

டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விகளைத் தொடர்ந்து இந்திய அணி, எதிர்காலம் சார்ந்த திட்டத்தில் களமிறங்கியிருப்பதாகத் தெரிகிறது. சொத்தை அணியாக மாறிவிட்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடருக்கு எதிராகப் புதிய வீரர்கள் பலரை இந்தியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
பாரம்பரியமான உள்ளூர் தொடர்களுக்கு மாற்றாக ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய வீரர்களை இத்தொடருக்காகக் கிரிக்கெட் வாரியம் தேர்வுசெய்திருப்பது விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. என்றாலும் இதில் உள்ளூர், முதல் தர கிரிக்கெட் ஆகிய போட்டிகளிலும் சிறந்த சாதனைகளைப் படைத்த வீரர்களும் இருக்கிறார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட்: சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கியமான வீரர். சென்னை அணிக்காகத் தொடர்ச்சியாக ரன்களைக் குவிப்பதில் முன்னணியில் இருந்துவருகிறார். 2023 சீசனில் 16 போட்டிகளில் 590 ரன்களைக் குவித்தார். இதில் 4 அரைச் சதங்கள் அடங்கும். இதுவரை 28 முதல் தரப் போட்டிகளில் விளையாடியிருக்கும் ருதுராஜ், 1,941 ரன்களை விளாசியிருக்கிறார்.
இதில் 6 சதங்களும் 9 அரைச் சதங்களும் அடங்கும். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஓர் இரட்டைச் சதம் விளாசியிருக்கிறார். 26 வயதான ருதுராஜ், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.
ஜெய்ஸ்வால்: ராஜஸ்தான ராயல்ஸ் அணியின் முக்கியத் துருப்புச் சீட்டாக விளங்கி வரும் வீரர் இவர். 21 வயதான இவர், தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதில் சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் போல் கருதப்படுபவர். 2023 ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 625 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சதம், 5 அரைச் சதங்கள் அடங்கும்.
15 முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 80.21 சராசரியுடன் 1,845 ரன்களைக் குவித்திருக்கிறார். 9 சதங்கள், 2 அரைச் சதங்கள் விளாசியிருக்கிறார். இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 265. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
முகேஸ்குமார்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்து வீச்சாளர் இவர். 29 வயதான இவர், இந்த ஐபிஎல் சீசனில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பந்துவீசவில்லை. 10 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
ஆனால், அண்மைக் காலமாக முதல் தரப் போட்டிகளில் முத்திரை பதித்திருக்கிறார். இதுவரை 39 முதல் தரப் போட்டியில் விளையாடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்தச் சாதனைதான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.
சஞ்சு சாம்சன்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் இவர். 2022 சீசனில் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துசென்ற வீரர். 28 வயதான இவர், எம்.எஸ்.தோனியைப் போல விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். ஆனால், ஐபிஎல் உள்பட பல தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டும் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு.
இந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 3 அரைச் சதங்கள் உள்பட 362 ரன்களைக் குவித்திருந்தார். மேலும் 55 முதல் தர போட்டிகளில் விளையாடி 10 சதங்கள் உள்பட 3,161 ரன்களையும் குவித்திருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் விளையாட முடியாத சூழல் உள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடர்களுக்கு சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இவர்கள் தவிர ஐபிஎல்லில் கவனம் பெற்ற ரவி பிஷ்னோய், அவேஸ்கான், திலக் வர்மா ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இளம் வீரர்களைத் தயார் செய்யும் வகையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொடரில் ஜொலித்தால் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைக்கக்கூடும்.