

தி
ரைப்படங்களுக்கு அடுத்தபடியாக என் ஒளிப்பட ரசனையை வளர்த்ததில் ஒரு பெட்டிக்கடைக்குப் பெரும் பங்கு உண்டு!
அப்போது கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். கும்பகோணம் டவுன்ஹால் சாலையில் காசி தியேட்டர் அருகே அமைந்துள்ள கற்பகம் உணவகத்துக்கு உள்ளே செல்ல படிக்கட்டுகளில் ஏறினால், இரண்டு பக்கமும் சிறிய பெட்டிக் கடைகள் தென்படும். இரண்டு கடைகளிலும் கொடியில் இதழ்கள் தொங்கிக்கொண்டிருக்கும். அங்கே கிடைக்காத இதழ்களே இல்லை எனலாம்.
80-களின் மத்தியில் சிறுபத்திரிகைகள் அபூர்வமாகக் கடைகளில் கிடைத்துக்கொண்டிருந்தன. அந்தக் கடைகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் இதழ்களின் அட்டைப் படங்களை ஒரு ஒளிப்படக் கண்காட்சியைப் பார்ப்பதுபோலவே தினம்தினம் அணுகிக்கொண்டிருந்தேன்.
மூத்த மார்க்சிய எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரையை ஆசிரியராகக்கொண்டு அட்டையில் நேர்த்தியாக அச்சிடப்பட்ட கறுப்பு-வெள்ளை ஒளிப்படத்தைத் தாங்கிய ‘இனி’ சிற்றிதழை அப்படி ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அந்த ஒளிப்படமே ‘இனி’ சிற்றிதழை வாங்கத் தூண்டியது. முகச்சுருக்கங்களோடு கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த பெண், உடுக்கை அடிக்கும் பெரியவர், சூரிய உதயத்தில் கடற்கரையில் எருமை மாடுகளைக் குளிப்பாட்டும் முதியவர் எனப் பல படங்கள்.
அதற்கு முன் இவ்வளவு துல்லியமான, நேர்த்தியான படங்களை தமிழ்ச் சிற்றிதழ்களில் நான் பார்த்தது இல்லை. அந்தப் படங்களை எடுத்தது யார் எனத் தேடி, ‘ஜான் ஐசக்’ எனும் ஒளிப்படக் கலைஞரின் பெயரை முதன்முறையாக அறிந்து வியந்தேன்! அந்தப் பெட்டிக் கடையில் கிடைத்த புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் மூலமாக ஹாரி மில்லர், ரகு ராய், ரகுவீர் சிங் போன்ற தேசிய அளவிலான ஒளிப்படக் கலைஞர்கள் பலர் எனக்கு அறிமுகமானார்கள்.
1987-ல் கவின்கலைக் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் நண்பர் ரா. மனோகரனும் நானும் வேலை தேடி சென்னையை நோக்கிப் புறப்பட்டோம். சென்னையில் தரமான கறுப்பு-வெள்ளை ஃபிலிம் ரோலும் அதை நேர்த்தியாகக் கழுவிக் கொடுக்கும் ஸ்டுடியோவும் எங்களுக்கு அறிமுகமாயின. ஒரு இல்போர்டு (ilford) ஃபிலிம் சுருளை வாங்கிக்கொண்டு மெரினாவை நோக்கி நடந்தோம். எங்களிடம் கேனான் கேமராவும் 50 எம்.எம். லென்ஸும் மட்டுமே அப்போது கையிலிருந்தன. இவற்றை வைத்துக்கொண்டுதான் பெரும்பாலான படங்களை எடுத்தோம்.
காலையில் மெரினாவை நெருங்கியதும் சூரியன் மெல்ல மெல்ல மேலே எழ ஆரம்பித்தது. திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து எருமை மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவர், கடலில் மாடுகளை இறக்கிக் குளிப்பாட்டத் தொடங்கினார். அதைப் பார்த்ததும் எங்கள் இருவருக்குமே ஜான் ஐசக்கின் படங்கள் நினைவில் ஆடின. அவரும் இங்குதான் அந்தப் படங்களை எடுத்திருப்பாரோ என்று நினைத்துக்கொண்டு படங்களைப் பதிவுசெய்யத் தொடங்கினோம்.
இன்றைக்கு செல்போனிலோ டிஜிட்டல் கேமராவிலோ படத்தை எடுத்தவுடன் திரும்பப் பார்க்க முடிவதைப் போலெல்லாம், அன்றைக்குப் படத்தை உடனே பார்க்க முடியாது. ஒரு ஃபிலிம் சுருளில் 36 ஃபிரேம்கள்.
அனைத்து ஃபிரேம்களிலும் படம் எடுத்த பிறகே, ஃபிலிமைக் கழுவக் கொடுக்க முடியும். ஸ்டுடியோவிலும் ஃபிலிமைக் கழுவவும் பிறகு படத்தைப் போடவும் தனித்தனியாக நேரமெடுக்கும். நிச்சயமாகக் காத்திருக்காமல் படத்தைப் பார்க்க முடியாது. ஆரம்பகால ஒளிப்படக் கலைஞர்களுக்கு, நெகட்டிவைப் பார்க்கும்வரை படபடப்பு குறையாது. அன்றைக்கு நாங்கள் பார்த்த காட்சியின் மேம்பட்ட பிரதியாக எங்கள் நெகட்டிவ் காட்சியளித்தது. இதுபோன்று ஒவ்வொரு கட்டமாகக் கிடைத்த அனுபவங்களின் மூலமாகவே ஒளிப்படத் துறையின் நுணுக்கங்கள் ஒவ்வொன்றாகக் கற்றோம். இன்றைக்கு அந்த ஃபிலிம் சுருள் கழுவும் முறையும் இல்லை; கும்பகோணம் பெட்டிக்கடைகளும் இல்லை.
இங்கு இடம்பெற்றுள்ள அனைத்துப் படங்களும் ஃபிலிம் கேமராவில் எடுக்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல்.
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com