

அ
ன்புக்குரியவர்களுக்குப் பிறந்தநாள், திருமண நாள் என்றால், வழக்கமான பரிசுகளைப் பரிசளிப்பதை இன்று யாரும் விரும்புவதில்லை. புதுமையான பரிசுகளையே விரும்புகிறார்கள். அந்தச் சிறப்பான தருணங்களை மேலும் சிறப்பானதாக மாற்றும் புதுமையான பரிசுகள் இன்று பலவும் வந்துவிட்டன. அப்படிப்பட்ட புதுமையான பரிசுகளில் ஒன்றுதான் ‘மினியேச்சர்’ பொம்மைப் பரிசு. அன்புக்குரியவர்களை பொம்மையாக மாற்றித் தரும் புதுமைப் பரிசு இது. இந்தப் புதுமையான பரிசுகளைத் தேடி அலைபவர்களுக்காக உதவுகிறது சென்னையைச் சேர்ந்த ‘மை க்யூட் மினி’ (My Cute Mini) நிறுவனம்.
கலை மீது உள்ள ஆர்வத்தால் இந்நிறுவனத்தை சென்னையில் ஆரம்பித்து நடத்திவருகிறார் ஸ்ரீ ஹரி சரண் என்ற இளைஞர். கணினி அறிவியலில் பொறியியல் படித்து முடித்த அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். ‘மை க்யூட் மினி’ நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காகப் பணியைவிட்டு விலகியிருக்கிறார்.
“பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே கலை தொடர்பான எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொள்வேன். ஓவியம் தீட்டுவதும் சிற்பம் செதுக்குவதும் எனக்கு எப்போதும் பிடிக்கும். தொடக்கத்தில்,எங்கள் குழுவினர் உள் அலங்கார வடிவமைப்புக்கான ஓவியங்கள், சிற்பங்கள் செய்தோம். அதன்பிறகுதான், வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘மினியேச்சர்’ உருவ பொம்மைகளைத் தயாரிக்கும் யோசனை வந்தது. இந்த ‘மினியேச்சர்’ பொம்மைகளைச் செய்வதற்குச் சரியான பொருளைத் தேடிக்கொண்டிருந்தோம். சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, செயற்கைப் பீங்கான் (சிந்தட்டிக் செராமிக்) மூலம் பொம்மைகளைச் செய்யத் தொடங்கினோம். அவற்றை ஃபேஸ்புக்கில் அறிமுகம் செய்தவுடனே நல்ல வரவேற்பு கிடைத்தது” என்கிறார் ஸ்ரீ ஹரி சரண்.
இதற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, முழுநேரமாகத் தன் கல்லூரி நண்பர் பிரபாகரனுடன் சேர்ந்து ‘மை க்யூட் மினி’யை ஆரம்பித்திருக்கிறார் இவர். வெளிநாடுகளில் இயந்திரத்தில் செய்யப்படும் இந்த ‘மினியேச்சர்’ உருவ பொம்மைகளை இவர்கள் கைகளால் செய்கின்றனர். அதனால், இவர்களுடைய தயாரிப்புகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஒரு பொம்மையைத் தயாரிக்க 10 நாட்கள்வரை இவர்கள் எடுத்துகொள்கிறார்கள். 2014-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை சுமார் 2 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக் வழியாகவே இவர்களைத் தொடர்புகொள்கிறார்கள்.
விருப்பமானவர்களின் ஒளிப்படங்களைக் கொடுத்தால், 7 அங்குலம், 9.5 அங்குலம், 1 அடி என மூன்று விதமான அளவுகளில் பொம்மைகளைச் செய்துகொடுகிறார்கள். மண மகன், மணமகள் உள்ளிட்ட விதவிதமான பொம்மைகளைப் பலரும் இவர்களிடம் விரும்பி வாங்குகிறார்கள். பொம்மையின் விலை 4,250 ரூபாய் முதல் 8,250 ரூபாய்வரை உள்ளது.
அழகான மினியேச்சர் பொம்மைகளைக் காண: https://www.facebook.com/MyCuteMini/