா சார் சாங்க்ஸ்! இதைவிடவா வேணும் சார்!” என்று சிணுங்கிக் கதற வைப்பார்கள்.

மழை நாளொன்றில் தேநீர்க் குடிக்க எண்ணி டீக்கடைப் பக்கம் ஒதுங்கிய ஒரு காத்திரக் கவிஞர் மீது மழைநீர்ச் சகதியை ஒரு கார்க்காரன் அள்ளித் தெளித்தான். கோபப்பட்ட கவிஞர் உடனடியாக டீக்கடையில் கைதுடைக்க வைத்திருந்த பேப்பரை எடுத்து இவ்வாறு எழுதினார்.

“கார்காலத்துக்கும் கார்க்காரப் பயல்களுக்கும் கவிஞர்கள் என்றால் என்னவொரு காட்டுத்தனம்? பூமியின் குழந்தையான மண்ணை மழைநீரில் குழப்பி முகத்தில் விசிறியடிக்கிறார்களே?” அதற்குப் பின்தான் அவரது மனதில் ஊற்றப்பட்ட கோப நீரானது மழை நீரோடு சேர்ந்து வடிந்தது.

அன்றைக்கு மாத்திரம் ஒரு காகிதமோ பேனாவோ அவரது கையில் கிடைக்காமல் போயிருந்தால், அந்தக் கவிஞரால் இந்த மழைக்கால இழிசமூகம் குறித்துச் சாடியிருக்க முடியுமா? எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது நண்பர்களே!

- writerprabhudharmaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in