

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிப்பட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிப்படங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ‘என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்தத் திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை அவர் உருவாக்கி இருக்கிறார்.
இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம்தான். தன்னுடைய சிறுவயதுப் படங்களில் தன்னுடைய இப்போதைய தோற்றத்தை போட்டோஷாப் மூலம் அழகாக ஒருங்கிணைத்திருக்கிறார். அதிலும் சிறு வயது போலவே உடைகளை அணிந்து கொண்டு ஒரே படத்தில் சின்ன பையனாகவும், பெரிய இளைஞனாகவும் அவர் காட்சி அளிக்கிறார். ஒளிப்பட ஆல்பங்களை வைத்துக்கொண்டு அந்த நாள் படங்களை புரட்டியபடி நிகழ்காலத் தோற்றத்தை ஒப்பிடுவது சுவாரசியமானதுதான் அல்லவா? அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வகையில், கடந்த கால படத்திற்குள் இப்போதைய தோற்றத்தை இடம்பெற வைத்திருக்கிறார் நிக்கர்சன்.
இணைய முகவரி: https://www.conornickerson.com/en/projects/childhood