நடுவுல கொஞ்சம் பேட்டிங்கைக் காணோம்

நடுவுல கொஞ்சம் பேட்டிங்கைக் காணோம்
Updated on
3 min read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடரை இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2013இல் இதே காலகட்டத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதோடு சரி. அதன்பிறகு நடத்தப்பட்ட ஐசிசி தொடர்களில் இந்திய அணி பெரும்பாலான முறை அரையிறுதி, இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கோப்பையை வெல்லாமல் திரும்பும் சோகம் தொடர்கிறது. நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்ப என்ன காரணம்?

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியா முதன் முறையாகக் கோப்பையை வென்றிருக்கிறது. ஆக, 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, டி20 ஐசிசி உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 4 விதமான தொடர்களிலும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றிருக்கிறது. 2021, 2023 என இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றும் இந்தியா தோல்வியடைந்தது ஏமாற்றமே.

முதல் காரணம்: ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறுவதற்கு முயற்சியும் பயிற்சியும் மட்டுமல்ல, தெளிவான திட்டமிடலும் தேவை. பாரம்பரிய கிரிக்கெட்டுக்குப் பொருந்தாத டி20 போட்டிகள் போன்றவை அல்ல, டெஸ்ட் போட்டிகள். டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்கு மட்டுமல்ல, களத்தில் நீண்ட நேரம் விக்கெட்டை இழக்காமல் நிலைத்து விளையாடவும், களைப்பில்லாமல் பந்துவீசவும் கவனமான அணுகுமுறையுடன் கூடிய பயிற்சி தேவை. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புஜாராவைத் தவிர்த்து மற்ற எல்லா வீரர்களுமே ஐபிஎல்லில் பிசியாக இருந்தார்கள்.

மட்டையாளர் 10 பந்துகள் விளையாடினால் போதும். அதிரடியாக நான்கைந்து ஷாட்களை விளாசிவிட்டு அவுட் ஆனாலும் பிரச்சினை யில்லை. ஒரு பந்துவீச்சாளர் மொத்தமே 4 ஓவர்கள் வீசினாலும் போதும். இதுபோன்ற ஒரு சூழலில் 2 மாதங்கள் முழுக்க விளையாடிய வீரர்களால், எப்படி நிதானமாகவும் பொறுமை யாகவும் சூதானமாகவும் விளையாட வேண்டிய டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும்? இறுதிப் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித் உள்பட பல வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை மனதில் வைத்து ஐபிஎல் விளையாட்டைப் புறந்தள்ளினர்.

ஆனால், இந்தியாவில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மனதில் வைத்து ஒரு வீரரும் ஐபிஎல்லில் இருந்து விலகவில்லை. ஆனால், தோல்விக்குப் பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் முன்பு பயிற்சி கிடைக்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கேப்டன் ரோஹித் சர்மாவும் கூறியிருப்பது முரணாக அல்லவா இருக்கிறது.

இரண்டாம் காரணம்: கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிதான் வென்றது. அந்தப் போட்டியில் இந்தியாதான் முதலில் மட்டை பிடித்தது. டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் நான்காவது இன்னிங்ஸில் இலக்கை எட்டுவது என்பது எந்த அணிக்கும் பெரும் சவாலாகவே இருக்கும்.

போட்டியில் டாஸை வென்ற நிலையிலும், இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தபோதே இந்தியா தனக்கான முடிவைத் தேடிக் கொண்டது. பிட்சில் 6 செ.மீ. அளவு வரை வளர்ந்திருந்த புற்களை மனதில் வைத்தே இந்த முடிவை இந்திய அணி மேற்கொண்டது. அதாவது, முதல் இன்னிங்ஸை மனதில் வைத்து மட்டுமே இந்த முடிவை இந்தியா எடுத்தது. அதற்கான விலையையும் இந்தியா கொடுக்க நேர்ந்தது.

மூன்றாம் காரணம்: கடந்த 2021 சவுதாம்டனில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா என இருவரும் அணியில் இருந்தனர். வேகப்பந்து வீச்சுக்கு உதவும் சவுதாம்டனில் அந்த முடிவு தவறாகிப் போனது.

ஆனால், சுழற் பந்துவீச்சுக்கு உதவும் லண்டன் ஓவலில் அஸ்வினைக் கழற்றிவிட்டது தவறான முடிவாகிப் போனது. ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அஸ்வினும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.

மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்றால், ரவீந்திர ஜடேஜாவையே இந்திய அணி நிர்வாகம் தேர்வுசெய்கிறது. இங்கிலாந்தில் 2021இல் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோது, எல்லா போட்டிகளிலுமே அஸ்வின் பெவிலியனில் உட்கார வைக்கப்பட்டார்.

ரவிச்சந்திரன் அஸ்வினைவிட ரவீந்திர ஜடேஜா பலமான பேட்டிங் வரிசைக்கு உதவுவார் என்பது அணியின் நம்பிக்கை. ஆனால், உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அஸ்வின் போன்ற ஒரு வீரரை இந்த அளவுகோலுடன் எப்படி அணுக முடியும்?

எந்த கிரிக்கெட் மைதானமாக இருந்தாலும் எந்தத் தட்பவெப்பமாக இருந்தாலும் ஜாம்பவான்களாக விளங்கிய ஷேன் வார்னேவை ஆஸ்திரேலியாவும், முத்தையா முரளிதரனை இலங்கையும், அனில் கும்ப்ளேவை இந்தியாவும் ஒதுக்கிய வரலாறு உண்டா? அஸ்வினை மட்டும் எப்படி ஒதுக்க முடியும்? 2022இல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின்தானே இந்தியாவை கரை சேர்த்தார்.

2021இல் சிட்னியில் ஹனுமா விஹாரியும் அஸ்வினும் மாரத்தான் இன்னிங்ஸை விளையாடி, இந்தியாவைத் தோல்வியிலிருந்து மீட்டார்களே, அதெல்லாம் அணி நிர்வாகத்துக்கு ஏன் நினைவுக்கு வராமல் போனது? அணித் தேர்வில் கோட்டைவிடுவது தொடர்ந்தால் கோப்பை கனவாகவே இருக்கும்.

நான்காம் காரணம்: இந்திய டாப் ஆர்டர் வரிசை சிறப்பாக விளையாடிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பின் வரிசை வீரர்கள் சிறப்பாக \ விளையாடுவதால் இந்திய அணி வெற்றிகளைப் பெற்றுவருகிறது. டெஸ்ட் போட்டிகளில் அணி சோபிக்க, டாப் ஆர்டர் மட்டையாளர்கள் கருணையே இன்றிப் பந்துகளை விளாசித் தள்ள வேண்டும்.

அப்போதுதான் எதிரணி மனதளவில் பலவீனமாகிப் பந்துவீச்சில் தவறுசெய்வார்கள். அதற்கு வீரேந்திர சேவாக் போன்று இருக்க வேண்டும் என்பதல்ல. குறைந்தபட்சம் எந்தப் பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் துணிவிருந்தால் போதும். ஆனால், ரோஹித், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ் மென்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் தொடர்ந்து சொதப்பினால், வெற்றியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?

தோல்வி நிலையென... கடைசியாக 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதோடு சரி. அதன் பிறகு 50 ஓவர் உலகக் கோப்பை (2015, 2019 அரையிறுதிப் போட்டிகள்), டி20 உலகக் கோப்பைகள் (2014-இறுதி, 2016-அரையிறுதி, 2022-அரையிறுதி), ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (2017-இறுதி), டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021, 2023 இறுதி) என வரிசையாகத் தோல்விகள் தொடர்கின்றன.

- karthikeyan.di@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in