

கல்லூரிகளில் மொழிப்பாடம் நடத்தும் பேராசிரியர்களுக்கு எல்லாத் துறை மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி வாய்ப்பின் வழி அறிமுகமான மாணவன்தான் கலீல். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவன், புதுக்கோட்டையில் தங்கி கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பவியல் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பைப் பயின்று வந்தான். அந்த வகுப்புக்குத் தமிழ் பாடம் நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
என்னுடைய வகுப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்வது வழக்கம். முதல் பகுதியில், நாட்குறிப்பு தொடர்பாக இரண்டு மாணவர்கள் தங்கள் கருத்துகளைக் கூற வேண்டும். இரண்டாம் பகுதியில் பாடத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நூலை அறிமுகம் செய்துவைப்பேன். பெரும்பாலும் அது தலைவர்களைப் பற்றிய நூலாக இருக்கும். ஒரு மணி நேர வகுப்பில் 10 நிமிடங்கள் இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஒதுக்கப்படும். இதன் பிறகுதான் மூன்றாம் பகுதியான பாடம் நடத்துவது.
ஒரு நாள் உயிரித் தொழில்நுட்பவியல் துறை மாணவர்களுக்குப் பேசக் கொடுத்த தலைப்பு ‘எல்லோருக்கும் கல்வி கிடைக்க என்ன செய்யலாம்?’. இந்தத் தலைப்பில் பேசிய மாணவன் கலீல், அரசு செய்ய வேண்டியது, ஆசிரியர்கள் செய்ய வேண்டியது, மாணவர்கள் செய்ய வேண்டியது எனப் பகுத்துக்கொண்டு பேசினான். ஒரு முறை கலீலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மற்ற ஆசிரியர்கள் அவன் மீது கொண்டிருந்த ‘சரியாகப் படிக்காதவன்’ என்ற எண்ணத்துக்கான காரணத்தைக் கேட்டேன்.
அதற்கு அவன், “எனக்கு உயிரித் தொழில்நுட்பவியல் பாடம் படிக்க விருப்பம் இல்லை. என் அண்ணன்தான் இதில் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். எனக்கு கம்ப்யூட்டர் படிப்பதுதான் விருப்பம்” என்று சொன்னான்.
அவன் அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, “என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டேன். உடனே அவன், “எங்கள் பகுதியில் பலர் பள்ளிப் படிப்பை முடிப்பதே அரிதாக உள்ளது. எனவே, அவர்களுக்குக் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உள்ளது” என்று கலீல் சொன்னான்.
“உன் எண்ணம் பாராட்டுக்குரியது. முதலில் நீ உன்னை நிலை நிறுத்திக்கொள். உனக்குப் பிடித்த வேலையொன்றைச் செய்துகொண்டு பிறகு, நீ என்ன நினைக்கிறாயோ அதை செய்ய முயலலாம்” என்று கூறி அனுப்பி வைத்தேன்.
மூன்றாம் ஆண்டு முடித்து தேர்விலும் தேர்ச்சி பெற்றான் கலீல். ஓரிரு ஆண்டுகள் அவனது தொடர்பு இல்லாமல் போனது. பிறகு ஒரு நாள் தொலைபேசியில் பேசிய கலீல், ராமநாதபுரத்தில் குக்கிராம மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்காக ஒரு மையத்தை தொடங்க இருப்பதாகவும், அதன் தொடக்க விழாவுக்கு வர வேண்டும் என்றும் எனக்கு அழைப்பு விடுத்தான். ஆனால், என்னால் செல்ல முடியவில்லை.
இதன் பிறகு புதுக்கோட்டை மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தேன். இதற்கிடையே எனது தொலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு எப்படியோ எனது எண்ணைப் பெற்று பேசிய கலீல், மிகவும் உற்சாகமாகப் பேசினான். ஓராண்டு வெளிநாடு சென்றுவிட்டு வந்து கம்யூட்டர் மையத்தை மேம்படுத்தி இருப்பதாகவும் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.
‘விருப்பம் இல்லாத பாடத்தில் வெற்றி பெற்றதோடு, மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற தனது லட்சியம் நிறைவேறியதற்கு அவன் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஆர்வமும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர்,
மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை.