

இ
து செல்ஃபி யுகம். அதற்கேற்ப செல்ஃபி தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வருவதும் வழக்கம். அப்படி வந்த சில செல்ஃபி தகவல்கள் இவை:
சொர்க்கம் செல்ஃபி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் இறந்தவர்களோடு செல்ஃபி எடுத்து அதைச் சமூக ஊடகங்களில் பதிவிட மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஏன் தெரியுமா? இறந்தவர்களின் உடல் அருகே புன்னகை மாறாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்களாம். இதை வைத்தே ‘இறந்தவர்களோடு செல்ஃபி’ என்ற ஒரு போட்டி இணையதளத்தில் நடந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இப்போதும்கூடப் பலரும் இந்தப் பாணியைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்களாம்.
செல்ஃபி புள்ள
உலகிலேயே ஒரே சமயத்தில் அதிக செல்ஃபிகள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தது யார் தெரியுமா? நம் இந்தியர்தான். அவர் பெயர் பானுபிரகாஷ். 2015-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரே மணி நேரத்தில் 1,700 செல்ஃபிகள் எடுத்து சாதனை படைத்தார். இதற்கு முன்பு அமெரிக்கக் கால்பந்தாட்ட வீரர் பேட்ரிக் பீட்டர்சன், ஒரு மணி நேரத்தில் 1,449 செல்ஃபிகள் எடுத்ததே சாதனையாக இருந்ததாம்.
ஒரேநேரத்தில் அதிக செல்ஃபி எடுத்து பானுபிரகாஷ் சாதனை படைத்தார் என்றால், தாய்லாந்தில் மார்தாவோ மோர்தார் என்பவர் இன்ஸ்டாகிராமில் அதிக செல்ஃபி படங்களைப் பதிவேற்றியவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 12,000 'செல்ஃபி' படங்களைப் பதிவேற்றியிருந்தார். இன்னும் செல்ஃபி மோகம் குறையாமல் படங்களைச் சுட்டுத் தள்ளிக்கொண்டேயிருக்கிறாராம் இவர்.