

சர்வதேச மாணவர்கள் தினம்: நவம்பர் 17
மாணவர்களை மையமாக வைத்து கொண்டாடப்படும், அனுசரிக்கப்படும் தினங்கள் உலகில் ஏராளம். இவற்றில் நவம்பர் 17-ம் தேதி அனுசரிக்கப்படும் ‘சர்வதேச மாணவர்கள் தினம்’ சோக வரலாற்றைக் கொண்டது.
வரலாற்றின் பக்கங்களில் செக்கோஸ்லோவாகியாவின் (தற்போது செக் குடியரசு) மாணவர் போராட்டதுக்கும் தனி இடம் உண்டு. 1939-ம் ஆண்டில் இந்த நாட்டின் தலைநகர் பிராக்கில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் படித்த மருத்துவ மாணவர் ஜன் ஓப்லெடல் நாஜிப் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து மிகப் பெரிய மாணவர் போராட்டம் பிராக்கில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை நாஜிப் படையினர் நசுக்கினர். போராட்டத்தைத் தூண்டியதாக 10 மாணவர்கள் 1939-ம் ஆண்டு நவம்பர் 17 அன்று தூக்கிலிடப்பட்டனர்.
மாணவர்களின் எழுச்சியை நினைவூட்டும் வகையில்தான் இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. முதன்முறையாக 1941-ம் ஆண்டு சர்வதேச மாணவர் அமைப்பு இத்தினத்தை அனுசரித்தது. பின்னர் ஐ.நா. அமைப்பு இந்த நிகழ்வை அங்கீகரித்ததால், இன்று சர்வதேச அளவில் மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.