

ஆப்பிள் நிறுவனம் சார்பில் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகமாகியுள்ளது. அடுத்த ஆண்டு சந்தைக்கு வர உள்ள இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2.89 லட்சமாம். இந்த ஹெட்செட்டின் சிறப்பம்சங்கள் குறித்தும், அதிகப்படியான விலை பற்றியும் சமூக வலைதளத்தில் பகடிகள் உலா வருகின்றன.
இந்த விலை உயர்ந்த ஹெட்செட்டை வாங்க இரண்டு கிட்னிகளை விற்றால்கூட போதாது என்றும் வங்கிக் கணக்கே அரை லட்சத்தைக்கூட தொட்டதில்லை என்றும் கலாய்த்து வருகிறார்கள். ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு பொருளை அறிமுகப்படுத்தும்போது அவற்றின் விலை உயர்ந்து காணப்படுவது புதிதல்ல. அதுபோல சுவாரசியமான மீம்ஸ்கள் உலா வருவதும் வழக்கமாகிவிட்டது.
இதென்ன புது புரளியா இருக்கு? - “இந்தந்தப் பெயருக்கு இதுதான் பலன்” என கார்த்தி முதல் செல்வா வரை விதவிதமாக ஜோதிடம் சொல்லி இணைய உலகை பீதிக்குள்ளாக்கியிருக்கிறார் ஒரு ஜோதிடர். செல்வாவுக்கு செல்வமும், ரமேஷ், சுரேஷ் என ‘ஷ்’ ஒலியில் முடியும் பெயர்களுக்கு சனியும் இருப்பதுதான் ‘டிசைன்’ எனப் பேசியிருக்கிறார் அவர்.
கார்த்தி எனும் பெயர் உள்ளவர்களுக்கு லேட்டாகத்தான் திருமணம் ஆகும் என்று இந்தப் பெயருடைய 90ஸ் கிட்ஸ்களை அலறவிட்டிருக்கிறார். இதனால், நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களாக வெளியிட்டு கும்மி எடுத்து வருகின்றனர். கடந்த வாரம் ‘பிஸ்கட் பரிகார’த்தைத் தொடர்ந்து இந்த வாரம் ‘பெயர் ஜோதிடம்’ சமூக வலைதளத்தில் வைரலானது.