நளி நாட்டியம் - 5 (சும்மா சிரிக்கத்தான்): லைக்காண்டிகளின் அலப்பறைகள்!

நளி நாட்டியம் - 5 (சும்மா சிரிக்கத்தான்): லைக்காண்டிகளின் அலப்பறைகள்!
Updated on
2 min read

முகநூலில் கஷ்டப்பட்டு பதிவுபோட்டால் அதற்கு வெறும் கை கட்டைவிரல் சிம்பலை மட்டும் அழுத்துகிறார்கள் என்று அந்த லைக் சிம்பலை அழுத்துபவர்களை மண்டையன்கள், கோம்பையன்கள் என்றெல்லாம் சிலர் திட்டுவதைப் பார்க்கும்போது மனம் பஞ்சராகிறது தோழர்களே! உண்மையில் அந்த லைக்கன்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரிகிறதா? அவர்களைச் சிலபல வகைகளாகத் தனித்தனியாகப் பிரிக்கலாம்.

வெளுத்தாண்டிகள்: இவர்கள் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். நான் உங்கள் பதிவுகளைப் பார்த்துவிட்டேன் என்று சிம்பாலிக்காகச் சொல்பவர்கள். பெரும்பாலும் ஐம்பதைத் தாண்டிய பால்குப்பி சேகர் வகையறாக்கள். இவர்களைப் பொறுத்தவரைக்கும் முகநூல் என்பது ஒரு ஆன்லைன் தினசரிப் பத்திரிகை. ஆனால், உடனுக்குடன் கேள்வி கேக்கவும் பதில் சொல்லவும் முடியும் என்று கொஞ்சூண்டு தெரிந்து வைத்திருப்பவர்கள். ஆனால், கேள்விகளோ பதில்களோ கேட்கவும் தெரியாது. ஆனால், இன்பாக்ஸுக்குள் போனால் யாருடைய மனதையாவது கவர முடியும் என்று திடமாக நம்புவார்கள். புரோஃபைலில் மேஜிக் ஜான்சன் படத்தை நீங்கள் வைத்தால், அவர்கள் உறுதியாக அதிலிருப்பது மேஜிக் ஜான்சன்தான் என்பதைக் கணித்து விடுவார்கள்.

மழுமழுத்தான்கள்: இவர்களுக்கு லைக் பட்டனில் கட்டைவிரல் சிம்பலைத் தாண்டி இன்னமும் ஆறு சிம்பல்கள் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கு மாத்திரம் இது எங்கிருந்து கிடைக்கிறது, ஒருவேளை அந்த வசதி நமக்குத் தரப்படவில்லையோ என்ற குழப்பத்தோடு அழுத்திக்கொண்டே திரிவார்கள். ஆனாலும், ஆங்கில அறிவு உச்சத்தில் இருக்கும். அவர்களது மெசஞ்சரில் போய் ’Wre r u?’ என்று கேட்டால் “வீட்டில் இருக்கிறேன்” என்பதை இப்படிச் சொல்லுவார்கள். ’Veedola irikkan!’

புளுபுளுத்தான்கள்: இவர்களுக்கு முகநூல் என்றால் என்னவென்று தெரியாது. “அடடே நமக்குத் தெரிஞ்சவங்க மூஞ்செல்லாம் இங்க இருக்கே?” என்றுதான் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி உள்ளே வந்து, “என்னடா இது பயங்கரமா இருக்கு?” என்று ஆர்வக்கோளாறில், செல்ஃபி கேமரா வரும் முன்னமே மொபைலைத் திருப்பிவைத்து செல்ஃபி படமெடுத்து அப்லோட் செய்து மார்க் ஸக்கர்பர்க்கியானைக் கொதிக்க வைத்தவர்கள். எல்லா செல்போன் கம்பெனிகளையும் தெருவில் இழுத்துவிட்டு, தயாரிப்புகளில் முன்பக்கம் இன்னொரு கேமராவை வைக்கவில்லையென்றால், இது மாதிரியான முகங்களைப் பார்த்து அச்சத்தில் மரிப்பவர்கள். இவர்களால் உலக மக்கள்தொகை எண்ணிக்கைக் குறைந்துவிட்டால் சுடுகாட்டிலா நின்று மொபைல் விற்க முடியும் என்று நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் மெருகேற்றப்பட்டன. நவீன செல்ஃபோன் தொழில்நுட்ப முன்னேற்றப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் என்றும் இவர்களை விளிக்கலாம்.

தழுதழுத்தான்கள்: இவர்கள் மிகப் பயங்கரமான சென்டிமென்டலாளர்கள். “நான் மாத்திரம் இவனுக்கு லைக் போடாமல் போனால், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே சிங்கியடிப்பானே?’ என்று பரிதாபப்பட்டு ஒரே செகன்டில் நூறு லைக்குகள் வரைக்கும் இட்டுவிட்டு உறங்கிப்போகும் நல்ல மனம் உடையவர்கள். உங்கள் அடுத்த பதிவு வரும்வரை பரிதவித்தபடியே உலவுவார்கள். இவர்களால் உலகிற்கு ஆபத்து இல்லை. என்றாலும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆபத்தானவர்கள். இவர்களுக்கு மனப்பிசகு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

களகளத்தான்கள்: இவர்கள் எப்படியென்றால் முன்னெச்சரிக்கை முத்தையாக்கள். தன்னுடைய நண்பனின் எதிரிக்கு லைக் போட்டால் நண்பன் கோபித்துக் கொள்வானோ என்று ஒரு மிகப்பெரிய ஆபத்திலிருந்து விரல்சொடுக்கும் நொடியில் தப்பிப் பிழைப்பார்கள். மேலும் யார்யார் யார்யாருக்கெல்லாம் லைக் போட்டார்கள்! யாருக்கெல்லாம் போடவில்லை! என்கிற ’Database’ இவர்களிடம் விரல்நுனியில் இருக்கும். ’மத்தவன் போட்ட போஸ்ட்டுக்கு மத்தவன் ஹார்ட்டு வுட்டுருக்கான்னா சங்கதி லேசு இல்ல கேட்டியா?’ என்றவாறே மனதுக்குள் கொதிப்பார்கள்.

“ஒனக்க மத்தவன் பீசுபுக்குல ஒரு போட்டோ போட்டாம் பாத்துக்கா! நா அசையிவனா? கண்டுக்கிடவே இல்லையே?” என்று சகபாடிகளிடம் பெருமைப்படவும் செய்வார்கள். “நா லைக்கிட்டு அவெம் பணக்காரனாவணுமா? அதுக்கு நா உட்டுருவனா?” என்று மிகவும் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். இவனுக்கெல்லாம் நா லைக்கு போட்டா என் அந்தஸ்து என்னாவும் என்றவாறே திரியும் ஆசாமிகளும் உண்டு. ஒரு ஸ்மைலியை வைத்துக்கொண்டு ஒரு உள்ளிவடைகூட வாங்க முடியாது என்பது இவர்களுக்குத் தெரியாது. இவர்களைப் பொறுத்தவரையில் லைக் வாங்குவதென்பது சொத்துவஸ்துகள் வாங்குவதைப் போலத்தான் என்று நினைப்பார்கள். அவர்கள் போடும் லைக்குகளை வங்கிகளில் செலுத்தி உங்களால் பணத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்கிற உங்களது நாசூக்கான காரியம் அவர்களுக்கா தெரியாது?

சிலுசிலுத்தான்கள்: இவர்கள் ஆண்கள் போஸ்ட்டுகளையே பார்ப்பதில்லை. பார்த்தாலும் கட்டைவிரலை உயர்த்திவிட்டுப் போய்விடுவார்கள். பெண்களுக்கு மாத்திரம் எங்கிருந்து கிடைக்குமோ அத்தனை ஹார்ட்டின்களை அள்ளித் தெளித்துவிட்டு இன்பாக்ஸுக்குள் புகுவார்கள். “நா ஒங்க போட்டோக்கு ஹர்ட்டின் உட்டென் தெரியுமா?” என்று இளித்தவாறே நிற்பார்கள். அதாவது மாமன் ஹார்ட்டின் உட்டுருக்கேன்! அதக் குடுத்து கடையில ஒரு மொழம் மல்லியப்பூ வாங்கிக்கோ! என்கிற மாதிரியான ஒரு காதல் எண்ணம். முகநூல் பட்டியலில் இருக்கும் பெண்களிடம் ஏதோவொன்றைக் குறிப்பால் நிறுவ எண்ணி இன்பாக்ஸுக்குப் போய் செருப்படி வாங்கின அங்கிள்களும் இதில் அடக்கம். “இங்கேரு! நா ஒனக்கு மாத்தரம் ஹார்ட்டின் உட்டம்னா எனக்க வூட்டுல கண்டுபுடிச்சிருவா பாத்துக்க! அதனாலதான் ஹார்ட்டின் வுடாம லைக்கு வுட்டன்!” என்று சிணுங்கும் தாத்தாக்கள், இந்த வகையறாவில் அடக்கம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in