காதலரின் நண்பர்களுடன் நட்பு நல்லதா?

காதலரின் நண்பர்களுடன் நட்பு நல்லதா?
Updated on
1 min read

ங்கள் காதலரின் நண்பர் உங்களுக்கும் நண்பரா? அப்படியானால், உங்கள் காதலரின் நண்பர்களுடன் பழகுவதில் எந்த அளவுக்குக் கவனமாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அது உங்களுக்கும் உங்கள் காதலருக்குமான உறவை மேம்படுத்தும். காதலரின் நட்புவட்டத்துடன் பழகுவதற்குச் சில வழிமுறைகள்:

ஒருவேளை, நீங்கள் சோஷியலாக இருப்பதை விரும்பாத நபர் என்றால், உங்கள் காதலரின் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வு நிச்சயம் கடினம்தான். இதுவே நீங்கள் ‘எக்ஸ்ட்ரோவேர்ட்’ நபர் என்றால் இந்தச் சந்திப்பு எளிதானதாக இருக்கும். முதல் சந்திப்பைக் கடந்துவிட்டால், உங்கள் காதலரின் நட்பு வட்டத்தைப் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். அதன் பிறகு நடக்கும் சந்திப்புகள் அவர்களை உங்கள் நண்பர்களாகவும் மாற்றிவிடவும் வாய்ப்பு உண்டு.

மற்ற உறவுகளைவிட நட்பு நீண்ட காலத்தைக் கொண்டது. உங்கள் காதலருக்கு அவருடைய நண்பர்களை நீண்ட காலமாகத் தெரிந்திருக்கலாம். உங்கள் காதலர் உண்மையிலேயே உங்களைப் பற்றி சீரியஸாக இருக்கிறார் என்றால், முதலில் உங்களை அவருடைய நட்பு வட்டத்தில்தான் அறிமுகப்படுத்துவார். இந்த அறிமுகம்தான் உங்கள் உறவுக்கான நீண்ட கால அடித்தளத்தை அமைப்பதற்கான அறிகுறி. இதை மனதில்கொண்டு, அவருடைய நண்பர்களை உங்கள் நண்பர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.

நண்பர்கள் எப்படியிருந்தாலும் நண்பர்கள்தான். உங்கள் காதலரிடம் அவருடைய நண்பர்களின் நடவடிக்கைகளைப் பற்றித் தொடர்ந்து குறை சொல்லாதீர்கள். அது நிச்சயம் உங்கள் உறவிலும் பிரதிபலிக்கும். அவருடைய நண்பர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது வித்தியாசத்தை கண்டாலோ தவறாகத் தோன்றினாலோ உடனடியாக அதை உங்கள் காதலரிடம் சொல்ல வேண்டாம். சில வாரங்கள் காத்திருங்கள். ஏனென்றால், நீங்கள் அவசரப்பட்டுக்கூட அவருடைய நட்பு வட்டத்தைப் பற்றிய தவறான முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காதலருடைய நட்புவட்டம் பற்றிய சிக்கல் தொடர்ந்து உங்களுக்கு இருந்தால், அதை உங்கள் காதலரிடம் மனம்விட்டுப் பேசலாம். அது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.

உங்கள் காதலரின் நட்புவட்டம் உங்களுக்கும் உங்கள் காதலருக்குமான ‘குவாலிட்டி டைம்’மை முற்றிலும் எடுத்துக்கொள்கிறதா? அப்படியானால், அடிக்கடி நட்பு சந்திப்புகளை தவிர்க்கலாம். ஆனால், அதேநேரம் உங்கள் காதலரை அவருடைய நண்பர்களைச் சந்திக்கவே கூடாது என்று கட்டுப்பாடெல்லாம் விதிக்காதீர்கள். இந்த நட்பு சந்திப்புகள் உங்கள் காதலரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவும் என்பதையும் மறக்க வேண்டாம்.

ஒருவேளை, உங்களால் உங்கள் காதலரின் நட்பு வட்டத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அதைப் பற்றி உங்கள் காதலரிடம் தெளிவாகப் பேசிவிடுங்கள். அவர்களுடனான சந்திப்புகளையும் குறைத்துக்கொள்ளலாம். ஆனால், உங்கள் காதலரைப் பற்றித் தெரிந்துகொள்ள அவருடைய நண்பர்களைவிட வேறு யாரும் உங்களுக்குப் பெரிதாக உதவ முடியாது. அதனால், அவர்களுடன் நட்பு பாராட்ட உங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்யுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in