நளி நாட்டியம் - 4 (சும்மா சிரிக்கத்தான்): ஹாரன் ஜெயராஜ்கள்!

நளி நாட்டியம் - 4 (சும்மா சிரிக்கத்தான்): ஹாரன் ஜெயராஜ்கள்!
Updated on
2 min read

‘சாலைகளில் ஏன் ஒலி எழுப்புகிறீர்கள்’ என்று இந்தியர்களிடம் கேட்டால், அவர்களின் பதில் ‘வண்டியில ஹாரன் எதுக்கு இருக்கு?’ என்று எதிர்க் கேள்விதான் வரும். ஆனால், ஒரு சிங்கப்பூர்காரர் சொன்னபோது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அப்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். சிங்கப்பூரில் எப்போதாவதுதான் ஹாரன் சப்தம் கேட்கும். அவர்கள் தேவையில்லாமல் சாலைகளில் ஒலி எழுப்புவதில்லை.

உலகிலேயே மிக மோசமான மாசு என்றால் அது ஒலி மாசுதான். அதிகபட்ச ஒலியை எழுப்பி ஒரு மனிதனின் மூளையைக் குழப்பபிவிடலாம் என்பது அறிவியல். உண்மையில் எதற்கு ஹாரன் அடிக்கிறோம் என்பதே தெரியாமல் வண்டி ஓட்டுபவர்கள் குழம்புவது ஒரு சோகமான தருணம். வண்டியில் ஹாரனை அழுத்தி ஒலியை எழுப்பினால் சாலை அகலமாக விரிந்து வழிவிடும் என்று எண்ணுவார்கள் போல!

ஹாரனில் பல சப்த வகைகள் உண்டு, பப்பாய்ங், வீல்ல்ல்ல், பம்பப்பபாம், கீவ்வ், பபபபபா,கிரீச்,கிரிங், என்று தொடங்கி வவ்வாவ்வா.....வ் என எதிரில் போவோரின் சிந்தையைக் குலைக்கும் விதமான ஒலியை எழுப்பும் உல்ஃப் ஹாரன் வரை உண்டு. எதிரில் வண்டி வரும்போது நம்முடைய இடதுபக்கம் ஹாரன் அடித்து ஓவர்டேக் செய்து நம்மைப் பதறவைத்து சாலையில் தலைகுப்புறப் பாயவைப்பது, நீளமாக டிராபிக் ஜாம் ஆகி வண்டி நின்றுவிட்டதென்றால் போதும்... ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கோவைகளால் சாலையை அதிரடிப்பது என இந்த ஒலியெழுப்பியான்கள் செய்யும் காரியங்கள் படு பயங்கரமாக இருக்கும்.

சப்தஸ்வரவாயன்மார்

நீங்கள் எத்தனைதான் ஒலியெழுப்பி விலகச் செய்தாலும்கூட சிலர் “நீங்க என்னடே ஒதுங்கச் சொல்வது? ஒதுங்கினேனா பார்!” என்று வீம்புக்குப் போய்க் கொண்டிருப்பார்கள். சிலர் நின்று கண்கள் கிறுகிறுக்குமளவுக்கு முறைத்துப் பார்த்துவிட்டு ஆட்டோ பைலட் மோடில் மாறிய விமானத்தைப் போல நடுச் சாலையில் நடந்து செல்வார்கள். நடைவண்டிக்கு ஏதடா சுக்கான் என்பதுதான் அவர்களது ஃபார்முலா. ஹாரன் அடித்தும் ஒதுங்காமல் போகும் மற்ற வாகன ஓட்டிகளைக் கண்கள் ரத்தக் கலரில் சிவக்குமளவுக்கு முறைத்துப் பார்க்கும் அதிரடி ஆசாமிகளும் உண்டு.

இப்படி ஹாரன் அடித்துக் கொல்பவர்கள் இருக்கும் நாட்டில்தான் ஆம்புலன்சுக்கு வழிவிடாதவர்களும் இருக்கிறார்கள். அத்தனை பெரிய சப்தத்தை வளிமண்டலத்தில் தூவும் ஆம்புலன்சுக்கே இக்கதியென்றால் உங்கள் ஹாரனுக்கு ஏது மரியாதை என்பதுகூட நம் ஆட்களுக்கு இன்னமும் பிடிகிட்டவில்லை. சிலர் ஆக்சிலேட்டரி லிருந்து கையை எடுத்துவிட்டு ஹாரனை நசுக்கிக் கொண்டு போவதுண்டு. பின்னே அரசுப் பேருந்துகளின் நிலைமையோ இன்னமும் மோசம். தேசிய நெடுஞ்சாலைகளில் நத்தைபோல 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதேபேருந்து, நகரத்துக்குள் வந்ததும் சிறுத்தையின் வேகத்துக்கு மாறி 80 கி.மீ. தாவி ஓட்டுநர் ஹாரனில் ஏறிநின்று கொண்டு ஓட்டுவார். சப்தமும் கர்ண கொடூரமாக இருப்பதைக் கேட்கலாம்.

நள்ளிரவில் ஆளேயில்லாத சாலையில் ஹாரன் அடித்த ஒருவர், தலையில் ரத்தம் வழிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். யாருமே இல்லாத அந்தச் சாலையில் யாருக்கு ஹாரன் அடித்தாரென்றோ, எதற்காக அடித்தார் என்றோ கேட்கலாம். பத்தடிக்கு ஒருமுறை ஹாரன் அடித்துப் பழக்கப்பட்ட அவருடைய விரல்கள், அந்த நிச்சலனத்து நடுச்சாமத்தில் அவரது ஹாரனை ’ஏ மேஜர் கார்டு’ ஒன்றில் இசைத்துவிட ’தேமே’ என்று சாலையோரத்தில் படுத்திருந்த நாய் ஒன்று சப்தம் கேட்டு பயந்து எழுந்து வள்ளென்று கடித்தது. விளைவு, ஆசாமி சென்டர்மீடியனில் முட்டிக் கவிழ்ந்து படுத்துக் கிடந்தார். ஒரு ஹாரன் சப்தம் பார்த்த பார்வை மேற்படி ஆசாமிக்கு மண்டையில் மாவுக்கட்டும், தொப்புளைச் சுற்றிலும் ஊசியுமாக ஆக்கியிருந்தது.

மிஸ்டர் ரோமியோக்கள்

பெண்கள் கல்லூரிகளின் முன்பாகக் குறிப்பிட்ட ஒரு மாணவியின் பின்பக்கமிருந்து முன்பக்கமாகவும், முன்பக்கமிருந்து பின்பக்கமாகவும் ஹாரனைத் தெறிக்கவிட்டு அனல் பறக்க வண்டியைச்செலுத்தி மூன்று வருடங்களாக ஓட்டிவந்த ‘புனிதர்’ ஒருவர், இறுதியாண்டில் அந்த மாணவியின் முன்பாகப்போய் நின்றுகொண்டு “இத்தனை காலமாக உன் பின்னால் சுற்றுகிறேனே? இன்னுமா உன்னுடைய காதல் கண்கள் அடைபட்டிருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார். அந்த மாணவிக்கு அந்த ரோமியோவை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. மேற்படி பைக்கர் தன்னுடைய அடையாளங்களைச் சொல்லவும் திகைத்துப் போன மாணவி சொன்ன பதில் இதுதான்.

“அந்த இருநூறு மைல் ஸ்பீட்ல போற கோந்தன் நீதானா? மூணு வருஷமா இந்தப் பக்கமா காலைலயும் சாயங்காலமும் ஓர் ராக்கெட் முன்னாலயும் பின்னாலுயும் போறது தெரியும்! ஆனா அந்த வண்டிய ஓட்டுனது மனுசனா ஆவியான்னு யாருக்குமே தெரியாது! இவ்ளோ ஸ்பீடா வண்டி ஓட்டினா பெத்த தாய்க்கே தன்னோட பிள்ளைதான் போவுதுன்னு தெரியாது! எனக்கு எப்புடிடா தெரியும்?” என்று சொன்னதும்தான் தன்னுடைய ஹாரனும், வேகமும் தன்னுடைய காதலைக் கிடப்பாட்டில் கிடத்தியதற்கான காரணிகள் என்று புரிந்து வருந்துவதற்கான காரணிகளாக அமைந்து போனதுதான் சோகம்.

அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ’கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக’ பாடலை ஹாரனிலேயே வாசித்துப் பழகி தம்முடைய வண்டியின் முன்சீட்டில் வழக்கமாய்ப் பயணித்த இளம் ஆசிரியையை வளைத்துக் காதல் கடிமணம் புரிந்தார். கல்யாணமாகி கொஞ்ச நாள்களிலேயே அவர் ஹாரனில் வாசிக்கக் கற்றுக்கொண்ட பாடல் இதுதான். ’சோதன தீரவில்ல! சொல்லியழ யாருமில்ல!’ ஹாரன் அடிப்பதால் நன்மை இருக்கிறதோ இல்லையோ தீமைகள் அதிகம் இருக்கிறது என்பதற்கான சான்று இதுதான் நண்பர்களே.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in