

சி
னிமா பாடலுக்கு உல்டாவாக டான்ஸ் ஆடி அதை யூடியூபில் பகிர்வது இப்போது ஃபேஷனாகிவருகிறது. ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலை ஷெரில் குழுவினர் ஆடி, யூடியூப்பில் பதிவேற்றிய வீடியோ மெகா வைரல் ஆனது. அதன் தொடர்ச்சியாக ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப் போறான்’ பாடலுக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஆண், பெண் பணியாளர்கள் சேர்ந்து நடனம் ஆடி யூடியூப்பில் பதிவேற்றியுள்ளனர். இது இப்போது குமரி மாவட்ட சமூக வலைத்தளங்களில் வலம்வந்துகொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை வடிவமைத்த இயக்குநரும், மென்பொருள் நிறுவனப் பணியாளருமான மதன் நீலனிடம் இதுபற்றிக் கேட்டோம். “இது எனது 5-வது முயற்சி. ஜிமிக்கி கம்மல் யூடியூபில் ஹிட் ஆனதும், நாங்கள் சேர்ந்து அதே பாடலுக்கு ஆடி யூடியூபில் பதிவேற்றினோம். அது குமரி மாவட்ட சமூக வலைத்தளங்களில் எங்களுக்கு நல்ல இமேஜை உருவாக்கித் தந்தது. அதைத் தொடர்ந்து ‘மெர்சல்’ ஆடியோ வெளியானபோது, ‘ஆளப் போறான் தமிழன்’ பாடலுக்கு ஆட முடிவெடுத்தோம்.
நுனி நாக்கு ஆங்கிலம், கணினி முன்பு வேலை என பிஸியாக இருந்தாலும் மென்பொருள் நிறுவனப் பணியாளர்களுக்கு மட்டும் தமிழ் உணர்வு இல்லாமலா போய்விடும்? அந்த வகையில்தான் ‘ஆளப் போறான் தமிழன்’னு தொடங்கும் பாடலும் எங்களை ஈர்த்தது. இதுவரை ஆண் நண்பர்கள் மட்டுமே சேர்ந்து வீடியோ தயாரித்து வெளியிட்டு வந்தோம். இந்த முறை சக தோழிகளிடமும் பேசினோம். அவர்களும் சம்மதித்தனர். அப்புறம் என்ன? உற்சாகமா கேமராவோட ஷுட்டிங் கிளம்பினோம்” என்கிறார் மதன் நீலன்.
இந்தப் பாடலுக்காகக் குமரி மாவட்டத்தில் பறக்கை, கன்னங்குளம், தேரூர், சிதறால் மலைக் கோயில், வட்டக் கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆடல் காட்சிகளை இக்குழுவினர் பதிவுசெய்திருக்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடலுக்கு நடனக் காட்சியை அமைத்திருக்கிறார்கள் இவர்கள். “படத்துல விஜய் எப்படி ஆடியிருப்பாரு, நடனக் காட்சிகள் எப்படி வைச்சுருப்பாங்கன்னே தெரியாம ஆடுறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.
எங்க அலுவலகத்திலிருந்து புதுசா ஆட வந்த பணியாளர்கள் இதுக்கு முன்ன கேமரா முன்னாடி பெர்ஃபார்மன்ஸ் பண்ணவங்க இல்ல. ‘ஜிமிக்கி கம்மலுக்கு’ கிடைச்ச வரவேற்புதான் எங்க தயக்கத்தை உடைச்சுது. அலுவலகத்துல வேலை செய்யுற கேரள நண்பர்கள் மூலமா, இந்தத் தமிழன் கேரளாவிலும் வலம் வர்றான்” என்கிறார் மதன் நீலன்.
பாடலின் இடையே தமிழகத்துக்குப் பெருமை சேர்ந்த அப்துல் கலாம், விஸ்வநாதன் ஆனந்த், ‘தங்கமகன்’ மாரியப்பன், கூகுள் சுந்தர் பிச்சை போன்றவர்களையும் நடனக் காட்சிகளில் காட்டியிருக்கிறார்கள்.
யூடியூபில் பாடலைக் காண: goo.gl/P4EPkw