நளி நாட்டியம் 06: சும்மா சிரிக்கத்தான் | குடும்பக் Fam

நளி நாட்டியம் 06: சும்மா சிரிக்கத்தான் | குடும்பக் Fam

Published on

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனும் வாக்கியத்துக்குள் ஒரு பெரும்பொருள் இருப்பதைப் பரம்பொருளாகவே கருதலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் இருப்பதைப் போலவே குடும்பத்துக்குள்ளும் பல குணாதிசயங்களுடன் கூடிய பிரகஸ்பதிகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. சிறு வயதிலிருந்தே அவர்களை நெருக்கமாகக் கவனித்து வந்தால், நம்முடைய சொந்த ரத்தத்திலேயே பால்டாயில், கில்பக், டிம்மட் போன்ற நற்காரியங்கள் கலந்திருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். நம்முடைய கேடுகாலத்தில் அதுவும் அவர்களுடைய சொந்த நிலத்தில் ஏகபோகமாக விளைவிப்பார்கள்.

முடிந்தது கதை: அவர்கள் முதலில்கண்வைப்பது நம்முடைய பொருளா தாரத்தில்தான். சொந்தக்காரர்களின் கண்களுக்குத் தப்பி ஒரு குண்டூசியைக்கூட உங்களால் வாங்கிவிட முடியாது. “பைக் வாங்கிருக்கானே? ஏது இவ்வளவு காசு? கள்ளநோட்டு அடிக்கானோ என்னவோ?” என்பதில் தொடங்கி நம்முடைய சொந்த வீடு வரைக்கும் அவர்களுடைய கண்ணைத் உறுத்திகொண்டே இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரையில் நம்முடைய வாழ்க்கை டைரியில் ஒரு மார்ஜின் கோடுகளைப் போலத் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பார்கள்.

“பையன் என்ன படிக்கான்? எந்த ஸ்கூல்ல சேத்துருக்கீங்க?” என்று அவர்கள் கேட்டு நாமும் ஏதாவது சிறிய பள்ளியின் பெயரைச் சொல்லிவிட்டால், அவர்களது கண்கள் மகிழ்ச்சியில் சிரிக்கும். மாறாக, ஒரு உலகளாவிய பாவனை கொண்ட பள்ளியின் பெயரைச் சொல்லிப் பாருங்கள்? இமைகளால் அழுது கடன் வாங்கியாவது செய்வினை போன்ற காரியங்களை ஏறெடுப்பார்கள். அதேபோல உங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் போதும்! முடிந்தது கதை.

பள்ளி முடிந்து கல்லூரி, அதற்குப் பின் நல்ல வேலை என்று செட்டிலாகிவிட்டால் போதும். நம் கண்ணெதிரிலேயே தங்கள் பிள்ளைகளை வசைபாடுவார்கள். “ஹிம்... நாங்களும் ஒன்ன பெத்து வச்சிருக்கோமே? உருப்புடாம ஒரு புள்ள! இருந்தா இப்புடில்லா இருக்கணும்? ஈஸியா படிச்சான்! இப்ப நல்ல வேலை கெடச்சிருக்கு!” என்று தொடங்கி, “வேற வேலையே உனக்குக் கிடைக்கலியா? எப்போ ரிசைன் பண்ணுவ?” என்பது வரைக்கும் போகும்.

பெண் பார்க்கும் படலம்: அதற்கு அப்புறம் பெண் பார்க்கும் படலத்தைதான் அவரைக்கொடி மாதிரி நீள வைப்பார்கள். இவர்களது கண்ணைத் தப்பி ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது பொக்ரான் அணுக்குண்டு பரிசோதனையில் அமெரிக்க செயற்கைக் கோள்களின் கண்ணுக்குத் தப்பி பார்ட் பார்ட்டாகக் கொண்டு போய் வெடிக்க வைத்தது போலத்தான் நீங்கள் நிகழ்த்தியாக வேண்டும்.

ஒரு பையன் தொடர்ச்சியாகப் பல பெண்களைப் பார்த்து ஒன்றுமே அமையவில்லை என்றதும் சந்தேகத்தின் பேரில் ரேண்டம் சாம்ப்ளிங் முறையில் விசாரித்ததில், அவரது திருமணத்தைத் தொடர்ச்சியாக நீட்டித்த பெருமை அவருடைய பெரியம்மாவுக்கு வந்து சேர்ந்தது. பெண் பார்க்கப் போகும்போது கூடவே போகும் அந்தப் பெண்மணி, பெண் வீட்டாரின் பக்கத்து வீட்டு போன் நம்பர்களைச் சேகரித்து வீடு திரும்பியதும் அந்த அண்டை வீட்டுக்காரர்களுக்கு போன் செய்து சொன்ன வாக்கியம் இதுதான்.

“இன்னிக்கி உங்க பக்கத்து வீட்டுக்குச் சம்மந்தக்காரவோ வந்தால்லா? அந்தப் பெயலுக்கு லேசா தலைக்கி வட்டு பாத்துக்கிடுங்க! ராத்திரியானா சத்தமா சிரிப்பான்! பக்கத்து வீட்டுல சொல்லிருங்கோ! அந்தப் பிள்ள பாவம்லா?”

அதையும் மீறி திருமணம் செய்து கொண்டீர்களானால் உங்கள் வீட்டுக்கே வந்து உங்கள் மனைவியிடம் சொல்வார்கள், “நீ வந்துதாம்மா இந்தப் பயலத் திருத்தணும்! இதுக்கு முன்ன இவங்காட்டிக் கூட்டுன கோட்டிக்காரத்தனங்கள் ஏராளம் பாத்துக்கா!” என்று சொல்லிவிட்டு உங்களிடம் திரும்பி நீங்கள் என்னவோ பத்துக் கொலைகள், இருபது கொள்ளைகள் மற்றும் சிலபல பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டதைப் போல இப்படிச் சொல்வார்கள், “சீராப் போ மக்களே! முன்னயாச்சும் ஒத்தக் கட்ட! இப்ப அப்டியில்ல பாத்துக்கோ! ஒன்னிய நம்பி ஒரு பிள்ள வந்துருக்கு பாத்தியா? பழைய கழிசடைத்தனங்களை கைவிட்டுரு!”

கொஞ்ச நாள் கழித்து உங்கள் மனைவியின் கர்ப்பம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் உங்களிடம் வந்து, “வீட்ல ஏதாச்சும் விசேஷங்கள் உண்டா? ஒங்க அம்மைக்க கைல குடுத்து வளக்குறதுக்கு எதுனா தயார் பண்ணியா? பிரச்சினை ஒனக்கா? அவளுக்கா? அங்க ஒரு டாக்டரு இருக்காரு! போயிப் பாக்கப்புடாதா?” என்று டிசைன் டிசைனாகக் கேள்விகள் கேட்பார்கள். ஊருக்குள்ளேயே நம் அருகில் குடியிருப்பார்கள். நம் வீட்டிலுள்ள ஒரு கொசு எழுப்பும் ஒலிகூட அவர்களுக்கு சப்தமாகக் கேட்கும். நீங்கள் பிச்சையெடுத்தால் மகிழ்வார்கள். நீங்கள் மகிழ்ந்தால் அழுவார்கள்.

ஒரே பவுளிதான்: நானுமே ஒரு புதிய காரை வாங்கிவிட்டு சொந்தக்காரர் ஒருவரைப் பார்ப்பதற்காகப் போயிருந்தேன். திரும்பிவரும் வழியில் அடிபம்பு ஒன்றின் அருகில் குத்தவைத்து அமர்ந்திருந்த அத்தை ஒருத்தியைக் கண்டு, “எத்தே சோமாருக்கியளா?” என்று கேட்டதும் கண்களை இடுக்கிக் காருக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, “எய்யா நீயா? ஒனக்கு எங்கள மாதிரி பாவப்பட்டவகளயெல்லாம் கண்ணுக்குத் தெரியுமா? ஆமா யாருக்க காரு இது?” என்று கேட்கவும் நான் என்னுடையதுதான் என்று சொல்லவும், அவள் மனம் கொதித்துப் போய்ச் சொன்ன வார்த்தைகள், “எப்பா! ஒரே பவுளிதாம் போலுக்கே! புதூக் காரெல்லாம் மினுங்கு?”

நான் அங்கிருந்து நகர்ந்து மூன்று நாட்கள் கழித்துத் திருமண வீடு ஒன்றிற்குப் போகும் வழியில், ஒரு பானமுற்ற ஆத்மா வந்து, என் காரில் மோதிக் குப்புற அடிக்க வீழ்ந்து தன்னுடைய நெஞ்செலும்புகளில் ஐந்தை முறித்துக்கொண்டு சாலையில் படுத்துக் கிடந்தது. என்னுடைய காரின் சக்கரங்கள் பழுதானதால் நான் அதை ஐந்தாயிரம் செலுத்தி ரெக்கவரி வண்டியை வைத்து ஒர்க் ஷாப்பில் கொண்டு போய் விட்டேன்.

இதிலுள்ள விந்தையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஒன்றைச் சொல்கிறேன். அந்த ரெக்கவரி வண்டியின் ஓனர் அன்றைக்கு அடிபம்பின் அடியில் குத்தவைத்து அமர்ந்து கண்களைப் பிடுங்கி என் வண்டியில் வீசிய அந்த அத்தையின் கணவர்தான். காரைச் சுமந்த கட்டணத்தில் ஐநூறு ரூபாய் சலுகை அளித்தார்.

- writerprabhudharmaraj@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in