

தாய் மாமனைத் திருமணம் செய்துகொண்ட என்னுடைய தங்கை கலை, ஊரில் ஆண்டு தோறும் நடைபெறும் காமாட்சியம்மன் திருவிழாவுக்கு என்னை அழைப்பார். நெருக்கடி நிறைந்த நகர மற்றும் பணி வாழ்க்கை அவ்வளவு எளிதாக அங்கே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
பொங்கல் பண்டிகை முடிந்த பத்தாவது நாள் கொண்டாடப்படும் அமரம் காமாட்சியம்மன் பண்டிகைதான் அது. நீண்டகாலமாக இந்தக் கிராமத் திருவிழா நடைபெற்றுவருகிறது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அமைந்துள்ள இந்தத் திருவிழாவுக்கு மேட்டூர், குஞ்சாண்யூர், ஓமலூர், தாரமங்கலம், தொப்பூர், வெள்ளாறு, பென்னாகரம், கூனாண்டியூரிலிருந்து மக்கள் வருவது வழக்கம்.
இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவுக்கு ஒரு முறையாவது போய்வந்தே ஆக வேண்டுமென முடிவு செய்து, ஒரு முறை புறப்பட்டே விட்டேன். ஊர் சென்றடைந்த பிறகு என்னுடைய டிஜிட்டல் கேமராவை எடுத்துக்கொண்டு காமாட்சியம்மன் கோயிலை நோக்கி நடந்தேன்.
பனந்தோப்பைத் தாண்டியதும் பிரம்மாண்டப் புளிய மரங்கள் காட்சி தந்தன. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ என் ஞாபகத்தைத் தட்டிப் பார்க்கும். புளிய மரங்களைச் சுற்றி நிறைய இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், விதவிதமான பலகாரக் கடைகள், விளையாட்டுத் திடல், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன.
பொதுவாக நான் பதிவு செய்ய நினைக்கும் யதார்த்த காட்சிகளை நிறையவே பார்க்க முடிந்தது. ஆனால், நான் கேமராவை கையில் எடுத்ததும் எல்லோரும் என்னையே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஊருக்குப் புதியவன், அங்கே என்னைத் தவிர வேறு யாரிடமும் கேமரா இல்லை. இந்த இரண்டு அம்சங்கள் காரணமாக கேமராவை எடுத்து நான் படமெடுக்க நினைக்கும்போதெல்லாம், யாரேனும் என்னை உற்றுப் பார்க்க ஆரம்பித்தார்கள். அது படத்தின் யதார்த்தத்தை சிதைப்பதாகத் தோன்றியது.
என்ன செய்வது என்று தெரியாமல் திருவிழாவைச் சுற்றிச்சுற்றி வந்தேன். படமெடுக்க நினைத்த எல்லா இடங்களிலும் இதே நிலை தொடர்ந்தது.
முதன்முறையாக அந்த ஊரில் கேமராவோடு நான் சுற்றுவது ஏன் என்று அறியும் ஆர்வம், எதற்காகப் படமெடுக்கிறேன் என்கிற கேள்வியுமே என்னை நோக்கி பார்வை குவியக் காரணம்.
நானும் படமெடுக்காமல், அந்தக் கூட்டத்தை ரசித்தபடியே கையில் கேமராவோடு பல முறை சலிக்காமல் சுற்றி வந்துவிட்டேன். அதன் பிறகு என்னை பலரும் இயல்பாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அப்போது கேமராவை இயக்க ஆரம்பித்தபோது இயல்பான, யதார்த்தமான பதிவுகள் கிடைத்தன.
அந்தி சாய்ந்ததும் இரவு நேர கூத்து கட்டுவதற்காகப் புளிய மரத்தடி களைகட்ட ஆரம்பித்தது. முன்னிரவில் ஆரம்பமான கூத்து விடியற்காலையில் முடிவடைந்தது. திரைப்படத்தை ரசிப்பது போல் கூட்டம் மனம்விட்டுச் சிரித்து, கதாபாத்திரங்களோடு ஒன்றி அழுது - கோபப்பட்டு விடிந்ததும் கரைந்தது.
இங்கே இடம்பெற்றுள்ள அனைத்துப் படங்களும் அமரம் காமாட்சியம்மன் திருவிழாவில் டிஜிட்டல் கேமராவால் பதிவு செய்யப்பட்ட படங்கள்.
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com