நளி நாட்டியம் 06: சும்மா சிரிக்கத்தான் | நாசப்படுத்தும் நாமகர்ணங்கள்

நளி நாட்டியம் 06: சும்மா சிரிக்கத்தான் | நாசப்படுத்தும் நாமகர்ணங்கள்
Updated on
2 min read

அரசாங்க அலுவல்களில் இருக்கும் ஆசாமிகள் சில நேரம் செய்துவிடும் சிறிய எழுத்துப் பிழைகள்கூட நம்மை உன்னதங்களின் வாசல்படியில் கொண்டு நிற்க வைத்துவிடும். பெயர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான அடையாளம். நீங்கள் ஒரு வண்டியை வாங்குவீர்களானால் அது உங்கள் பெயர்களில் பதியப் படுமேயொழிய உங்களுக்கானதல்ல என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?

பிறக்கும்போது பெயரின்றிப் பிறக்கும் மனிதனுக்கு பிறகொரு நாளில் ஏதேதோ அர்த்தங்களோ, அர்த்தமின்றியோ, பித்ருக்களின் அடையாளங்களோடு சிலபல எழுத்துகளைக் கலந்து சூட்டப்படும் நாமகர்ணங்கள்தான் அவனது மரிப்பு வரைக்கும் பின்தொடரும் தனிப்பட்ட அடையாளம். அவர்கள் செத்த பிற்பாடு அவர்களுக்கென்று ஒரு தனிப் பொதுப்பெயர் ஒன்று உண்டு. அது பிணம், சவம் அல்லது பாடி.

உதாரணமாக இறந்தவரின் பெயரைச் சொல்லி, மேற்படியானை எப்போது கழுவிப் பெட்டியில் ஏற்றித் தோள்களில் சுமந்து கல்லறைத் தோட்டத்துக்குப் பயணிப்பீர்கள் என்றா கேட்பார்கள்? ’பாடிய எப்ப எடுப்பியோ?’ என்று சிம்பிளாகக் கேட்பதுதானே தொன்றுதொட்டு வரும் மரபு.

’இவர்களுக்கெல்லாம் யார் அரசாங்க வேலை கொடுத்தது?’ என்று கேட்டுவிடக்கூடிய அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த அறிவுகூர் ஆசாமிகள், அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் இருப்பதுதான் பூலோகப்பிழை. பிறப்பு, இறப்பு பதிவுத்துறை, வட்ட வழங்கல் துறை, ஆதார்கார்டு பதிவுக்குழு, வாக்காளர் அட்டை பெயர் சேகரிப்புக் குழு, பாஸ்போர்ட் சேவா கேந்திரா போன்ற காரியங்களில் இருக்கும் பிரகஸ்பதிகளால்தான் பொதுமக்கள் அதிகமாகத் தாக்கப்படுகிறார்கள் என்பது பெரும்பாலான கருத்து.

பெயர்களின் மீதான தத்ரூபங்கள்: ஆசான் ஒருவரது ஓட்டுநர் உரிமத்தில் அவரது பெயர் இருந்த நிலையைக் கண்டு கொதித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எழுந்தருளி, சிறிய அளவிலான யுத்தத்தை மேற்கொண்டு சிறை பூண்டார் ஆசான். முத்துரமணி என்கிற ஆசானின் பெயரை மூத்திரமணி என்று எழுதினால் அன்பைப் போதித்த புத்தருக்கே ஆத்திரம் வந்துவிடுமென்றால் ஆசான் எம்மாத்திரம்? என்னுடைய பெயரையே பர்பு என்று எழுதி என்னையும் உளவியல் சிதைவுக்கு ஆளாக்கினார்கள்.

சொப்பனங்களின் சூசை: முன்னர் ஒரு செய்தியில் வட மாநிலத்தில் எங்கேயோ காந்திஜியின் பெயரில் பிறப்புச் சான்றிதழ் அவர் பிறந்த தேதியிலேயே எடுத்திருந்தார்கள். அத்தனை நேர்த்தியான நடைமுறைகள் நம் மத்தியில் இருக்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொண்டிருக்கிறேன் நண்பர்களே! அதிலும் ரேஷன் கார்டுகளில் காணப்படும் சில பெயரைக் கண்டால், சதாசர்வகாலமும் தராசிலேயே படுத்துக்கிடந்து எடைக்குப் போட்ட மாதிரியே முகத்தை வைத்திருக்கும் ரேஷன் கடைக்காரர்களுக்கே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்துவிடும். அந்த அளவுக்கு கோமாளித்தனங்கள் நிறைந்திருக்கும்.

பாத்திமாவுக்கு பாட்டிமா, நாகராஜனுக்கு நகரஜான், மார்ட்டினுக்கு மாடன் என்றெல்லாம் எழுதி மதமாற்றம் செய்தால் என்ன செய்வது? என்ன நிகழ்ந்தாலும் பெயரைக் காப்பாற்றிக் கொள்! என்று சொல்லிக் கொள்ளும் உலகில் யாரோ ஒருவர் வந்து உங்கள் பெயரைத் தப்பாக எழுதி ஆவணப்படுத்தினால் உங்களால் என்ன செய்துவிட முடியும். அந்தப் பெயரில் உள்ள பிழையை நீக்க எங்கெல்லாம் அலைய வேண்டும் என்பது ’பட்டபாடு மறக்குமா பாஸ்கரா?’ என்று அலைந்துதிரிந்த அனுபவசாலி ஆத்துமாக்களுக்கு மாத்திரமே தெரியும்.

பாபுவுக்கு நடுவில் ’ம்’ சேர்த்து பாம்பு, பாலகணேசனுக்கு ’பா’விலுள்ள துணைக்காலைத் துண்டித்து பலகணேசன், மூர்த்திக்கு மூத்திரி, அ.ராபர்ட் என்ற பெயரைக் கலைத்து அரவட்டு என்று திரித்தல் என்பதெல்லாம் எவ்வளவு அநியாயம் என்பதை யோசியுங்கள் மக்களே! சாராயக் கடைக்குக்கூடச் சர்வ சாதாரணமாகப் போய்வரக் கூடிய பிதாமகர் ஒருவர், ரேஷன் கடைக்கு மட்டும் பள்ளத்தாக்குகளில் அலைந்து திரியும் பிசாசுகளைப் போல ரகசியமாகப் போய் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது கையில் இருக்கும் ரேஷன் கார்டானது பல்வேறு பைகளில் பொதியப்பட்டு நகைக்கடைகளில் உள்ள நகைகள் ராத்திரிகளில் லாக்கருக்குள் நுழைவதைப் போல அப்படியொரு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

இவரது நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அவரைப் பின்தொடர்ந்து அவர் கையிலிருந்த ரேஷன் கார்டை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிப் பார்த்து, அவர் அதை ஒளித்து வைத்ததில் இருந்த நியாயம் இந்த உலகுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதில் ’ப்ரேம்’ என்ற மேப்படியானின் பெயர் பொன்னெழுத்துக்களால் இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்தது: ‘ப்ரேதம்’.

- writerprabhudharmaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in