

உங்களுடைய அதிகப்படியான உடல் எடை குறைய வேண்டுமா? எங்கள் உடற்பயிற்சி ஆலயத்துக்கு எழுந்தருளுங்கள் என்று சுவர்தோறும் விளம்பரப் பதாகைகள் ஒட்டப்படுவதற்குக் காரணமான ஊளைச்சதைகளால் உருண்டு வழியும் நம்முடைய சக ஆத்துமாக்கள் செய்யும் துஷ்டகாரியங்கள் சொல்லி மாளாது.
கல்யாண வயதில் தங்களுடைய மணவாழ்வுக்குத் தடையாக இருப்பது தம்முடைய பூத உருவம்தான் என்று தம்முடைய உடல் எடைகண்டு பதைத்துத் தெரிந்துகொள்வோர்தாம், இவ்வுலகின் முதல் ஞானிகள் என்பது அவர்களுக்குத் தெரியாது. உடனடியாக அவர்கள் உடல் எடைகுறைப்பை முகாந்திரமாகக் கொண்டு மேற்கொள்ளும் காரியங்கள்தாம் அவர்களைச் சுற்றியுள்ளோரைப் பதைபதைப்புக்கு ஆளாக்கும்!
ஜிம்மர்களின் ஜித்து: உசிலமணி சைசிலிருந்து ஓமக்குச்சி நரசிம்மன் சைசுக்கு மாறுவதை மிகவும் எளிய காரியமாக எண்ணுகிறார்கள் மேற்படியான்கள். முதல் நாள் ஜிம்முக்குப் போய் சாகசங்களை மேற்கொண்டு அக்குள்களிடையே இடைவெளி விழுந்து, கால்கள் இரண்டும் கிழக்கும் மேற்குமாக விரிந்து புஜங்கள் வான்நோக்க வெளிவரும்போது தங்களுடைய உடலின் எடை சரிபாதியாகக் குறைவதாக நினைக்கிறார்கள். ஒரு அர்னால்டின் மனப்பான்மையோடுதான் வீட்டுக்குப் போவார்கள்.
மறுநாள் காலையில் ‘பாட்ஷா’ படத்தில் ஆனந்த்ராஜிடம் கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்ட மாணிக்கம் ரஜினியாகப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கும்போது சகமனிதர்களாக அவர்கள் மீது நாம் பரிதாபம் கொள்ளலாமே ஒழிய, இளிப்பது தவறு.
சிலர் காலையில் அருகில் உள்ள மைதானங்களிலோ காலிமனைகளிலோ ஓடி, மறுநாள் காலையில் கால்களில் புத்தூர் கட்டோடு நடந்து செல்வதைக் காண முடியும். இவை அனைத்தையும் காற்றைப் போலக் கடந்து, மறுநாளும் ஜிம்முக்கோ மைதானத்துக்கோ சென்றுவிடுபவர்கள் பாக்கியவான்கள்.
ஓடுதளத்தில் ஓடிக் களைத்து வெளியேறி, களைப்பில் டீக்கடைகளில் அமர்ந்து நான்கு முட்டை போண்டாக்களையும், ஆறு உளுந்த வடைகளையும் விழுங்கிவிட்டு வீட்டுக்குச் செல்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள்.
அதிகாலையில் அருகம்புல் சாறு தேக ஆரோக்கியத்துக்கு நல்லது என்று யாராவது சொல்லியிருப்பார்கள். அதன்பேரில் நான்கு நாள்கள் மூச்சைப் பிடித்துப் பேதிக்கட்டு வந்தாற்போல முகத்தை வைத்துக்கொண்டு குடிக்கும் பிரகஸ்பதிகள் உண்டு. ஆனால், ஐந்தாம் நாளில் அருகம்புல் என்று ஒருவகைப் புல், இந்தப் பூமியில் இருக்கிறதா என்று எண்ணுமளவில் அருகம்புல் குறித்த அறிவு அருகிப் போய்த் திரிவார்கள். உடல் மெலிந்தால் ஆடைகள் பருத்துவிடுமே, புதிதாகக் கொள்முதல் செய்யவேண்டுமே என்ற பயத்தில் உடற்பயிற்சியைக் கைவிடுபவர்கள், இந்தப் பூமியின் எடையைக் கூட்டுபவர்கள் என்னும் ஆபத்து நம்மில் பலருக்குத் தெரிவதில்லை!
வீட்டு ஜிம்மர்கள் என்றொரு சுயவியப்புக்குழு உண்டு. வெளி ஜிம்மில் சென்று மற்ற ஜிம்மர்களின் முன்பாக நின்று, தங்கள் தொப்பையைக் காட்டி நகைப்புக்குள்ளாகி, தங்களுடைய கட்டுமஸ்தானக் கட்டுடலை வீட்டுக்குள்ளாகவே கட்டமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இவர்கள். பாலைக் குடிக்கவா, பன்னை விழுங்கவா என்று கடைசியில் புரோட்டீன் பவுடர்களை டப்பா டப்பாவாக வாங்கி சகட்டுமேனிக்கு தின்று, வயிறு பஞ்சரான ஆசாமிகளும் உண்டு.
ஆயிரக்கணக்கில் காசைக்கொட்டி டிரெட்மில் வாங்கி, நாலு நாள் அதன் மீதேறித் தவழ்ந்துவிட்டு, எதற்கு அநாவசிய கரென்ட் செலவு என்று சொல்லி அதன் மீது துணியைக் காயப்போடுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கர்லாக் கட்டைகளை வாங்கிச் சுற்றி கழுத்தில் போட்டுக்கொண்டு ஆம்புலன்சில் போனவர்கள்.
வெயிட் தூக்கும் டம்பெல்சுகளை வாங்கி வீட்டில் வைத்து வெறுமனே அதைப் பார்த்துக்கொண்டிருந்து ‘அதன்போக்கில் இருக்கிறதே பாவம்! வாயில்லா ஜீவனன்றோ’ என்று அதன்மீது பரிதாபம் பிறந்து அவற்றை கிரைண்டருக்கு அடைகொடுப்பவர்கள் என்று இவர்கள் செய்யும் தீமைகள் அநேகம்.
தொப்பைத் தேய்ப்புக் குழு: ‘இது வளர்ந்ததே எனக்குத் தெரியாது புரோ!’ என்று தொப்பையைத் தடவிக்கொண்டு அலையும் தொப்பையர்கள் செய்யும் கொடூரங்களைப் பார்த்தால் தலைசுற்றிவிடும். தரையில் படுத்துக்கொண்டு வானத்தில் கால்களால் பெயின்ட் பூசுவது, இடுப்பை தெற்கும் மேற்குமாக மாற்றி மாற்றிச் சுற்றி வளைந்தவாறே நடந்து வருவது, கவிழ்ந்து படுத்துக்கொண்டு வியந்து ‘அடடே இந்தப் பூமிதான் எத்தனை அழகாயிருக்கிறது?’ என்று சொல்லி தரைக்கு மூக்கால் முத்தமிட்டு முகத்தில் குருதியைப் பூசிக்கொண்டு வருவது போன்ற இவர்களது கஷ்டங்களைத் தொப்பையற்றவர்கள் புரிந்து கொள்ளாமலிருப்பதுதான் சங்கடம்.
அதிகாலையில் குழுவாக வாக்கிங் செல்லும் பெண்டிரால் வரும் சல்லியங்கள் வேறு வகை. வருமானவரித் துறையினர் அவர்களை அணுகினாலே யார் வீட்டில் எத்தனை கிலோ தங்கம் இருக்கிறது என்பதைக் கேட்டறிந்து கொள்ளுமளவுக்கு பங்கு வைக்க அவர்களிடம் பருப்பொருட்கள் இருக்கையில் பிஸ்கோத்து உடல்பருமன் எம்மாத்திரம்? ஒல்லிப்பிச்சான்கள் நிலைமை இன்னும் பரிதாபத்துக்குரியது.
தங்கள் உருவம் வளருமெனில் எதையும் தின்னத் தயாராவார்கள். ரொம்ப ஒல்லியான தேகத்தையுடைய ஒரு பயலிடம், யாரோ ஒருவர் ஒரு மாத்திரையைத் தின்றால் உடல் பருமனாகும் என்று சொல்லி, ஒரு மாத்திரையைப் பரிந்துரைத்திருப்பார்.
அதை வாங்கித் தின்ற அந்தப் பயல் ஒரே மாதத்தில் பாராசூட் போல ஊதுவான். ஊசியால் குத்தினால் வெடித்துவிடும் அளவில் வீங்கி விறுவிறுத்துப்போன மேப்படியானை அவனது பெற்றோர் மருத்துவரிடம் கூட்டிச் செல்வர்.
மருத்துவர் விசாரிக்கவே நடந்திருந்த விபரீதம் எல்லோருக்கும் தெரியவரும். பொடியன் வாங்கித் தின்ற மாத்திரை கிட்னி செயலிழந்தவர்கள் தின்ன வேண்டிய ஸ்டீராய்டு மாத்திரை. அதுவும் வெறும் முப்பது பைசா விலையுள்ளது. உயிரைவிடவும் உடல் எடைதான் முக்கியம் என்று எண்ணினால் இதுதான் கதி.
- writerprabhudharmaraj@gmail.com