

பைக் என்பது ஒரு உன்னதத் திருப்பலிக்கான முகாந்திரம். ஆக்சிலேட்டரைத் திருகுவது எளிது. பிரேக்கைப் பிடித்து வண்டியை நிறுத்துவது கடினம் என்பது பிடிபடுவதற்குள்ளாகவே சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவுக்குள் படுத்துக் கிடப்பதுதான் விந்தைகள் நிறைந்த இயற்பியல்.
தற்சமயம் அதிகம் சம்பாதிப்போர் எலும்புமுறிவு மருத்துவர்களும்; மூளை, நரம்பியல் நிபுணர்களும்தாம். இவர்களுக்கும் மோட்டார் வாகன உற்பத்திக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால், மேற்கண்ட இரண்டு துறைகளையும் ஒரே நேர்கோட்டில் இணைப்பவர்கள், சாலையில் அசாத்தியங்களை நிகழ்த்தும் கோஞ்சட்டைகள் எனப்படும் பைக்கர்கள்.
கவசம் முக்கியம் குமாரு: கண்கள் மாத்திரம் வெளியே தெரியும் அளவிலான கோமணம் போன்றவொரு சாதனத்தால் தலைமண்டையைப் பொதிந்து, அதற்கு மேலாக ஓணானின் முதுகில் கிடக்கும் செதில் போன்ற எதிரில் வருவோர் மீது மோதினால் நூற்றுக்கணக்கான தையல்களைப் போடுமளவிலான ஹெல்மெட்டை மாட்டுவார்கள்.
இரண்டு கைகளிலும் சாக்ஸ் அணிந்து பைக்கர் கிளவுசுகள் எனப்படும் கைகள் வெந்துபோகுமளவிலான வென்டிலேட்டர்களால் பொதிந்து, இந்தக் கொதிக்கும் வெப்பத்திலும் ரைடர் ஜாக்கெட்களை அணிவார்கள். காஷ்மீரில்கூட அப்படி ஜாக்கெட் அணிவார்களா என்பது சந்தேகம்தான்.
இதோட விட்டுடுவேனா என்பதுபோல இடுப்பின் கீழ் கவச அணிகலன் எனப்படும் ’Abdomen Guards’களை அணிந்து, அதன்மேல் உள்ளாடை சூடி ரைடர்காக்கீஸ் எனப்படும் முழுக்கால் கவசங்களை அணிவார்கள். இரண்டு கால்முட்டிகளின் பாதுகாவலனையும் அணியத் தவருவதில்லை. பிறகு காலுறையை மாட்டி அதன் மீது இரண்டு பூட்சுகளை மாட்டிக்கொள்வார்கள். மாடுகளே வியக்குமளவுக்கு தோல் பொருட்கள் இவர்களது உடலில் அப்பிப் பிடித்திருக்கும். இப்படியாகக் கிளம்பி லே, லடாக் போன்ற குறுகிய தூரப் பயணங்களுக்குப் போவோர் உண்டு. பைக்கர் பாலசுப்ரமணியம் மாதிரி ஆட்கள் சந்திரமண்டலத்துக்குச் செல்லும் கெட்டப்பில் நெடும்பயணமாகப் புறப்பட்டு, மாவு திரிக்க ரைஸ்மில்லுக்குச் செல்வதும் உண்டு.
சந்திர மண்டலப் பயணம்: பாலா என்கிற பாலசுப்ரமணியம் என்கிற சகோதரனை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஏன் பைக்கோடு பிறக்கவில்லை என்று கேட்கும் அளவுக்கு வல்லமை படைத்த பாலா சில ஆண்டுகளுக்கு முன்னர் யமஹா FZ என்னும் வண்டியை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி அதில் ஜீபியெஸ் எனப்படும் அகில உலக வரைபடத்தெளிப்பான், திசைமானி, பாகைமானி, ரேடியோ, ஆன்டெனா, மொபைல் சார்ஜர் எனச் சகல காரியங்களைச் செய்து மேலும் பல லட்சங்களை விழுங்கி பெட்ரோல் டேங்க் முதற்கொண்டு சகலத்தையும் வண்ணமயமாக்கினார். அதைப் பல்லாயிரம் முறை மாற்றியடித்துத் தன்னுடைய வண்டியையே யாருடைய வண்டி எனக் கேட்டுவிடும் அளவுக்குச் சல்லியப்படுத்தினான்.
பெல்ஜியத்தில் பல வர்ணங்கள் மாறும் அன்னை மாதா சிலையைப் போல “இன்னைக்கி பாலா வண்டி என்ன கலர்ல வருமோ தெரியலையே?” என்று ஊர்க்காரர்கள் தங்கள் நெற்றியில் ஒற்றை ரூபாய்த் துட்டை ஒட்டி விடுமளவுக்கு ஊருக்குள் மரண பயத்தை விதைத்திருந்தான். வருகிற காசையெல்லாம் வண்டிக்கு வீசியதைக் கண்ட பாலாவின் அம்மா ஒருநாள் திருவாய் மலர்ந்ததோடு, பாலாவின் வர்ணமாற்று வண்டிச்செலவு முற்றுப் பெற்றது. பைக்கர் பாலாவின் அம்மா திருவாய் மலர்ந்த வாசகங்கள் கன்னியாகுமரியின் வள்ளுவர்ப் பாறையில் என்றாவது ஒருநாள் பொறிக்கப்படும். அவர்கள் பாலாவை நோக்கி எய்த அம்புகள் இவைதான்:
“எப்போ பாலசுப்பிரமணியம்! அப்புடியே ஒரு கிரைண்டரையும் மிக்ஸியையும் வாங்கி வண்டியில செட் பண்ணிட்டா ரைஸ்மில்லுக்கு அலையவேண்டிய பெட்ரோலு செலவு மிச்சமாவும்லா?”
இப்படியாக பைக்கர்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. தற்கொலைப் படைகள் எனப்படும் சுயகொலைமுனைவோர். இவர்கள் பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் நீக்கம்பு எடுத்து அதிவேகமாக வண்டிகளைச் செலுத்தி, வளைவுகளில் சென்டர்மீடியனில் மோதி மரிப்பார்கள். அது தற்செயலான நிகழ்வுதான் என்பதை உணரும் முன்னரே அவர்கள் சிவன்பாதம் அடைந்து விடுவதால் அந்தக் காரியம் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரியாது.
2. ‘Accidental Prone Zone Guys’ என்றழைக்கப்படும் விபத்து உற்பத்தியாளர்கள். இவர்கள் சாலைகளில் விபத்துகளை உருவாக்கி, மனிதகுலத்தின் எண்ணிக்கையைக் குறைக்கப் பூமிக்கு வந்த உத்தமர்கள். இவர்கள் சாலையில் குப்புற அடித்து உருண்டு ஆம்புலன்சில் ஏறி மருத்துவ மனையில் போய் மருத்துவர்களிடம் உடைந்து போன எலும்புகளின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு வாங்கிவிட்டு வெற்றிக்களிப்போடு அறுவையரங்கத்திற்குள் புகுவார்கள். இவர்களால் இடிபட்டோர் மரித்து, அன்னாரது பூதவுடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து, அமரர் ஊர்தியில் ஏற்றி சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும்.
பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல! - டுக்காத்தி, புக்காட்டி, கேட்டியெம், நிஞ்சா, ஹயபூசா, ஹயாபூசாதபூஷா என்றெல்லாம் இந்தியச் சாலைகளுக்குச் சற்றும் சம்மந்தமில்லாத மேற்படி வண்டிகளின் பெயரைக் கேட்டாலே குலைபதறிவிடும். சைலன்சர் என்கிற ஒன்றின் பெயர்க்காரணிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத அதீத அளவில் கதறி சாலையில் போவோரைப் பதற வைக்கும் புகைபோக்கிகள்தான் இதன் சாராம்சமாகும். கூ.......குர்ர்..........ஊவ்வ்....பிஸ்க்க்.... என்றெல்லாம் ஒவ்வொரு வேக மாறுபாட்டுக்குத் தகுந்தாற்போல இசையமைக்கும் இதன் டிசைன்கள் மனிதகுலத்துக்கு அப்பாற்பட்டவை என்பதுதான் வியப்புக்குரிய காரியம்.
தோலப்பன்மார்கள் என்று இன்னொரு வண்டியோட்டிக் குழுவினருண்டு. தலையில் ஹெல்மெட் நிற்காமல் ஆடிக்கொண்டிருக்கும். இவர்கள் விழுவதற்கு முன்னர் ஹெல்மெட் கீழே விழுந்துவிடும். தான் ஓட்டிச் செல்லும் வண்டி என்ன, அதன் திறன் என்ன, தாம் எங்கே பயணப்படுகிறோம் என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது.
வலது பக்க இண்டிகேட்டர் போட்டு இடப்பக்கம் திரும்புதல், சாலையில் ஒட்டியிருக்கும் முழு இரவு ஜெப போஸ்டர்களை வாசித்தவாறே எதிரில் வரும் லாரியில் மோதி பரலோக ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் ரிடையர்மென்ட் காசில் வாகனம் வாங்கியோட்டும் அற்புதத்தின் ஆத்துமாக்கள்.
சகோதரியின் மகனொருவன் பைக் வாங்கித் தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று அடம்பிடித்ததை அடுத்து பஜாஜ் டொமினோர் என்றொரு 600CC பைக்கை வாங்கி அருளினாள். வாங்கின முதல் வாரத்திலேயே சாலையில் அதிவேகத்தில் செலுத்தி ஒரு பசுமாட்டை இடித்ததோடு நில்லாமல் மின்கம்பத்தில் மோதி ஐந்து நாட்கள் ஆஸ்பத்திரியில் படுத்து, இருபது லட்சங்களை விழுங்கிவிட்டு ஆறாம் நாளில் மரித்துப்போனான். பார்த்தவுடன் நெஞ்சடைக்கும் அந்த டோமினோர் பைக்கின் விளம்பர வாசகம் இதுதான், Don’t Hold Back.
- writerprabhudharmaraj@gmail.com