

பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் தன் கால் படத்தை மட்டுமே சமூக வலைதலத்தில் வெளியிட்டு மாதந்தோறும் இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் வரை சம்பாதித்து வருகிறாராம். சமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் அந்தப் பெண் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
லண்டன் நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் அமெலியா. 28 வயதாகும் அந்தப் பெண், படித்து முடித்த பிறகு மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றிவர். ஆனால், அவருக்கு அந்த வேலையில் ஏனோ திருப்தி இல்லாமல் போனது. நர்ஸ் வேலைக்குப் பதிலாக என்ன செய்யலாம் என்று அவர் ரூம் போட்டு யோசித்ததன் விளைவு, ‘பிடித்ததை மட்டுமே செய்’யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
இயல்பாகவே பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய பக்கங்களில் ஒளிப்படங்களைப் பகிர்வது வழக்கம். அந்த வழியைத்தான் இவரும் தேர்ந்தெடுத்தார். ஆனால், தன்னுடைய பக்கங்களில் கால்களை மட்டுமே ஒளிப்படங்களாகப் பகிர முடிவெடுத்தார்.
தொடக்கத்தில் அந்த ஒளிப்படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. என்றாலும், போகப் போக சமூக வலைதளத்தில் அமெலியாவின் கால் படங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது. இதன் வழியாகத் தொடக்கத்தில் சிறிய தொகையும் அவருக்குக் கிடைத்து வந்திருக்கிறது.
நாளுக்கு நாள் அவருடைய ஒளிப்படங்கள் அதிக அளவில் பார்வைகளைப் பெற்றதால், வருவாயும்கூடத் தொடங்கியது. இதனால், சிறிய தொகையை சம்பாதித்தவர், தற்போது ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறார். இணையத்தில் அவர் வைரல் ஆகியும்கூட, அவருடைய முகத்தை இதுவரை வெளி உலகுக்குக் காட்டவே இல்லை.
‘விருப்பமான பணிகளைச் செய்தால் எளிதாக வருவாய் ஈட்டலாம்’ என்று தன்னிடம் கேள்வி எழுப்புவோரிடம் கூலாகப் பதில் சொல்லி வருவதையும் அமெலியா வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஆனால், எத்தனைப் பேருக்கு இது போல் சாத்தியமாகும் என்ற கேள்வி எழாமல் இல்லை.