

ஆண்களின் கை வலிமையைக் காட்டும் காப்பும், பெண்களின் கை நளினத்தைக் காட்டும் வளையல்களும் இன்றைய ஃபேஷன் உலகில் நவீன வடிவம் பெற்றுக் கச்சிதமான பிரேஸ்லெட்டுகளாக (கையணிகளாக) வலம் வருகின்றன. டிரெண்டிற்கேற்ப மேம்பட நினைப்பவர்களுக்காக ஃபேஷன் ஆலோசகர் சவுமியா கூறும் லேட்டஸ்ட் பிரேஸ்லெட் வகைகள் இதோ:
மணிகளால் ஆன பிரேஸ்லட் (Beaded Bracelet)
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விரும்பி அணியும் வகை பிரேஸ்லெட் இதுதான். இந்த வகையான கையணிகள் பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. வாட்ச் உடனும் சேர்த்து அணிந்துகொள்ளலாம்.
இவை மலிவான விலையிலும் கண் கவர் டிசைன்களில் கிடைக்கும். பெண்கள் மல்டி கலர் மணிகளால் ஆன பிரேஸ்லெட் அணிந்தால் எடுப்பாக இருக்கும். ஆண்கள் மரத்தாலான மணிகளால் (wooden beads) ஆன பிரேஸ்லெட் அணிந்தால் கண்ணியமான தோற்றத்தைத் தரும். அதிலும் தற்போது டிரெண்டில் இருப்பது புத்தர் முகம் மற்றும் ஓம் வடிவ மணிகள் கொண்ட பிரேஸ்லெட்டுகள்தான்.
கிரிஸ்டல் மணிகளால் ஆன பிரேஸ்லெட் (Crystal beads bracelets)
இந்த வகை பிரேஸ்லெட்டுகள் ஆண்களைவிடப் பெண்களுக்குத் தான் பொருத்தமாக இருக்கும். பல வண்ணங்களில் ஜொலிஜொலிப்புடன் கிடைப்பதால் இவை பார்ட்டிகளுக்கு ஏற்ற கையணிகள்.
இந்த வகை கையணிகள் மலிவு விலையில் கிடைப்பது சிரமம். சாதாரண கிரிஸ்டல் பிரேஸ்லெட் முதல் விலையுயர்ந்த கிரிஸ்டல் பிரேஸ்லெட்வரை கிடைத்தாலும், சற்றுத் தரமான கிரிஸ்டல்களால் ஆன ப்ரேஸ்லெட்டுகள் நீண்ட நாள் கலர் மங்காமல் (fade) இருக்கும். எனவே, இந்த வகைக் கையணிகளை கவனத்துடன் வாங்க வேண்டும்.
பின்னல் பிரேஸ்லட் (Woven Bracelets)
இது ஃபேப்ரிக் (fabric) அல்லது லெதர் (lether) கொண்டு தயாரிக்கப்படும் பிரேஸ்லெட் என்பதால் மலிவான விலையில் அட்டகாசமான டிசைன்களில் கிடைக்கும். ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்ற கையணி. இவற்றைத் தனியாகவும் அணிந்து கொள்ளலாம் அல்லது நான்கைந்து பிரேஸ்லெட்டுகள் சேர்த்து அடுக்கடுக்காகவும் அணிந்து கொள்ளலாம்.
இந்த வகையில் தற்போது பிரபலமாகிவருவது நாட்டிகல் டிரெண்ட் (nautical trend) பிரேஸ்லெட்டுகள்தான். இவை ஆண்களுக்கான பிரத்யேக கையணிகள். இவை கடல் பின்னணியிலான வடிவங்கள் மற்றும் சின்னங்களைச் சேர்த்து செய்யப்படுகின்றன. அதிலும் கப்பல் நங்கூரம் வடிவில் டாலர்கள் கொண்ட பிரேஸ் லெட்டுகள்தான் தற்போதைய ஹாட் டிரெண்ட். காரணம் ஹாலிவுட் பிரபலங்கள் பலரின் தேர்வு இந்த வகை பிரேஸ்லெட்டுகள் என்கிறார் சவுமியா.
ஃபேஷன் உலகில் அழகழாய் ஆடைகள் தேர்வு செய்வது மட்டும் போதாது, ஆடைக்கேற்ற அணிகலன்கள் தேர்வு செய்வதும் அவசியம். முழுமையான நவீன தோற்றத்துக்கு உங்கள் கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள். எண்ணற்ற ரகங்களில், தரங்களில் கிடைக்கும் பிரேஸ்லெட்டுகளில் உங்களுக்கேற்ற ஒன்றைத் தேர்வு செய்து கைகளில் அணிந்து தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
டிரெண்டைத் தீர்மானிக்கும் பிரபலங்கள்
ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு டிரெண்டை செட் செய்வதும் பிரபலமாக்குவதும் சினிமாவும் சினிமா பிரபலங்களும்தான்.
“எங்க தல ரீசண்டா வந்த படத்துல இந்த மாதிரி ஸ்பேனர் பிரேஸ்லெட் தான் போட்டுட்டு இருந்தார். பார்க்கவே கெத்தா இருந்துச்சு. அதான் தேடி புடிச்சி வாங்கிட்டேன்” என்கிறார் அஜித் ரசிகர் கபிலன்.
“நான் அதிகமா இந்த நீலக் கல் பதித்த சில்வர் பிரேஸ்லெட்தான் போடுவேன். இந்த பிரேஸ்லெட்ல இருக்க டர்க்காய்ஸ் (turquoise) ரத்தினக் கல் வெற்றிய கொடுப்பதா சொல்லுவாங்க.
ஆனா நான் இந்த பிரேஸ்லெட் உபயோகிக்க காரணம், என்னோட ஃபேவரட் ஹீரோ சல்மான் கான் இதை போட்டுட்டு இருக்கிறதாலதான்” என்று புத்துணர்ச்சியுடன் சொல்கிறார் ரோஜர்.