

காட்டை நேசிப்பவர்கள் அதன் வாசலில் நின்றுவிட வேண்டும். இப்போதெல்லாம் காடு, மலை, அருவி, விலங்குகளை அருகிலிருந்து கண்டுகளிக்கும் ஆசையில் காட்டுக்குப் போகும் மனிதர்களின் டிரெண்டிங் உலகெங்கும் பெருகி வருகிறது. டிராவல் கோஸ்ட், டிராவல் அடிக்ட், அட்வெஞ்சரிங் ஏஞ்சல்ஸ் என்று தங்களைத் தாங்களே சொல்லி அலட்டிக்கொண்டு திரியும் ஆசாமிகளுக்குக் ‘காடு, என்றால் என்ன என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் இருப்பதுதான் தமாசும், வேதனையும்.
காட்டுக்குக் கண் கிடையாது என்று சொல்வார்கள். காடு தன்னுள் நுழையும் பீதாம்பரர்கள் முதல் பிரதமப் பிதாமகர்கள் வரை ஒன்றாகத்தான் பாவிக்கும். இயற்கைப் பிரியர்கள், டிராவல் விளாகர் வில்லியம்கள், காடுலாவிக் காடர்கள், அட்வெஞ்சர் ஆல்பர்ட்கள், ரீல்ஸ் ரீகன்மார்கள், கோடை வாசஸ்தலக் கோபாலன்கள், பட்சிகள், விலங்கு ஜீவித நிழற்படக்கார நிக்சன்கள், காடோடு இயைந்து பானத்தைப் பருகும் போதை பார்ட்டிகள் என்று காட்டுக்குள் திடீர் திடீரென எழுந்தருளும் ஆசாமிகளைப் பிரிக்கலாம்.
மேற்கூறிய காடலையும் குழுக்களால் காட்டுக்கு எவ்வித நன்மையும் இல்லையென்றாலும்கூடக் காடுகளால் இவர்களுக்கு மிகுந்த ஆபத்து உண்டென்பது இவர்களுக்குப் புரிவதில்லை. ஒரு சிறிய அட்டை அல்லது குட்டிக்கடந்தை முதற்கொண்டு பெரிய யானைகள் நிமித்தம் மேப்படியான்கள் சித்திரவதையை அனுபவித்து விடும் வாய்ப்புகளே அதிகம்.
அதுகூடப் பரவாயில்லை, ஒரு காய் அல்லது கனி தரும் மரம் அல்லது விஷப்பழங்கள்கூட மனிதர்களுக்கு எமனாய் மாறிவிடும். ‘ட்ரெக்கிங்’ என்ற பெயரில் காடுகளுக்குள் நுழைந்து உயிரற்ற பூதவுடல் அல்லது கரிக்கட்டைகளாய் வெளிவந்த ஆத்மாக்களின் பட்டியல் அதிகம்.
எதையெல்லாம் காட்டுக்குள் எடுத்துச் செல்லக்கூடாதோ அதை மாத்திரமே எடுத்துச் செல்வது, தடை செய்யப்பட்ட காரியங்களில் ஈடுபடுதல் அல்லது நுழைய அனுமதியற்ற பிரதேசங் களில் ’த்ரில்லிங்’ என்ற பெயரில் நுழைதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு, காடானது திருப்பித்தரும் த்ரில்லிங்குகளால் மீளவே முடியாத் துயரில் சிக்கிக்கொள்ளும் மனிதர்கள் அதிகரிக்கிறார்கள்.
காட்டுக்குள் யாரும் பார்க்காத சங்கதிகளை உலகெங்கும் படம் பிடித்துக் காட்டும் இவர்களது தாராள உள்ளம் எப்படிக் காட்டுக்கும் அங்குள்ள விலங்குகளுக்கும் தெரியும்?
காடும் பாடும்: யானைகள் போகும்போது வழிமறித்து விசிலடித்தல், தீப்பந்தங்களைக் கொளுத்தி திருக்கரங்களில் ஏந்துதல், விலங்குகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கூச்சலிடுதல் போன்றவற்றை வாடிக்கையாகக் கொண்டு திரியும் இம்மாதிரி பிரகஸ்பதிகளால் அவர்களுக்கே சுயநன்மை பயக்கும் என்பது யானைகளின் துதிக்கையால் துன்பத்தை அனுபவித்து இறைவன்பாதம் பணிந்த ஆவிகளுக்கே தெரியும். ஒரு வேளை உயிரோடிருந்தால் ஏதேனும் யூடியூப் பேட்டிகளில் வழங்குவார்களாயிருக்கும்.
கால்நடை மருத்துவமனையில் ஊசிகள் இட்டு ரசாயனப் புண்ணாக்கை உண்ணும் வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஒரு பெரிய காட்டு ஏரியின் ஒருகரையில் வாய்வைத்துத் தண்ணீர் குடித்தால் அது மறுகரையில் நீர்குடிக்கும் ஒரு புலியைப் பாதிக்கும் என்கின்றனர் வனத்துறையினர்.
ஆனால், நம்மாள்கள் வீட்டில் சமைத்துப் பயணப்படும் வழியில் உண்ணக் கொண்டு செல்லும் புளியோதரை, சப்பாத்திகளைக் குரங்குகளுக்கும் இன்னபிற பிராணிகளுக்கும் ஜீவகாருண்யம் என்னும் பெயரில் காடெங்கும் வீசி விலங்குகளின் உணவுப் பழக்கங்களை நகர்புறத்துக்குக் கொண்டு வருவார்கள்.
காடுகளில் சென்று, குப்பிகளைத் திறந்து, குடலுக்குள் தெளித்துவிட்டு போதையில் அந்தக் காலிக்குப்பிகளை அங்கேயே போட்டு உடைக்கும் பைத்தியக்காரப்பண்பாடு தமிழ்நாட்டில் இருக்கிறது. 2012இல் கன்னியா குமரி கீரிப்பாறை பகுதியில் காளிகேசம், வட்டப்பாறையிலிருந்து நான்கு லாரிகள் கொள்ளும் அளவுக்குக் காலிக்குப்பிகளை அள்ளி எடுத்துப் போனார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அன்பே அனலி: ஒருபெரும் தனவந்தரின் தவப்புதல்வர் தம்முடைய நண்பர்களோடு காட்டுக்குள் சென்று பானமுற்று முழுபோதையில் சொல்லச்சொல்லக் கேளாமல் அங்கு ‘சிவனே’ என்று பாரமேற்றிக் கொண்டிருந்த யானையின் மீது ஏறவேண்டுமென்று சொல்லி பாகனிடமிருந்து அங்குசத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி யானையின் மீது ஏறிப் பயணித்தார்.
அங்குசத்தால் அதைச் சீண்ட மகிழ்வுற்ற யானையோ காடெங்கும் மேப்படியானைத் தூக்கிக் கொண்டு ஓடி இறுதியில் அந்த ஆசாமி புகைப்படமானார். தான் செருப்பாக அணிந்த அந்த ஆள், தாம் நின்றுகொண்டிருக்கும் எஸ்டேட்டின் அதிபதி என்பதும், தன்னுடைய பாகனுக்கே கூலி கொடுப்பவன் அவன்தான் என்பதும் பாவம் அந்த யானைக்குத் தெரியாது. பழக்கப்பட்ட யானைக்கே இந்த நிலையெனில் காட்டில் உலவும் யானைகளை என்னவென்று சொல்வது?
காடுகள் வழியாகப் போகும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஹாரனடிச் சித்தர்கள் தங்களுடைய தனித்திறமையை உபயோகித்து ஒலியெழுப்பி ‘தேமே’ என்று போய்க்கொண்டிருக்கும் யானைகள், புலிகளைக்கூட உபத்திரவம்செய்து தங்களுடைய சகபயணிகளைப் பரலோகத்தில் சேர்க்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பதை இயல்பான ஒன்றாகக் கருத முடியாது.
காட்டை விடுங்கள், நகரில் ஒரு ஆசாமி தன்னுடைய வீட்டினருகே சும்மா கிடந்த ஒரு சிறிய பாம்பைத் தூக்கி அதை வளையல் போன்று பாவித்து கைகளில் அணிந்து, அதனிடம் “பெரிய இவனாடே நீ?” என்று கேட்க, அது அன்பாக தம்முடைய பற்களால் ஆசாமியின் கைகளில் முத்தமிட, கொத்துபட்டவன் சற்று நேரத்தில் மூக்கு வாயெல்லாம் ‘ரத்தம் கக்கி’ பாராசூட் போல உப்பி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவழித்து உயிரைக் காப்பாற்றினார்கள். முத்தமிட்ட அந்த அன்பிற்குரிய பாம்பின் பெயர் விரியன் பாம்புக் குடும்பத்தைச் சார்ந்த ‘ரத்த அனலி’யாம்.
- writerprabhudharmaraj@gmail.com